Thursday, December 27, 2007

மனம்-1

மனம்-1
************
ஏ மனுவே! நீ பெயரும் புகழும் அடையவேண்டித்தானே தான தர்மங்கள் செய்கிறாய். உண்மையில் அது உனக்குத் துன்பங்களை அதிகப்படுத்துகிறது என்பதை மறவாதே! உலக நலனுக்காகச் செய்கிறேன் என்று நீயே உனக்கு உதவிக் கொள்கிறாய். அதையும் நான் அறிவேன். பெயரும் புகழும் கேட்டைத்தான் விளைவிக்கும். உன்னை நீயே கெடுத்துக் கொள்ளாதே. முதலில் உன் மனதைக் கட்டுப்படுத்து. அது தெரியாத உனக்கு நிமிடத்துக்கு நிமிடம் துன்பங்களும் துக்கங்களும் வருமென மறவாதே! இவ்வுலகம் கானல் நீர். அது தாகத்தைத் தணிக்காது. நீ காணும் ஒன்றும் சத்தியமாக இல்லை. அது மாயை. அனைத்தும் அழியக்கூடியதாம். அழியக்கூடிய உலகில் சுகத்தை அநுபவிக்க உன் மனம் கடல் அலைபோலத் தத்தளிக்கிறது. மனதையடக்கு. மனம் போன போக்கெல்லாம் போகாதே! மனத்தை வென்றால் உனக்குள் உள்ள ஆன்மா ஒளிவீசும் சோதியாகத் தெரியும்.

நீ பரிசுத்தனாக இல்லாததால் உன் மனம் அடங்கமாட்டேன் என்கிறது. உனக்கு சித்திகள் கைவரவேண்டும் எனும் அவா உள்ளுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. இதுவே கொடிய விரோதி. மனோசக்திகளால் சித்திகள் பெருபவன் சித்திகளுக்கே அடிமை ஆகிவிடுகிறான். ஏதோ ஒரு சித்தி கிட்டியதும், தன்னை மறந்து அகங்காரங்கொண்டு திமிர் பிடித்து அலைகிறார்கள். சித்திகளின் பிடியிலிருந்து விடுபடமுடியாது அடுத்த பிறவி எடுக்கிறார்கள்.
*****************
அன்பின் ஐயா,
"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்பதன் உள்ளடக்கம் தானே!..நீங்கள் சொல்லியது? அப்படி இந்த உலகில் இப்போது யாரும் இல்லை ஐயா..பெற்றவர்கள் உட்பட!...
மனித வாழ்க்கையில் எல்லாம் மாயா என்றால்? ஏன் இல்லறபந்தத்துள் தம்மை பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும் ஐயா? எல்லோரும் 'சித்தார்த..புத்தனாகி விடலாம் இல்லையா?...
கொஞ்சம் விளக்குங்களேன்..எதையும் எதிர்பாராமல் செய்கின்றோம் என்றாலும்..ஏமாறும் போது மனது வலிக்கிறது அதன் பிறகு தான் புரிகிறது ஓகோ எதையோ எதிர் பார்த்தோம் என்பது...
என்றென்றும் நட்புடன்
உங்கள்
சுதனின்விஜி.
*****************************
அன்பு சுதனின்விஜி,

இப்பொழுதுதான் என் மனம் குளிர்ந்தது. ஏன்? நான் உங்களிடமிருந்தெல்லாம் வினாக்கள் வரவேண்டும். உங்களுக்கெல்லாம் ஐயம் திரிபற ஞானம்
தரவேண்டுமெனும் எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் சர்வ சாதாரணம். ஆக, ஏமாற்றத்தைத் தவிற்க எதையும் எதிர்பாராதே!

"கடமையை செய் பலனை எதிர்பாராதே"

இல்லறவாசியின் கடமை, சான்றோரை மதித்து உபசரித்தல், பிறரிடன் அன்பு செலுத்தல், தன்னைப் போல் பிறரையும் நேசித்தல், விருந்தோம்பல்,
குடும்பத்தின் நலன், இனப்பெருக்கம், இன்னும்............... இந்த இனப்பெருக்கம் அளவுடன் கூடியாதாக இருத்தல்வேண்டும். அதற்காகத்தான் இறைவன் வரம் கொடுக்கும்போது, "அறிவுள்ள ஒரு பிள்ளை வேண்டுமா? அல்லது மூடர்களாக நிறைய குழவிகள் வேண்டுமா? எனக் கதைகளில் வருவது. அப்போது
திருமணம் எல்லாம் வேண்டுமல்லவா?

எல்லோரும் 'சித்தார்த..புத்தனாகி விடலாம் இல்லையா?...

இல்லறமில்லையேல் துறவறம் பூரணமாகாது. அப்போது உலகம் வளர்ச்சியுறுதல் எஞ்ஞனம்? உந்தும் உணர்வுகளைத் தணித்தல் எப்படி? இங்கேயே எண்ணங்கள் சிதறினால் எண்ணம் ஒரு நிலைப்படுவது எவ்வாறு? எண்ணமடங்கினால் அல்லவோ மனம் அடங்கும்?

விடை சரியா?
ஞானவெட்டியான்
****************************

அன்பு சிவா,

"மனமே முருகனின் மயில் வாகனம்"
மயில் மாயையின் தத்துவம். மனமடங்க மாயை அடங்கும். மாயை அடங்க உள்ளொளி சோதி காணும்.

"தானென்ற ஐம்பத்தோ ரட்சரத்தை
சத்தியமாய் மனதடங்கி யண்டத்துள்ளே
ஊனென்று பாயுமடா வுந்தனன்பு
ஒன்றான அட்சரமே பிர்மந்தன்னிற்
கோனென்ற ஒடுங்குநிலை பெற்றுமைந்தா
கோடிரவி மதியினுட காந்தியாலே
தேனென்ற அண்டவுச்சி தன்னைச்சுற்றித்
திருவான பஞ்சாக்கர மிதுவுமாச்சே."
(சுப்பிரமணியர் ஞானம்)

மனமடங்கவில்லையெனில் எண்ணங்கள் பாக்கி இருக்கும். அதற்குத் தக்கவாறு பிறவி எடுக்க வேண்டும். செட்டிநாட்டில் "தித்துவழி பண்ணத்தான்" என்பார்கள். பிறவிப்பிணி அகலவேண்டும்.
********************************
நன்றி ஐயா
மிக அருமையான விளக்கம்...அந்த பாடலை கொஞ்சம் விளக்கினால் நன்று...(சுப்பிரமணியர் ஞானம்)
சிவா..
> > "தானென்ற ஐம்பத்தோ ரட்சரத்தை
> > சத்தியமாய் மனதடங்கி யண்டத்துள்ளே
> > ஊனென்று பாயுமடா வுந்தனன்பு
> > ஒன்றான அட்சரமே பிர்மந்தன்னிற்
> > கோனென்ற ஒடுங்குநிலை பெற்றுமைந்தா
> > கோடிரவி மதியினுட காந்தியாலே
> > தேனென்ற அண்டவுச்சி தன்னைச்சுற்றித்
> > திருவான பஞ்சாக்கர மிதுவுமாச்சே."
> > (சுப்பிரமணியர் ஞானம்)

தான் என்னும் நம் உருவம்தான் சிதம்பர இரகசியத்தின் 51
அக்கரங்களாம்(அட்சரங்களாம்). இதில் முக்கியமானது தான் என்னும்
அகங்காரத்தை அண்டமாகிய முட்டையாம் நினைவுக்குள்ளே அடக்கி மனமும் அடங்கி ஒன்றே ஒன்றான ஓங்காரம் பிருமம் இருக்குமிடத்தை அடைந்து சிறப்பு மிக்க ஒடுக்கநிலை பெற்றிடும். கோடிசூரியன், கோடிசந்திரன் சேர்ந்ததுபோல்
ஒளிவீசும் ஒளியாலே தேன்போன்ற அமுதம் சுரக்கும் அண்டவுச்சியாம் கபாலத்தை செல்வமிகு "சிவயநம" எனும் பஞ்சாகரத்தால் கிரி வலம் வருவாய்.

51அக்கரங்களும் ஐந்துக்குள் அடக்கம் எனும் பொருளும் உண்டு.
*********************************
என் அன்பு ஐயா,,

அருமையான விளக்கம் ஐயா,

ஒருவன் அறியாமல் தவறு இழைத்தால்..அந்த தவறுக்கு என்ன மன்னிப்பு ஐயா?..அதை மனதிலே சுமந்துகொண்டு மீதி நாட்களையும் வீணாக்குவது சரியாகுமா?..
எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று எங்கள் வீட்டில் அடிக்கடி அம்மா சொல்வார். எங்கள் சின்ன வயதுகளில்..'தவறு செய்யாதே என்பதிலும் ஏன் தவறு இழைக்க கூடாது என்ற விளக்கம் இருந்தால்..தவறு என்பதே...இல்லாமல் ஒழிந்து விடாதா?..
குழம்பி நிற்கும் நிலையில் உங்கள் விளக்கம் எனக்கு இருளகற்றும் ஒளிவிளக்காக இருக்கிறது ஐயா..
இன்னும் கேட்கும்,
ஆவலோடு,
உங்கள்
சுதனின்விஜி.
********************
அன்பு சுதனின் விஜி,

அறியாது (தவறிச்)செய்வது தவறு. அறிந்து செய்வது தப்பு. தவறிச் செய்துவிட்டேன் என மனம் வருந்திப் பின் அதே தவறைச் செய்யாதிருப்பின் விமோசனம். மனதிலே சுமந்துகொண்டு மீதி நாட்களையும் வீணாக்குவது சரியாகாது.

தினை விதைத்தவன் தினையறுப்பான்; வினை விதைத்தவன்? தவறு செய்தால் தனக்கே தீம்பு வருமென உணர்ந்து செய்யாமலிருப்பதே சிறந்தது.
"தன்னைப் போல் பிறரையும் நேசி." இதை யாவரும் உணர்ந்துவிட்டால் தப்புமில்லை, தவறுமில்லை.

.......தொடரும்

0 Comments: