சிவராத்திரி விரதம்
****************************நம் முன்னோர் நமக்காக வகுத்து விட்டுச் சென்ற விரதங்களைச் செய்வதால் துவண்ட உள்ளங்களுக்குப் புத்துணர்வு கிட்டுகிறது; இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறது; நல்லொழுக்க நெறியில் வாழ வழி வகுக்கிறது; காட்டுப்பாட்டுடன் வாழ்ந்து உடல்நலம் பேணி மன நலம் காக்கிறது; மனதில் தெளிவு பிறக்கிறது.
எல்லா தான தர்மங்களையும் விட மிக உயர்ந்ததான சிவராத்திரி விரதத்தின் பெருமை கேட்டு மறலியாம் எமனே நடுங்குவானாம்.
சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்;பெருமன், விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.
ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.
கீழ்க்கண்டவை இப்புனித தினத்தில் நடந்ததாகப் புராணங்கள் கூறும் நிகழ்வுகள்:
1.அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
2.அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.
3.கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.
4.பாகீரதன் தவமியற்றி ஆகாய கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டுவந்தது.
5.மார்க்கண்டேயனுக்காக மறலியை எதிர்த்து அழித்தது.
சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.
7 Comments:
//ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி//
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. ! ஆனல் ஒரு சிறு ஐயம்... ! பிரபஞ்சத்தில் எல்லாம் சூனியமாகிவிட்ட போது வேண்டுவதற்கு யார் இருந்தார்கள் சற்றுவிளக்க மாக கூறமுடியுமா ?
அன்பு கண்ணன்,
//பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி//
சேர்த்துப் படித்துப் பார்த்தால், அம்மையும் அப்பனும்தான் மிச்சம் எனத் தெரியுமே!
//சேர்த்துப் படித்துப் பார்த்தால், அம்மையும் அப்பனும்தான் மிச்சம் எனத் தெரியுமே! //
ஐயா !
நல்லது...! யாரோ அம்மை, அப்பன் ஆகிய இருவரையும் வேண்டினார்கள் என்று நினைத்துவிட்டேன்.
இன்னும் ஐயாமாகவே இருக்கிறது...!
சிவனும் சக்தியும் என்பது உடலும் உயிரும் ஒன்று சேர்ந்த ஒரே தத்துவம் தானே !
அன்பு கண்ணன்,
பக்தி நிலையில் இருந்து பார்த்தால் அம்மை அப்பனை வேண்டுவது சரி.
ஞான(தத்துவ)நிலைக்கு வந்துவிட்டால் கதைகள், புராணங்கள் ஆகியவைக்கு வேலையில்லை. புறக்கணித்துப் போய்விட வேண்டியதுதான்.
/// ஞானவெட்டியான் said...
அன்பு கண்ணன்,
பக்தி நிலையில் இருந்து பார்த்தால் அம்மை அப்பனை வேண்டுவது சரி.
ஞான(தத்துவ)நிலைக்கு வந்துவிட்டால் கதைகள், புராணங்கள் ஆகியவைக்கு வேலையில்லை. புறக்கணித்துப் போய்விட வேண்டியதுதான்.
//
அன்பு ஐயா !
நல்ல விளக்கம்... ! உங்களிடம் இதை எதிர்பார்த்தேன் !
பக்தியில் எல்லாம் தனித் தனியே !
ஞானம் என்று வந்து விட்டால் ஒன்றும் இல்லைதான்... ! நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி !!!
ஐயா,
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
சிவராத்திரி மாசி மாதம். இப்போது இதை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
இறைவன் அருளால் எல்லா வளங்களும் செழிக்கட்டும்.
நன்றி
அன்பு ஜயராமன்,
மிக்க நன்றி.
Post a Comment