மனம் என்பது ஆன்மாவா?
*****************************
மனம்:
*******
முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று
பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்)
என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய
ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ
ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு.
ஆனால் மனத்தை 'ஸ்விட்ச் ஆ·ப்' செய்துவிட்டால், மற்ற உறுப்புக
ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் தீவி
ரமாக யோசிக்கும்போது, நமக்கு இசை கேட்பதில்லை, பூவின் மணம்
தெரிவதில்லை என்பது போல. எனவே இந்த ஆறாவது உறுப்பு
இல்லாவிட்டால் மற்ற ஐந்து உறுப்புகளின் செயல்கள் பலனளிக்கா.
மனம்தான் இவற்றின் ஓட்டுநர்.
இதன் பொருள் என்னவென்றால், எவ்வாறு ஐம்புலன்களும் உடலின்
உறுப்புகளோ, அவ்வாறே மனமும் ஆறாவது 'உள்' உறுப்பு. அவ்வளவுதான்.
'இந்த உடல்தான் நான்' என்ற எண்ணம் இருக்கும்வரை
ஞானம் வாய்க்காது. மனமும் உடல்தான் என்றபின், மனமும் நானல்ல.
ஆனால் ஐந்து பொறிகளின் வழியே மனம் வெளிநோக்கிப் பாய்ந்து
கொண்டே இருக்கிறது. வெளிநோக்கிப் பாயும் மனம் இறைவனை
அடையாது. அதாவது ஞானத்தை அடையாது. மனத்தை உள்நோக்
கித் திருப்ப வேண்டும்.
மேற்கத்திய விஞ்ஞானத்தில் மனம் அறிவு இரண்டும் ஒன்றுதான். எல்லாமே
மூளையில் இருப்பவைதாம். அதாவது, புலன்களின் உணர்
வுகளுக்கான சமிக்ஞைகளைப் பெறுவது மூளைதான். ஒவ்வொரு வகை உணர்
வுக்கும் மூளையில் ஒவ்வொரு மையம் இருக்கிறது என்பார்கள்.
இந்தியச் சிந்தனையில் மனத்தை மூன்றாகப் பிரித்தார்கள்:
1. சித்தம்: (Mind) உணர்வுகளின் தொகுதியான பகுதி.
2. புத்தி: (Intellect) அறிவு.
3. அகங்காரம்: (Ego) ஆணவம். 'நான்', 'என்னுடையது' என்று எ
ண்ணவைப்பது.
மனம் என்பது எண்ணங்களின் தொகுதி. எண்ணங்கள் இல்லையேல்
மனம் இல்லை. இந்த மனம்தான் நாம் எது இல்லையோ அதை
யெல்லாம் நான் என்று நினைக்க வைக்கிறது. பாரதியின் ஞான ரதம்
படித்தீர்களானால் 'சத்தியலோகத்துக்குள் நுழையவேண்டுமென்றால்
மனத்தோடு நுழையமுடியாது' என்று அவருடன் வரும் கந்தர்வன்
சொல்லுவான்.
'உங்களுக்கெல்லாம் சிந்திக்காமல் இருப்பது எவ்வளவு கடினமோ,
எனக்குச் சிந்திப்பது அவ்வளவு கடினம்' என்று ஒருமுறை ரமண பக
வான் கூறினார். ஞானிகளுக்குத் தமக்கென்று ஒரு மனம் கிடையாது.
எனவேதான் அவர்களுக்கு உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம்
என்பது போன்ற இருமைகள் கிடையாது.
மனம் நம் உடலின் உள்ளே இருந்துகொண்டு உடலை ஆட்டிப்படைக்கும் ஒரு சூக்குமப் பொருள். மனம் அசைந்தால் உடல் முழுதும் அசைகிறது. மனம் ஒடுங்கினால், நம் உடலையும் மறந்து, நாம் இன்ன இடத்தில் இருக்கிறோம், இன்னதுதான் செய்கிறோம் என்னும் நினைவின்றி சுழுத்தி அவத்தையில் அழுந்தி விடுகிறோம். மனம் அடங்க, அதனால் மனோவாயுவும் அடங்க பிரேதா அவத்தைக்குப் போய்விடுவோம். இவைகளால் மனமே சலனத்துக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.
மனம் ஒருவனுக்கு வயப்பட்டால், அவன் யோகம், ஞானம் எதும் செய்யத் தேவையில்லை. பெரியோர்களெல்லாம் தம் மனத்தை வயப்படுத்தவே தவம் முதலிய முயற்சிகளைக் கையாண்டனர். எத்தகைய யோக ஞானங்களும் ஒருநிலைப்பட்ட சித்தமில்லையேல் பலன் தராது. நமது ஞான வினை என்னும் முக்கலை ஒன்றித்தலும் முற்றுப் பெறும் வரை மனிதனுக்கு பரிசுத்தம் இன்றியமையாத ஒன்று. ஆதலால், மனத்தை வயப்படுத்த முயலவேண்டுமே அல்லாது மனத்தை முற்றிலும் அடக்க முயலக் கூடாது. ஏனெனில், மனம் அடங்கிவிட்டால் ஒரு காரியமும் நடைபெறாது.
மனம் சுத்த மனம், அசுத்த மனம் என இரு வகை. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்பவைகளில் விருப்பமுள்ள மனம் அசுத்த மனம். மேற்கூறியவைகளில் வெறுப்படைந்து ஒளிவீசுவது சுத்த மனம். இதைத்தான் "அறிவு" என்கிறோம். மனம்தான் இவ்வுலகில் காணப்படும் நிலையில்லாப் பொருட்களை அடையும்படி செய்து மனிதனைத் தாழ்த்துகிறது. இதே மனம்தான், இவைகள் நிலையற்றவை என்று அறிவால் உணர்த்தி வெறுப்பூட்டி, ஆன்ம ஞானத்தைப் பெறவைத்து உயர்த்துகிறது.
மனத்தினால் செய்யப்பட்ட தொழிலே தொழிலாகும்; மனத்தினால் விடுபட்டதே விடுபட்டதாகும். மனம் நசித்தால் சனன மரணமென்னும் பெரிய காடு நாசமாகும். மன மயக்கம் என்னும் வித்தால் மாயா மலம் என்னும் கொடிய நச்சு மரம் பற்பல துன்பம் என்னும் கிளைகளுடன் செழித்து வளரும்.
ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரும்பாமல் நீங்கியவர்களே மனமென்னும் வாசியை வென்றவர்கள். ஏனெனில், தீனியாசை, யோனியாசை ஆகிய இரண்டினில் யோனியாசையைச் சிலகாலம் வரை ஒத்திப் போட்டாலும், தீனியாசையை நீங்கி இருத்தல் கடினம். மருந்து உண்ணும்போது பத்தியம் இருக்கும்போதுதான் தெரியும் அதன் இன்னல். வைராக்கிய ஞானம் இல்லாதவர்கள், மானிடத் தோல் பொத்திய விலங்கிற்குச் சமம். நான் என்னும் அகங்காரத்தைத் தொலைக்காதவரை உண்மையான ஞானோதயம் கிட்டாது. ஞானோதயமாகாவிட்டால் பிரபஞ்சம் தோன்றும். அப்போது பிரும்மம்(பெருமம்) தோன்றாது. காற்றாடி போல் சுழலும் மனம் வயப்பட்டால்தான் அகந்தை நீங்கும். அகந்தையுள்ளவர் முத்தியை விரும்புதல் இருளைத் துணையாகக்கொண்டு சூரியனைப் பார்க்க முயன்றதுபோலாம்.
திருக்குறள்
***************
யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.
இவ்வுலகத்தோரால் இனிமை எனக் கருதும் யாவும் எப்பொழுது எட்டிக்காய்போல் கசக்கிறதோ அப்பொழுதுதான் மனம் வயப்பட்டுள்ளது. திரண்ட மேகக்கூட்டம் பேய்க்காற்றால் எப்படிச் சிதறி ஓடிச் சூனியமாகி விடுதல்போல் கற்பனையால் மனம் நசிக்கும். நிறைவு - குறைவு, பெரிது - சிறிது நீங்கிய சமபக்குவத்தால் ஆனந்தத்தைத் தரும் பிரமபதம் சதாநித்தியமாகும். வெப்பமானது அக்கினியியிலிருந்து நீங்காமல் இருப்பதுபோல், தாழ்வைத்தரும் சஞ்சலம் மனதை விட்டு நீங்குவது மிகவும் கடினம். சலிக்கும் மனமே உலகமாம்.
மனம் எப்பொருளைப்பற்றி சதா சிந்திக்குமோ அப்பொருள் சித்திக்கும். எப்பொருளையும் மேன்மையாகப் பாவிக்க மேன்மையும், கேவலமாக நினைக்க கேவலத்தைத் தருவதாகவும் அமையும். ஆகவே, சகலத்துக்கும் மனமே காரணம்.
ஆகையால்தான் இவ்வளவு எழுதவேண்டி உள்ளது.
"கைஸா நிய்யத் அய்ஸா பரக்கத்"
எண்ணம் அப்படியோ அப்படியே வாழ்வு. அதாவது "எண்ணம்போல் வாழ்வு".
ஆன்மா:
*********
ஆன்மா ஆதியந்தமில்லாதது. அதுவே சீவனாகிய சிவன். சீவனை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தவியலாது.
மனம் விழிப்பு நிலையில் மட்டுமே இயங்கும்.
ஆன்மா மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும்.
மனம் சலனத்தால் அலைபாயும் (குளத்தில் கல்லெறிந்தால் அலைகள் கிளம்புமாப்போல்).
சீவன் இல்லாத உடலில் மனம் இயங்காது.
ஆனால் மனம் உறங்கும்பொழுது சீவன் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
ஆக மனமும் ஆன்மாவாகிய சீவனும் வேறு வேறு.
Thursday, October 19, 2006
மனம் என்பது ஆன்மாவா?
Posted by ஞானவெட்டியான் at 7:53 AM
Labels: ஞானம், பின்னூட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
அய்யா, எண்ணங்கள் நாம் பார்க்கும் பொருட்களிடத்தெயும் கடந்த கால அனுபவங்களின் மூலம்மென்றால், ஆன்மா அவைகளிடத்தே இருந்து சற்றும் தொடர்பற்று விலகியியேயிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்மென்று வைத்துக் கொண்டால், இவ்வெண்ணங்களின் மூலம்தான் எங்கே, பிறக்கும் குழந்தையிடத்தே?
எது இவ்வெண்ணங்களை தொடங்கி வைக்கிறது, ஒவ்வொரு பிறக்கும் குழந்தையும் தனக்கே உரிய குணாதிசயங்களுடன் இருப்பதை காண்கிறொம் (உ.தா: சில கைக்குழந்தைகள் அதிகமாக அழுவது கிடையாது அதே சூழலில் இருக்கும் மற்றொரு குழந்தை அதீதமாக அழுகும் சுழலை எடுத்துக் கொள்ளலாம்). அப்படியெனில், கர்மா வினைகள் எதன் பொருட்டே பொதிந்து வருகிறது? ஆன்மா தான், தனது உலகியல் சார்ந்த தாகங்களை தீர்த்துக் கொள்ள மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வருகிறதா? அப்படியெனில் ஆன்மா எப்பொழும் அன்பே சொரூபம்மென்றால், மேற்கூறிய கூற்றின் படி தனிப்பட்ட மனித ஆன்மாவிற்க்கு "அகங்காரம்" உள்ளது என்று பொருளா?
உணர்வுநிலை (Consciousness) என்பது நமது உடல் சார்ந்த ஒன்றுமட்டும்தானா அல்லது அவ் உணர்வுநிலை மரணத்தையும் தாண்டி நிற்க்கிறதா?
அய்யா, நல்ல பதிவு!!!.
அன்பு சிவபாலன்,
மிக்க நன்றி.
//திருக்குறள்
***************
யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.//
ஐயா, உங்கள் இப்பதிவை முழுவதும் படிக்கவில்லை, முழுவதும் படித்துவிட்டு மறுமொழியிடுகிறேன்.
ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன், திருக்குறள் வாழ்வியல் நூலே, அது சமய நூலோ அல்லது இறையியல் நூலோ அல்ல. திருக்குறள் உதாரணம் வாழ்வியலுக்கு மட்டும் பொருந்தும் அதற்கும் ஆனிமிக நம்பிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை
- கோவி.கண்ணன்
அன்பு கண்ணன்,
//யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.
திருக்குறள் வாழ்வியல் நூலே, அது சமய நூலோ அல்லது இறையியல் நூலோ அல்ல. திருக்குறள் உதாரணம் வாழ்வியலுக்கு மட்டும் பொருந்தும் அதற்கும் ஆனிமிக நம்பிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை//
செறுக்கை அறுத்தவர் வானோர் உலகம் புகுவர் என்றால் வாழ்வியலா? ஆன்மிகவியலா? எனத் தாங்களே அறிவீர்கள்்.
திரையிசைப் பாடல்களில் ஆன்மிகம் காணும் எனக்குத் திருக்குறளும், சித்தர்பாடல்களும், திரையிசைப் பாடல்களும்,கிராமீயப் பாடல்களும் ஒன்றே.
எப்பொருள் யார்யார்வய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
இங்கு மெய்ப்பொருள் என்பது மெய்க்குள் இருக்கும் அழியாப் பொருள்.
அன்பு தெக்கிக் காட்டான்,
என்னைப் பொருத்தவரை அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு எண்ணமும் ஒரு பிறவியே!
குழந்தை பிறந்து அழுவதைக் கொண்டு எதையும் முடிவு செய்ய இயலாது.
எண்ணங்களின் ஆரம்பம் நம் கண்களே! அது இல்லாதவருக்குத் தொடுசுவய்தான். ஒரு பொருளைப் பார்த்ததும்தான் நரம்பு மண்டில முடிச்சாகிய முகுளம் (மாயையாகிய மாலவன் - பள்ளிகொண்ட பெருமாள்) தூண்டிவிடுகிறது. மனம் விழிக்கிறது. எண்ணங்கள் பிறக்கின்றன. ஆலமரம்போல் தழைக்கின்றன.
//உணர்வுநிலை (Consciousness) என்பது நமது உடல் சார்ந்த ஒன்றுமட்டும்தானா அல்லது அவ் உணர்வுநிலை மரணத்தையும் தாண்டி நிற்க்கிறதா?//
உணர்வுநிலை (Consciousness) என்பது நமது உடல் சார்ந்த ஒன்றுமட்டுமே! மரணத்தில் மனம் நசித்துவிடுகிறது. மனம் நினைக்கும் எண்ணங்களை ஆன்மா உணர்கிறது. தாமரை இலைத் தண்ணீர்போல. மனம் மறைந்ததும் ஆன்மாவும் மறந்துவிடும். இறந்தபின் ஆன்மா தன்னுடன் ஒன்றையும் கொண்டுசெல்வதில்லை.
குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (இறையிலிருந்து)பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் இறையாகவே யிருந்தது.
அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. தெய்வீகக்
கடாட்சம் அதற்கு இருந்தது. அது இறையிலிருந்து வெளியான போதும் அது வெளியான
சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும்
இருக்கவில்லை. இறையில் இறையாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து
ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. மனதில் எண்ணங்கள் உதயமாயின.
இவ்வாறு இறையிலிருந்து பிரிந்துவந்த ஆன்மா இவ்வுலகில் வாழும்போது எதிலெல்லாம் தொடர்புவைத்துக்கொண்டதோ அதையெல்லாம் உதறிவிட்டு பூரனமாய், சுத்தமாய் வந்தபொழுது இருந்த நிலையில் பரிபூரணமாம் இறையுடன் கலக்கிறது.
//செறுக்கை அறுத்தவர் வானோர் உலகம் புகுவர் என்றால் வாழ்வியலா? ஆன்மிகவியலா? எனத்
தாங்களே அறிவீர்கள்//
பிறப்பு முதல் இறப்புவரை அறிய வேண்டிய வற்றில் அதாவது அறம், பொருள், இன்பம், வீடு இதில்
அறம், பொருள், இன்பம் என மூன்று மட்டுமே திருக்குறளால் பகுக்க பட்டிருக்கிறது என்ற வகையில் அவ்வாறு கருதுகிறேன். வானவர், வானுரையும் தெய்வம் என்றெல்லாம் எல்லாம் திருக்குறளில் வந்தாலும் அது முழுமையான வாழ்வியல் நூலே. நமது சமய குரவர்களோ, ஞானிகளோ திருக்குறளை ஒரு ஆன்மீக நூலக பார்பததாக அதிலிருந்து ஆன்மீகம் கற்றதாக நான் அறிந்தது இல்லை. பக்தி நெறி என்ற விளக்க அளவிலே திருக்குறளில் சமய விடயங்கள் காணப்படுகிறது.
அன்பு கண்ணன்,
//வானவர், வானுரையும் தெய்வம் என்றெல்லாம் எல்லாம் திருக்குறளில் வந்தாலும் அது முழுமையான வாழ்வியல் நூலே.//
வாழ்வியல் நூலாகவே இருக்கட்டும். அது ஆன்மிகத்துக்கு வழி காட்டலாகாதா?
//நமது சமய குரவர்களோ, ஞானிகளோ திருக்குறளை ஒரு ஆன்மீக நூலக பார்பததாக அதிலிருந்து ஆன்மீகம் கற்றதாக நான் அறிந்தது இல்லை.//
நான் காணுகிறேன். நம் நோக்கம் எதுவோ அதுவே நம் நோக்குக்கு அடிப்படை. என் நோக்கம் முழுவதும் மெய்ப்பொருள் காண்பது ஒன்றே. அதற்க்காக அடுத்தவரையும் அஞ்ஞனம் நோக்குங்கள் எனக் கூறுதல் தவறே!
//பக்தி நெறி என்ற விளக்க அளவிலே திருக்குறளில் சமய விடயங்கள் காணப்படுகிறது.//
பக்தி வழிதான் ஞானத்துக்கு முதல் படி.
Post a Comment