Friday, December 28, 2007

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்-2

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங்

கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான் - அந்தோ

திருமாது சேர்மார்பன் தேர்பாகற் கன்பு

தருமால் பகழிக்கூத் தன்.


திருமாது = இலக்குமி
மால் = அழகு, பெருமை

இலக்குமியைத் தன் மார்பில் சுமந்திருக்கும் திருமாலே, அருச்சுனனுக்குத் தன் அன்பை ஈந்து தேர் ஓட்டிய பெருமாளே! பகழிக்கூத்தனாகிய நான், திருச் செந்தூரில் வாழும் செந்தமிழுக்கு வாய்த்த கந்தப்பெருமானுக்குப் பிள்ளைத் தமிழ் எழுதியுள்ளேன்.

அவையடக்கம்

அத்தனையும் புன்சொல்லே யானாலும் பாவேந்தர்

எந்தனையுங் கண்டுமகிழ்ந் தெய்துவார் - முத்தி

புரக்குமரன் தந்த கந்தன் பூணணிமுந் நான்கு

கரக்குமரன் பிள்ளைக் கவி.


புன்சொல் = எளிய சொல்
அத்தனையும் = முழுமையும்
முத்திபுரக்குமரன் தந்த = முத்திதரும் அரன் தந்த

முத்திதரும் அரன் பெற்றவன் கந்தன்; அணிகலன்கள் பூண்ட பன்னிருகரத்தையுடையவன் குமரன். இத்தகைய குமரன்மீது யான் எழுதிய பிள்ளைத் தமிழ் முழுமையும் எளிமையான சொற்களாயிருப்பினும், பாவேந்தர்கள் என்னை எள்ளிநகையாது கண்டு மகிழ்வர்.

நூற்பயன்

மருநாள் மலர்ப்பொழில் உடுத்ததட மெங்கும் அலை

வாய்கொழித் தெறியுமுத்தை

வண்டலிடும் எக்கர்புடை சூழ்திருச் செந்தில்வரு

மயில்வா கனக்கடவுளெங்


மரு = மணம்
நாள் மலர்ப்பொழில் = அன்றலர்ந்த பூக்களையுடைய சோலை
தடம் = தடாகம், குளம்; இங்கே கடல் எனக் கொள்ளல் வேண்டும்.
வண்டல் இடும் = மகளிர் விளையாடும்
எக்கர் = மணல்மேடு
வாகனம் = ஊர்தி

மணம்வீசும் அன்றலர்ந்த பூக்களையுடைய சோலையை உடுத்த அலைவீசும் கடல்; அலையினால் அடித்துக் கரையில் எறியப்பட்ட முத்துக்கள் பதிக்கப்பட்ட மகளிர் விளையாடும் மணல்மேடு; இவ்வாறிருக்கும் இடமே, மயில் வாகனத்தில் வரும் எங்கள் கடவுள் முருகப் பெருமான் இருக்குமிடம்.


குருநாதன் ஒரு தெய்வ யானைதன் பாகன்
குறக்கொடிக் குந்தழைசிறைக்

கோழிக் கொடிக்குங் குமார கம்பீரன்

குறும்பிறை முடிக்கும்பிரான்


தெய்வ யானைதன் பாகன் = தெய்வயானையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளவன்.
குறக்கொடி = குறக்குலத்தில் பிறந்த வள்ளியம்மை
குறும்பிறை = மூன்றாம் பிறைச் சந்திரன்
தழை = தளிர்
சிறை = அழகுள்ளவள்

அவன் யார்? குருநாதன். அப்பனாகிய அரனுக்கே பிரணவத்திற்குப் பொருள் சொல்லிய குருநாதன். தெய்வயானையையும், குறக்குலத்தில் பிறந்த தளிர் பருவத்து அழகுடைய வள்ளியம்மையையும் தன் பக்கத்தில் வைத்துள்ளவன்.
கோழிக்கொடி உடையோன்; அவன் குமாரன்; பீடுடையவன்; மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடியவன்; எப்பொருட்கும் இறையோன்.


இருநாழி நெற்கொண்டு முப்பத்தி ரண்டறமும்
எங்குமுட் டாதளக்கும்

இறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகும்

எம்பிரான் இனிய பிள்ளைத்


நாழி = நான்கு உழக்கு அளவு
அறம் = தரும வகைகள்
முட்டாது = குறையாவண்ணம்

எட்டு உழக்கு நெல்லைக்கொண்டு முப்பத்தி இரண்டு வகை அறமும் எங்கும் குறைவுறாவண்ணம் படி அளக்கும் அன்னை உமையவளின் திருமுலைப்பாலுண்டு(ஞானப்பால்) அதனால் ஞானம் எப்பொழுதும் பெருகும் எம்பிரானின் இனிய பிள்ளைத்தமிழ்.


திருநாமம் எழுதுவார் கற்பார் படிப்பார்
செகம்பொது அறப்புரந்து

தேவாதி தேவரும் பரவுசா யுச்சியம்

சிவபதத் தெய்துவாரே.


நாமம் = பெயர்
பொது அறப்புரந்து = தனக்கே உரிமையானதாய்க் காத்து
பரவு = துதி
சாயுச்சியம் = இறையோடு இரண்டறக் கலப்பது.

உலகைத் தனக்கே உரிமையானதாய்க் காத்துவரும் குமரனின் திருநாமத்தை எழுதுபவர், கற்பவர், படிப்பவர் யாவரும், தேவாதி தேவரும் துதித்து வேண்டும் சாயுச்சிய பதவியாம் சிவபதம் எய்துவார்கள்.

2 Comments:

Anonymous said...

அருமையான தொடக்கம். தமிழும் அதன் இனிமையும் அது கொடுக்கும் அருளும் ததும்பும் புன்சொற்களைப் பண்சொற்களாக்கிய வேலன் பாடல்கள் பெருமகிழ்வூட்டுகின்றன.

முத்திபுரம் என்ற பெயர் செந்தில் என்பதன் வடமொழியாக்கம் என்றே நினைக்கிறேன். செந்து + இல் = செந்தில். செந்து என்றால் உயிர்கள். உயிர்கள் எல்லாம் இறைவன் திருவடியில் ஒடுங்கி அடங்கும் இல்லம் செந்தில். சரிதானா ஐயா?

Anonymous said...

அன்பு இராகவா,

//அருமையான தொடக்கம்.//

நன்றி

//தமிழும் அதன் இனிமையும் அது கொடுக்கும் அருளும் ததும்பும் புன்சொற்களைப் பண்சொற்களாக்கிய வேலன் பாடல்கள் பெருமகிழ்வூட்டுகின்றன.//

கந்தனே தமிழ். இனிக்காமல் இருக்குமா?

//முத்திபுரம் என்ற பெயர் செந்தில் என்பதன் வடமொழியாக்கம் என்றே நினைக்கிறேன். செந்து + இல் = செந்தில். செந்து என்றால் உயிர்கள். உயிர்கள் எல்லாம் இறைவன் திருவடியில் ஒடுங்கி அடங்கும் இல்லம் செந்தில்.//

மிகச் சரி.