விவேக சிந்தாமணி
**********************
54. மயில்குயில் செங்காலன்னம் வண்டுகண் ணாடிபன்றி
அயிலெயிற் றரவுதிங்க ளாதவனாழி கொக்கோ
டுயரும்விண் கமலப்பன்மூன் றுருகுணமுடையோர் தம்மை
இயலுரு புவியோர்போற்று மீசனென் றெண்ணலாமே.
மயிலைப்போல் முறைமை, குயிலைப்போல் மதிநுட்பமும் இனந்தழுவிக்கொள்ளும் குணமும், அன்னத்தைப்போல் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ளும் குணமும், வண்டைப்போல் உயர்ந்தவற்றை மட்டுமே நாடும் குணமும், கண்ணாடிபோல் எதையும் ஒளிக்காது மெய்யே பேசும் குணமும், என்ன தடை வந்தாலும் அதைக் கடந்து சேருமிடத்தை எப்படியும் அடையும் பன்றியின் குணமும், சத்தியத்துக்குக் கட்டுப்படும் பாம்பின் குணமும், சந்திரனைப்போல் தமக்குரியாருக்கு குளுமையும் இனிமையும் தரும் குணமும், சூரியனைப்போல் தமக்குரியாரை அஞ்ஞானமாம் துயிலில் இருந்து எழுப்பும் குணமும், கடலைப்போல் சுற்றந்தழுவுதலையும் ஆணை கடவாத் தன்மையும், கொக்கைப்போல் பொறுமை காத்துத் தன் காரியத்தில் குறியாயிருந்து முடிக்கும் குணமும், ஆகாயத்தைப்போல் களங்கமற்று அளந்தறிய முடியாத அறிவு உடைமையும், தாமரை மலர்போல் தமக்குரியாருக்கே முகமலரும் கற்புடைமையும் பொருந்தியவரை உலகத்தவர் போற்றும் இறைவன் எனக் கூறலாம்.
Monday, December 31, 2007
54. மயில்குயில் செங்காலன்னம்
Posted by ஞானவெட்டியான் at 8:09 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment