Thursday, October 19, 2006

ஞானரத்தினக் குறவஞ்சி ( 11 - 20)

ஞானரத்தினக் குறவஞ்சி ( 11 - 20)
*****************************************

11."முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? - அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!"

முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?

மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும் கண்களடா சிங்கா.

12."முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? - அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!"

உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?

பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா(தலமடா) சிங்கா.

13."இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? - அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!"

இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?

இந்த உடலுக்கு உயிர் ஆதிமூலமே (விந்து சக்தி) சிங்கா.

14."இந்த வுடலுக் குயிர்வந்த தெப்படி சிங்கி? - அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா!"

இந்த உடலுக்கு உயிர் வந்ததுஎப்படி சிங்கி?

அம்மையின் வயிற்றின் நடுக்குழியா தொப்பூழ் கொடி வழி வந்ததடா சிங்கா.

இதன் வழியாக அன்னையின் வயிற்றினுள்ளே பரிபூரணமாயிருந்தது பிண்டம் மட்டுமே. குழந்தையாக வெளிவந்தவுடன் அன்னையின் தொப்பூழ் கொடியின்மூலம் அடிக்கும் சிவ்வென்ற மூச்சுக் காத்துதான் குழவிக்கு உயிர்.

இதை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார் பீரு முகமது அவுலியா.

15."இந்த உடலுக்கு உயிரெங்கே நின்றது சிங்கி? - அது
அந்தர மாயண்டமாக்கொடி யல்லவோ சிங்கா!"

இந்த உடலுக்கு உயிர்எங்கே நின்றது சிங்கி?

அந்தரத்தில் தொங்கும் முட்டையையும் குழந்தையையும் பிணைக்கும் கொடி அல்லவோ சிங்கா.

16."இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி? - அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா!"

என் உடல்எந்த கொடியின் கனி சிங்கி?

இது முந்திய(உன்தாயின்) கொப்பூழு கொடிதான் சிங்கா.

17."மாக்கொடி யென்பதை மானிடர்என்சொன்னார் சிங்கி?
மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!"

மாக்கொடி(தாயின் கொப்பூழ் கொடி) யென்பதை மானிடர் என் சொன்னார் சிங்கி?

கட்டுக்கு அடங்காத நஞ்சுக் கொடிஎன்றார் சிங்கா.

"மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!"

இதை "மட்டிலடங்காத மா "கலிமா" வடா சிங்கா!"எனக் கூறுவோரும் உண்டு.

கலிமா : "லா இலாஹ இல்லல்லாஹூ - முஹம்மதுர் ரஸுலுல்லாஹி."

18."எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி? - அது
எல்லா முடிந்த பொருள்வழி யாமடா சிங்கா!"

எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி?

அது எல்லா முடிந்த பொருள்வழியாம் (செய்த வினைகளுக்குத்தக்கவாறு) இந்த உலகினில் வந்தோமடா சிங்கா.

19."முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி? - அது
முன்சுடர் மூன்று முடலுயி ராத்துமா சிங்கா!"

அறிவை அறியும் வகைஎன்னடி சிங்கி?

சூரிய, சந்திர, அக்கினிச் சுடர் மூன்றும் சேர்ந்த உடல் உயிர் ஆத்துமாவால் அறியலாம் சிங்கா.

20."பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி? - அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா!"

அறிவை உணர்ந்த பின்னே அறிவர்கள் ஒன்றானதெங்கே சிங்கி?

பேதமேயில்லாத சிதாகாசப் பெருவெளியில் சிங்கா.

5 Comments:

Anonymous said...

mikavum bayanulla gnanankal.....

Anonymous said...

mikavum bayanulla gnanankal.....

ஞானவெட்டியான் said...

அன்பு hameed abdullah,
நன்றி

Anonymous said...

படித்தேன், மகிழ்ந்தேன்.

மிக்க நன்றி ஐயா.

ஞானவெட்டியான் said...

அன்பு பெயரிலியே,
மிக்க நன்றி.