5.அயிரை மேட்டில் ஓரிரவு
******************************
வரையாத அழகோடு, வடிவான உருவோடு,
வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும்,
பழிக்கின்ற பருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன் ஒரு நாள்
புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும்
புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில்
நுழையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் கழிப்பதை,
நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி
கண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!
புரைதல் - ஒப்புதல், பொருந்துதல்;
புரையாத திருமகள் - ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்;
கரையோடு ஊருலவும் திரு மேனி - கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.
இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம்(ப்ழைய கதை) உண்டு. இந்தத் தோற்றரவில்(அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. பெருமாள், பத்மினி நாச்சியாரைக் கப்பிடிக்கும் விழா, கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் நடக்கிறது. மீனவனாய் மாற்றிச் சரம்(கைலி) கட்டி, பெருமாளின் ஊருலவுத் திருமேனி(உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். அங்கே, கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். இப்படி,"எங்கள் மாப்பிள்ளை" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சிலகாலம் வரை இருந்திருக்கின்றது.
பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள்.. பலரும் அறிந்தது போல் சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படவில்லை.
Thursday, October 19, 2006
அயிரை மேட்டில் ஓரிரவ
Posted by ஞானவெட்டியான் at 8:01 PM
Labels: ஞானவெட்டியான், மாலியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment