தமிழ் மொழியின் எதிர்காலம்
*********************************
ஞாலம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளில் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் மக்களின் அறியாமை, அலட்சியப் பாங்கு ஆகியவைகளால் நெருப்பு, நீர், கரையான் ஆகியவற்றால் அழிந்துபட்டது போக எஞ்சியிருக்கும் எண்ணற்ற நூல்களும், அவைகள் சுட்டும் கருத்துக்களும் தமிழ் தொன்மையானது என்பதற்கு ஆதாரம். தமிழர்களின் நாகரீகத்தின் மேம்பட்ட நிலையினை தெள்ளத் தெளிவாய்க் காட்டும் ஆடியாகவும் விளங்குகிறது. இலக்கிய வளம், இலக்கணச் செறிவு, தத்துவப் பான்மை ஆகிய எல்லாம் அமைந்த மொழி. நெறிகளில் உயர்ந்த திருநெறியைச் சுட்டுவதால் "திருநெறியத் தமிழ்" எனவும், தெய்வத்தன்மை வாய்ந்ததாலும், தெய்வத்திடம் வழிப்படுத்தும் மொழியாகவிருப்பதாலும் "தெய்வத்தமிழ்" எனவும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். மும்மூர்த்திகளாம், குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் ஆகியோர், இறைவனையும் இறை உணர்வினையும் உரைநடைகளாக ஆக்கி பேச்சுமொழியைத் தெய்வத் தன்மை பொருந்தியதாகச் செய்தனர்.
தோற்றம்:
***********
கத்தொலிகள்(ஓ, கோ, கூ), ஒப்பொலிகள்(கூ, மா, குர்), வாய்ச்சைகை ஒலி(வா, போ), இன்னும் பிற ஒலிக்குறிகள் ஆகியவைகளிலிருந்து ஒலிகள்(சொற்கள்) பிறந்தன. விலங்கு, பறவை முதலிய உயிரினங்களின் ஒலிக்குறிப்புகளும் சொற்பிறப்பிற்கு அடிப்படையாயின. இதைவைத்து முதன் முதலில் தோன்றியவை தனிச்சொற்களே. குறிஞ்சியில் வாழ்ந்தபொழுது தமிழர்கள் புழங்கியது சில சொற்களே. பின்னர், முல்லை முதலிய ஏனைய திணைகளுக்குப் புலம் பெயர்ந்தபொழுது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச் சொற்கள் தோன்றின. பல சொற்கள் மருதத்தில் தோன்றியவை. மருத நிலத் தலைவன் மற்ற திணைகளில் புழங்கிய சொற்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்க ஒரு முழு மொழியாகியது. அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்றபோது சொல்வளம் பெருகிற்று.
வளர்ச்சி:
**********
இடம், பொருளீட்டல், தொழில் ஆகியன விரிவுபட்டபோது புதுச் சொற்கள் தோன்றின. சொற்களை வைத்து சொற்றொடர்கள் தோன்றின. சொற்றொடர்களை வைத்து இலக்கியம் தோன்றிற்று. முதலிலக்கியம், காதல் வெளிப்பாடுகள், முன்னோர் சரித்திரம், போர்ப்பாடல்கள், திருமன்றாட்டுகள், மறைநூல் என்னும் வரிசையில் வெளிவந்தன. பின்னர், இலக்கணிஞர்கள் இலக்கணம் யாத்தனர். அதன் பின்னர், எழுதுபவரின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே இலக்கியம் வளர்ந்தது. அறநூல் எழுதும்பொழுது, எழுதுபவரின் சொல்லாக்கமும், இறைச்சிந்தனையாளர்கள் பெருநெறியாம் திருநெறி பற்றி எழுதும்பொழுது அவர்களின் சொல்லாக்கமும் தமிழை வளப்படுத்தின. தமிழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாயிருந்தது திருநெறி இலக்கியமே. அப்பொழுது, தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழை வளர்த்தன.
பிறமொழிக் கலப்பு:
**********************
வேதங்களை (ரிக், யசுர், சாம, அதர்வணம்) தமிழருக்கு அறிமுகப்படுத்துங்கால், அதிலுள்ள சமக்கிருதச் சொற்களுக்கிணையான தமிழ்ச் சொல் வேர்களையெடுத்துக்கொண்டு, முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்த்து சொற்களை உருவாக்கினர். பின்னர், அதுதான் மூலம்; அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தது என வாதிடவும் செய்தனர். வைணவம் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபின் செங்கிருதமும் தமிழும் கலந்த நடை உருவாயிற்று. அதை மணிப்பிரவாள நடை என்றனர். இதன் தாக்கத்திலிருந்து தமிழைக் காக்க பல சமயக் குறவர்கள் போராடியுள்ளனர்.
அத்துடன் நில்லாது, தெலுங்கு, கன்னட, கேரள மன்னர்களின் ஆதிக்கத்திற்குள் சென்ற பகுதியினர் அம்மொழிகளின் சொற்களையும் தமிழுடன் கலந்து பலுக்க(பேச) ஆரம்பித்தனர்.
இதனால், பல வேர்ச்சொர்கள், கிளைச் சொற்கள் ஆகியன மறைந்து விட்டன. மறைமலையடிகள் போன்ற ஆன்றோர்கள் தமிழைக் காக்க அரும்பாடுபட்டு, தங்களின் ஆக்கங்களில் இனம் காட்டியுள்ளனர். மெக்காலேயின் முயற்ச்சியால் ஆங்கிலமும் துளிர்த்தது.
தற்பொழுது கிளைத்துள்ள தமிங்கிலத்திலிருந்து இளைய தலைமுறையைக் காப்பது மிகக் கடினமான ஒன்றாகவே கருதுகிறேன்.
நிகழ்காலத்தில் தமிழ்:
************************
நிகழ்காலத்தின் தமிழ் மிகவும் வருந்தத்தக்க நிலயில் உள்ளது. மடிக்குழைப் பள்ளிகளில் கல்வி பயின்றுவந்த தலைமுறையினர் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோரும், மற்றையோரும், ஆங்கிலம் கலந்து உரையாடுவதுதான் மதிப்பைத் தரும் என்னும் கருத்துகொண்டு, தாய்மொழிச் சொற்களைப் புறக்கணித்து ஆங்கிலச் சொற்களைப் பாவிக்கின்றனர். கல்வி நிலையங்களிலும், இல்லங்களிலும் ஆங்கிலத்தில் உரையாடுவதையே மதிப்பாகக் கருதுகின்றனர்.
அதிலும் கொடுமை, ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து பேசுவது.
எடுத்துக்காட்டாக:"எனக்கு health சரியாக இல்லைங்கிறதால lateஆ எந்திரிச்சு shave பண்ணாம autoவில collegeக்குப்போய் first period attend பண்ணிட்டு ப்ரொபெசர்கிட்ட half day leave கேட்டுகிட்டு hostelல்ல என் friend roomல rest எடுத்தேன்."
ஆங்கிலம் வேண்டாமெனக் கூறவரவில்லை. புழங்கினால் முழுவதும் ஆங்கிலத்திலேயே புழங்கவேண்டும்(அலுவலகம் போன்ற இடங்களில், அல்லது தமிழ் மொழி தெரியாதோரிடம்). அதில் தமிழ் கலப்பு கூடாது. மற்ற இடங்களில், முக்கியமாக, இல்லத்தில், தமிழ் தெரிந்தோரிடத்தில் உரையாடும்போது, தமிழில் மற்றமொழிக் கலப்பின்றி உரையாடுதல் வேண்டும். செந்தமிழில் உரையாடாவிடினும், பேச்சுத் தமிழில் கலப்பின்றி பேசுதல் வேண்டும்.
ஊடகங்களில், தமிழ் எழுத்துக்களின் ஒலிக்குறிப்பு கொலை செய்யப்படுகிறது. யாருக்கும் கவலை இல்லை. எடுத்துக்காட்டு:
"ச" என்னும் எழுத்து "ஸ" என பலுக்கப்படுகிறது(ராசா=ராஸா).
"பலனியில் மளை பேஞ்சதால் பக்தர்கள் மளை ஏறமுடியாமல் வலுக்கி விளுந்தனர்."
ஊடகங்களைத் திருத்த முடியாது. அவர்களின் குறிக்கோள் "பணம்....பணம்." விளம்பரப் படங்களின் தரம் கொடிது. அவர்கள் செய்யும் தமிழ்க்கொலையை காணக் கண்கூசும்; கேட்கும் செவிப் பறை கிழிந்து போகும்.
ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளம் குறைவு. அதனால், பிறமொழிகளிலுள்ள சொற்களைக் கடன் பெற்றது. அப்பொழுதும் அது ஆங்கில ஒலிக்குறிப்பிலேயே அச்சொல்லைப் பலுக்கியது. தமிழ் பெருவளமொழி. இல்லாத சொற்களேயில்லை எனலாம். கடன்பெற வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், இதுவரை புகுத்தப்பட்ட பிறமொழிச்சொற்கள் எல்லாம் தமிழின் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைத்து வந்துள்ளன. பல சொற்கள் வழக்கிழந்தன.
சற்றொப்ப இருநூறு ஆண்டுகளாக ஆங்கில் வல்லாண்மையை எதிர்த்துப் போராடி வந்தும் முன்னேற்றமின்மை தமிழனின் அக்கறையின்மையையும், ஆங்கில மோகத்தையும்தான் காட்டுகிறது."பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்", "உண்பாடின்றேல் பண்பாடில்லை" என்னும் முதுமொழிக்கிணங்க, தரமுடன் வாழ்ந்த தமிழரில் சிலர், தவத்திரு மறைமலயடிகளைத் தவிர, பொருளுக்கும், புகழுக்கும் ஆசைகொண்டு தமிழ் முழக்கத்தையே கைவிட்டிருக்கின்றனர்.
தமிழின் இந்நிலையை நீக்க:
*******************************
இவ்விழிநிலையிலிருந்து தமிழைக் காக்க, தமிழ் கற்றறிந்த ஆன்றோரும், மாணாக்க சமுதயமுமே ஏற்றவர்கள். இவர்கள்தாம் எதிர்காலக் குடிவாணர்கள்; அமைச்சர்கள்; அரசு. நம் தமிழைக் காக்க, வரும் இளைய தலைமுறையினர் தவறுவார்களேயாயின், பின்னர் தமிழன் என்ற இனம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சில வழிமுறைகள்:
**********************
1.முன்னோர் ஆக்கிய சொற்களைக் கையாளுதல் வேண்டும்.
2.பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும்.
3.நேர் தமிழ்ச் சொல் இல்லாத பிறமொழிச் சொல்லுக்கு வேர்ச்சொல் அறிந்து, அதர்கொப்ப புதிய தமிழ்ச் சொல் உருவாக்குதல் வேண்டும். அதையும் தமிழொலிக்குறிப்பில் பலுக்குதல் வேண்டும்.
4.பிற மொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்தல் வேண்டும்.
5.திரைப்படம், சின்னதிரையில் அழுகை, புலம்பல் நாடகங்கள், பண்பலை வானொலியின் பண்பற்ற உரையாடல்கள் ஆகியவைகளைப் பார்த்தோ அல்லது கேட்டோ, அதை உள்வாங்கி அப்படியே பலுக்கக் கூடாது.
6.தமிழில் புகுத்தப்பட்ட சொற்களில் நாளொன்றுக்கு ஒரு சொல் நீக்கிப் புழங்க முயன்றால் போதும்.
7.ஒவ்வொருநாளும், அகரமுதலியிலிருந்து முன்னர் புழக்கத்தில் இருந்த தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு சொல் புதியதாகத் தெரிந்து கொள்ள முயலவேண்டும்.
மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியே. அவரினும் வேறான ஓர் உயிர் அல்லது உருவமல்ல. மக்கள் தம் தாய்மொழியைப் பேசினால் அது வாழும்; இல்லையேல் மாளும்.
தமிழின்றேல் தமிழனில்லை. தமிழ் அழிந்தால் தமிழன் என்னும் இனமும் அழியுமென்பதில் ஐயமேதுமில்லை. தமிழின் தூய்மையைக் காப்பது தமிழனின் தலையாய கடமை.
Thursday, October 19, 2006
தமிழ் மொழியின் எதிர்காலம்
Posted by ஞானவெட்டியான் at 7:44 AM
Labels: தமிழமுது, பின்னூட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
நல்ல பதிவு ஐயா. நல்ல கருத்துக்கள்.
//பலனியில் மளை பேஞ்சதால் பக்தர்கள் மளை ஏறமுடியாமல் வலுக்கி விளுந்தனர்//
நன்றாகச் சொன்னீர்கள். இவர்கள் மயக்கத்திற்கு வழுக்கி விழுந்தது 'ழ' கரம்.
ஐயா மொழிஞாயிறு தேவனேய பாவாணர் அவர்கள் சொல்லுவார்கள், வடமொழியில் 3/2 பங்கு தூயதமிழ் சொற்கள் மீதம் உள்ள 1/3 பங்கு தமிழ்சொற்களின் திரித்தல் என்று. அதைச் மெய்பிக்கும் படியாக உங்கள் கருத்தும் இருக்கிறது. தமிழ் எவ்வாறு செம்மொழி அதன் சிறப்பென்ன என்பதே நம் தமிழர்களுக்கு தெரியாத பொழுது வருத்தமாக இருக்கிறது. இன்றும் தமிழ் வடமொழிக்கு பிந்தியது என்று முடக்கு வாதம் செய்பவர்கள் நம்மிடையே நிறைய பேர் உள்ளனர்.
உயர்நிலை பள்ளிக்கூடங்களில் அகரமுதலியை பாடமாக வைத்து கட்டாயமாக்கினால் வரும்காலத்தில் இந்த நிலை மாறும் என நினைக்கிறேன்.
வளவு என்ற தன் பதிவில் இராம.கி என்பவர் வேர் சொற்களை வைத்து விளையாடுகிறார். மிகவும் நன்றாக இருக்கிறது.
http://www.valavu.blogspot.com/
உங்களின் ஆக்கங்களும், தமிழ்ப்பற்றும் நெகிழ வைக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தமிழ்தாயின் தவப்புதல்வர்களில் ஒருபுதல்வர் நீங்கள் என்பதை வலைப்பூவாளர்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதை உங்கள் பதிவின் பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
அன்பு பெருவிஜயன்,
மிக்க நன்றி.
அன்பு சம்மட்டி,
//இன்றும் தமிழ் வடமொழிக்கு பிந்தியது என்று முடக்கு வாதம் செய்பவர்கள் நம்மிடையே நிறைய பேர் உள்ளனர்.//
விவாதம் என வந்துவிட்டால் அதன் வேர்ச்சொல் என்ன, சல்லி வேர்கள் என்னென்ன, கிளைச் சொற்கள் என்ன என விவாதித்து நிறுவும் அறிஞர்கள் அருகி வருகிறார்கள்.
//வளவு என்ற தன் பதிவில் இராம.கி என்பவர் வேர் சொற்களை வைத்து விளையாடுகிறார். //
அவருடைய சொற்குவியலைச் சேமித்து வருகிறேன். இயன்றவரை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி வருகிறேன்.
//தமிழ்தாயின் தவப்புதல்வர்களில் ஒருபுதல்வர் நீங்கள் என்பதை வலைப்பூவாளர்கள் உணர்ந்துள்ளார்கள்//
தமிழை இகழ்வோனைத் தாய் தடுத்தாலும் விடேன்.
ஆழமான கருத்துக்கள். சில ஆண்டுகளுக்கு முன் தேவநேய பாவாணரின் மாணவர் முனைவர். மதிவாணன் அவர்களை சந்தித்தப்போதும் வடமொழியில் உள்ள பலச் சொற்கள்(கர்மா, ஆசனா, மந்திரா..)தமிழே என்றார்.
தமிழின் எதிர்காலம் சிறப்பாக அமைய நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்களுடன், பள்ளி/கல்லூரி அனைத்து நிலைகளிலும் தமிழ்க் கற்பிக்கும் முறையை செம்மைப்படுத்த வேண்டும்.உதாரணமாக தொடக்க நிலையில், சொல் வளம்(vocabulary), புரிந்தாய்வு(comprehension), பிழைக் கண்டுபிடித்தல், கணினியில் தட்டச்சு ஆகியவற்றை பாடத் திட்டமாக வேண்டும். உயர் நிலைகளில் கவிதை, கட்டுரை எழுதுதல், கணினியில் ஆவணங்கள் உருவாக்குதல் ஆகியவை சொல்லித்தரலாம்.
நம்பிக்கையுடன்,
கரு.மலர்ச் செல்வன்
http://valluvam.blogspot.com
அன்பு கரு.மலர்ச் செல்வன்,
மிக்க நன்றி.
நல்ல பதிவு. நல்ல கருத்துக்கள்.
// தமிழைக் காக்க, தமிழ் கற்றறிந்த ஆன்றோரும், மாணாக்க சமுதயமுமே ஏற்றவர்கள். //
நேசம் நிறைந்த ஐயா,வணக்கம்!
தங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்துப் பதிலெழுதாது செல்வது இதுவரை என் வழமையாக இருந்தது.எனினும், இப்பதிவுக்காகத் தங்களை வாழ்தாது செல்வது என் உணர்வுக்கு முடியவில்லை!தமிழ்மொழி மீதான விழிப்புணர்வானது மிகவும் அவசியமானது நமக்கு.
மொழி வளர்ச்சியென்பது பொருள் வளர்ச்சியோடு தொடர்புடையதென்பது நீங்கள் அறிந்ததே.
இத்தகைய நிலையில் தமிழக அரசு அரசியற் பொருளியற்றேவைகளை இனம் சார்ந்து செயற்படுத்தவில்லை,மொழிமீதான அக்கறையுடைய எந்த வளர்ச்சித் திட்டங்களுமில்லை.தமிழ்பேசும் மக்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கான எந்தத் திடமான ஆய்வ+க்கங்களும் அரசினால் ஆற்றப்படுவதுமில்லை.இருக்கும் தமிழ்வழிக் கல்வி நெறியாண்மையைத் தகர்ப்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ள ஒரு மாநில "ஆட்சிநெறியில்" மொழிமீதான அக்கறை வெறும் ஏட்டுச் சுரக்காய்தாம்.எனவே தமிழினத்துக்கான தனித்துவமான அரச கட்டமைப்பின்றித் தமிழ்மொழியினது இருப்புப் பலவீனமானதாகவே இருக்கும்.
இன்றிருக்கும் தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்குகள் தமிழினத்தின் விருப்பு-நலனின் அடிப்படையில் எதிர்காலத்திட்டங்களை வகுக்கவில்லை.மாறாக உலக வர்த்தகத்தில் தமது பங்கிற்கான கனவுகளோடு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைக் கைப்பற்றிய வர்க்கம் செயலூக்கமாகச் செயற்படுந் தறுவாயில்,தனிநபர்கள்மீதான "சுமத்தல்கள்" எவ்வளவு தூரம் வெற்றியைத் தரமுடியும்?
ஒரு மொழியினது இருப்பானது வெறும் இலக்கியங்களாலோ அன்றி ஒருவகை மக்கள்கூட்டம்; அவ்மொழியை உரையாடுவதாலோ நிலைக்கமுடியாது!மாறாகக் குறித்தவொரு மொழிக்கான பொருளாதார உற்பத்திப் பலமும்,அந்த மொழி சார்ந்த ஆட்சி,பண்பாட்டுத் தனியாண்மையும் தொடர்ந்து நிலவவேண்டுமில்லையா?
நமது இன்றைய நிலையில் இந்தச் சாத்தியம் உண்டா?
தமிழ்மொழியின் இன்றைய நிலைமைக்கு யார் பொறுப்பாளிகள்?
மக்கள்மீது வலுவான ஆதிக்கத்தையும்,அதிகாரத்தையும் மிகக் கொடுமையான முறைமைகளில் செலுத்தும் அரசவடிவம்,தமிழ் மொழியைத் திட்டமிட்டு அழிப்பதற்கான எல்லா வகைச் செயற்பாட்டையும் செய்யும்போது,தனிமனிதர்களிடம் என்னதாம் மிஞ்சும்?
என்றபோதும் உங்களை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்!
இங்ஙனம்
ப.வி.ஸ்ரீரங்கன்
அன்புடன் ஐயாவுக்கு!
மிக ஆழமாக ,நாம் சிந்திகக் வேண்டிய விடயம் பற்றிய ஆக்கம். இது மக்கள் கையில் அன்றாடமுலாவும்; பத்திரிகைகளிலும்; சஞ்சிகைகளிலும் அச்சேறவேண்டும்.தரம் கெட்ட தொலைக்காட்சி; வானொலி தயாரிப்பாளர்கள்;அறிவிப்பாளர்களுடன்; தமிழ்மொழிக் காப்பாளர்களும்
படித்தறியவேண்டும்.
நன்றி
யோகன்
பாரிஸ்
அன்பு சிவபாலன்,
மிக்க நன்றி.
அன்பு ஸ்ரீரங்கன்,
தங்களின் கருத்துக்கள் முற்றிலும் உண்மையே.
அரசைத் திருத்தும் அதிகாரம் நம்மிடம் இல்லை என வாளாவிருக்காது நம்மாலான முயற்ச்சிகளைச் செய்யலாமே எனும் ஆதங்கத்தில் எழுதியது.
என் வலைப்பூவுக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி.
அன்பு யோகன்,
//இது மக்கள் கையில் அன்றாடமுலாவும்; பத்திரிகைகளிலும்; சஞ்சிகைகளிலும் அச்சேறவேண்டும்.தரம் கெட்ட தொலைக்காட்சி; வானொலி தயாரிப்பாளர்கள்;அறிவிப்பாளர்களுடன்; தமிழ்மொழிக் காப்பாளர்களும்
படித்தறியவேண்டும்.//
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
அச்சேற்றப் போதிய பொருளுதவி இல்லாமையால்தான் என் வலைப்பூவில், என் கருத்துக்களை இம்முதுமையிலும் ஒருவிரலால் கொத்திப் பதிந்து வைக்கிறேன்.
நடப்பது நடக்கட்டும்.
ஐயா, இந்தப் பதிவைப் படித்துவிட்டுத் தொடங்கியது தான் 'சொல் ஒரு சொல்' வலைப்பூ. அதில் நீங்கள் பட்டியல் இட்ட தனித் தமிழ்ச்சொற்களை வாரம் ஒன்றாய் எடுத்து இடுகிறேன். அதன் மூலம் தமிழ்ச் சொற்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வரலாம் என்று நம்புகிறேன். என்னளவிலும் சில நண்பர்கள் அளவிலும் இது மிக நல்ல பயனை நல்கி வருகிறது. இந்தப் பதிவினை இட்டதற்கு மிக்க நன்றி.
சொல் ஒரு சொல் வலைப்பூவின் முகவரி: http://solorusol.blogspot.com/
மிக அருமையான பதிவு. பேச்சுத் தமிழிலில் ஆங்கிலம் கலந்து பேசப்படுவதைக் கண்டு நொந்து போயிருக்கிறேன். நம் கண் முன்னே இப்படி நடப்பதை என்ன செய்து தடுப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். என்மகளுக்கு நூற்றியிருபது என்று சொன்னால் சட்டென்று புரியாது. ஒன்டொண்ட்டி என்று சொல்லவேண்டும். சமூகத்தில் பெரும்பாலான குழந்தைகள் இப்படியேதான் இருக்கின்றனர். என்று இந்த நிலை மாறும் என்று தெரியவில்லை.
மிக்க நன்றியும் வணக்கங்களும்
ஓகை நடராஜன்.
அன்பு ஓகை நடராஜன்,
தமிழ் மொழி கட்டாயம் பயிலவேண்டும் எனவும், அதைக் கற்றுதரும் ஆசிரியர்களின் தரம் தரமானதாக இருத்தல் வேண்டும் எனவும் சட்டமியற்றப்படின் ஒருபோது இயலலாம்.
வருகைக்கு நன்றி.
Post a Comment