ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)
*****************************************
21."ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? - அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!"
ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?
ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!"
22."ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? - அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!"
ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி?
மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா.
23."தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? - அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!"
தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?
கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா சிங்கா.
24."என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? - அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!"
தன்னையறிவது எப்படி சிங்கி?
தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது சிங்கா.
25."இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? - அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!"
இறையை அறிவது எப்படி சிங்கி?
இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!
26."என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? - அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!"
தவம் என்றால் என்னடி சிங்கி?
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம்.
27."என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? - அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!"
தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?
நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம் தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.
28."என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? - அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!"
ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?
எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.
29."ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? - அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!"
ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?
உயர்நிலை நினைவுதானடா சிங்கா.
30."கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? - சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!"
வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?
அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.
Thursday, October 19, 2006
ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)
Posted by ஞானவெட்டியான் at 9:24 PM
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment