கதம் எட்டும் ஓர் இடத்தில்
*******************************
ஆற்று ஓரம் பொன்னி மடி, அரங்கினிலே சாய்ந்தபடி
அறி துயிலில் பள்ளி கொண்டும்(a)
அலங்கார கோலத்தில் எழு மலையைத் தாண்டி ஒரு
ஆட்சி நிலை உள்ளிக் கொண்டும்(b)
வீற்று ஓங்கும் கேழலாய்(c) வெம் புவியை மருப்பு(d) ஏற்றும்
விளையாட்டில் முகிழ்த்திக் கொண்டும்(e)
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நடங் காட்ட விழைந்த படி
வெளுந் தோய மலையைக் கொண்டும்(f)
ஆற்று ஆடும் சாலகத்தும்(g), அலக நதை நேமிக் கா(டு)(h)
அருள் இலந்தப் புரத்தி லேயும்(i)
அம்பு நிறைப் புழைக் கரத்தும்(j) தான்தோன்றி(k)த் திருமேனி
அழகுறவே வெளித்து நிற்க
கால் தாழச் சேர்ந்தார்க்கு கதம் எட்டும்(l) ஓர் இடத்தில்(m)
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!
"நாராயணாய நமக" என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சிறப்பிட்டுக் குறிப்பிடும் எட்டுத் திருத்தலங்களை இப்பாடல் பேசுகிறது.
(a) திருவரங்கம்
(b) திருவேங்கடம்
(c) கேழல் = வராகம்(அவதாரம்), காட்டுப் பன்றி
(d) மருப்பு = கொம்பு, தந்தம்
(e) திருமுகிழ்நம் > திருமுகிணம் > திருமுசிணம் > ஸ்ரீ முஷ்ணம்;
முகிழ்த்தது = தோன்றியது; பூவராகர் எனப் பெயர்கொண்ட மூலவர் திருமேனி மிகச் சிறியதாய் முகிழ்த்தது இந்தத் தலத்தின் சிறப்பு.
(f) திரு தோய் மலை = திருநீர்மலை; தோய் = பால், நீர்; திருத்தோய் மலையில் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களோடு, நடந்த கோலத்தையும் காட்டியதாய்ச் சொல்லுவது விண்ணவர் மரபு. தோயத்து அத்தி = தோய்த்தாத்தி > தோத்தாத்தி > தோத்தாத்ரி. அத்தி = மலை; தென்பாண்டி நாட்டில் உள்ள வானமாமலை என்னும் சீவரமங்கை தான் தோத்தாத்ரி என்பாரும் உண்டு; அங்குமே தாந்தோன்றித் திருமேனி உண்டு. தோத்தாத்ரி இதுவா, அதுவா என்ற குழப்பம் பலருக்கு உண்டு.
(g) திருச் சாலக் கம்மம் = பனிமலையிலிருந்து வழிந்தோடும் கண்டகி நதிக்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக்கம்மம்.
இது சாலக்கமம் > சாலக்கிராமம் > சாளக்கிராமம் என்று திரியும்;
யால மரமே சால மரம் என்றும், ஆச்சா மரம் என்றும் இக்காலத்தில் சொல்லப்படுகிறது. இதுபோகச் சாலக்கமம் என்பது கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒருவிதக் கருஞ்சாயக் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite.
(h) திரு நேமிக் காடு; நேமி = சக்கரம், வளையம்;
நும்முதல் > நுமுதல் > நமுதல் > நமுகுதல் = குழைதல், வளைதல்;
நமுக = வணங்குக; "நாராயண நமக" என்றால் "நாராயணனை வணங்குக" என்றே பொருள்; நமுக/நமக என்ற சொல்லை நாமம் என்ற பெயர்ப் பொருளாய்ப் பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
நமுதல் > நெமுதல் > நேமி; காடு > அரணம் > ஆரணம்; வடமொழியில் இது நைமிச ஆரண்யம் என்று ஆகும்; இது அலக ந(ந்)தை ஆற்றின் கரையில் உள்ளது.
(i) திரு இலந்தைப் புரம்; இலந்தை = பத்ரி என்னும் பத்ரிநாத்; பட்டை = இலை, ஓலைப் பட்டை;
பட்டம் > பத்தம் > பத்ரம்;
அலக நந்தையும் தோலி கங்கையும் புணரும் இடத்தில், அலக நந்தைக் கரையில் உள்ளது திரு இலந்தைப் புரம்; இதைத் திரு அதரி எனச் சொல்லுவதும் உண்டு. இருந்த கோலத்தில் இறைவன் ஆசானாய் அருள் புரியும் தலம்.
(j) திருப் புழைக் கரம் = புஷ்கரம்; அம்பு = நீர்; இந்தத் தலம் எங்கு உள்ளது என இதுவரை நான் அறிந்தேனில்லை. ஆனால் விண்ணவ மரபு இப்படி ஓர் இடத்தைச் சொல்கிறது. அறிந்தவர்கள்தான் விளக்க வேண்டும்.
(k) தானே தோன்றுதல் = இங்கே இந்தத் திருமேனிகள் சொயம்புவாக (சுயம்புவாக), சொந்தாகக் கிடைத்ததாக ஐதீகம்;
தானே தோன்றியவை = ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்;
வியத்தல் > வியி > விழி;
சொந்தாய் வெளித்த தலம் = தானே வெளிப்பட்ட தலம்.
(l) கதம் எட்டு = எட்டுக் கதங்கள் = எட்டு ஓசைகள்; மாலோனைக் குறிப்பிடும் எட்டெழுத்து மந்திரம். ஒவ்வோர் எழுத்தும் ஒரு திருமேனியாய் எட்டு இடத்தில் எழுந்ததாம்.
(m) எட்டுத் தாந்தோன்றித் திருமேனிகளையும் ஓரிடத்தில் சேவிக்க வேண்டுமெனில் கண்ணபுரம் போனால் போதும் என்பது விண்ணெறியாளரின் நம்பிக்கை.
Thursday, October 19, 2006
கதம் எட்டும் ஓர் இடத்தில்
Posted by ஞானவெட்டியான் at 8:09 PM
Labels: ஞானவெட்டியான், மாலியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment