99. தடாரி தண்ணுமை திண்டிமஞ் சல்லரி இடக்கை
படாது கூடியே யொலித்திடல்போல இப்பாரில்
விடாத நாணகன்று அன்னிய புருடனை விழைந்தே
அடாதுசெய்த மங்கையர்வசை யொலித்திடு மன்றே.
இவ்வுலகில் நாணமின்றித் தன் கணவனை விட்டு வேறொருவனை விரும்பிக் கூடும் மங்கையரைப் பற்றிய பழிச் சொற்கள்(அவதூறு) அவர்கள் எவ்வளவு இரகசியமாக வைத்து இருப்பினும் பேரிகை, திரிகை ஆகிய பேரிரைச்சல் தரும் இசைக்கருவிகள் முழங்கினால்போல் எங்கும் பரவி ஒலித்திடும்.
Sunday, February 15, 2009
விவேக சிந்தாமணி - 99
Posted by ஞானவெட்டியான் at 4:30 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Thursday, February 12, 2009
விவேக சிந்தாமணி - 129
129.தண்டுல மிளகின் றூள்புளியுப்பு தாளிதம் பதார்த்தமிதேஷ்டம்
தாம்புநீர் தோற்ற மூன்றுகோ லாடை சக்கிமுக்கி கைராந்தல்
கண்டங் காண்பான் பூசை முஸ்தீபு கமுற்குடை யேவல் சிற்றுண்டி
கம்பளியூசி நூலாடைக்கா பிலையை கரண்டகங் கண்டமேற் றங்கி
துண்டுமூறி யகாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாங் குறைவறத் திருத்தித் தொகுத்து பலவினி மமைத்துப்
பெண்டுகடுணையோ டெய்துவர் கன்னாய் பெருநிலை நீர்நிழல் விறகு
பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே.
அரிசி, மிளகுப் பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளித்த காய்கறி, வடகம், கயிறு, தண்ணீர், ஊன்றுகோல், ஆடைகள், சக்கிமுக்கிக் கல்(நெருப்புப் பெட்டி), விளக்கு, அறிவாள், செருப்பு, குடை, வேலைக்கு ஆள், சிற்றுண்டி, கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய், கரண்டி, நல்லெண்ணை, பணம், பூட்டு, கத்தி ஆகியவைகளைத் திருத்தமாகச் சேகரித்துப் பெண்கள் துணையோடு சரியான வாகனத்தோடு நிலையான நிலம், நல்ல நிழல், விறகு கிடைக்குமிடம், மனிதர்கள் தங்கும் இடம் கண்டு சமைத்து உண்டு பிரயாணம் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.
Posted by ஞானவெட்டியான் at 5:41 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி - 128
128. காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்கவந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையும் புரட்டி வைக்குங்கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழியடைக்குங் கபாடங்
காமமே யனைவரையும் பகையாக்கிகழுத்தறியுங் கத்திதானே.
காமமே, குல நெறியையும் நன்மையையும் கெடுக்கும் களங்கம்; வறுமைகள் அனைத்தையும் கொட்டி வைக்கும் பொக்கிடம்; முக்தி வழியை அடைத்துள்ள கதவு; அனைவருக்குள்ளும் பகை உண்டாக்கி கழுத்தை அறுக்கும் கத்தி.
Posted by ஞானவெட்டியான் at 5:14 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி - 127
127.பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கானாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை யழகிய சொக்கர்க் கரவம்
நீள்வாகன நன்னிலம்.
பறவை - ஈ(கொடு)
இலக்கம் - அஞ்சு(பயப்படு)
நாற்காலி - விலங்கு(விலகல்)
திண்புவி - வலிமிகுந்த உலகு
நற்குணமுள்ளவர்கட்குக் கொடு. பாவச் செயலுக்கு அஞ்சு. நண்பர் இல்லாதோரைக் கண்டால் விலகு. வலிமிகுந்த உலகை ஆளும் மதுரை சொக்கருக்குப் பணிவிடை செய்.
Posted by ஞானவெட்டியான் at 4:23 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Sunday, January 04, 2009
விவேக சிந்தாமணி - 126
126.என்னனைக் கன்று முத்தனைக் குனிக்கு
மிறைவனை யணைக்கு மேயன்று
மன்னனைக் கன்று பிள்ளைக் குதவா
வன்பினால் வருந்தி வாடுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த
முதுபகை வன்பிதா வுறாமல்
கன்னனைக் கொன்று விசயனைப் காத்த
கவத்துவ இராம கிருட்டிணனே.
(இடைச் செருகல்)
முத்துவுக்கும், கரும்பை வில்லாக உடைய மன்மதனுக்கும் தாயாய் விளங்கும் கடலைத் தாயாய் உடைய இலக்குமியை அணைப்பவன் நாரணனே! பிள்ளைக்கு உதவ இயலாத தயரதனின் பிள்ளை இராமனும் அவனே! வாலியைக் கொன்று சுக்கிரீவனைக் காத்து அப்பழி அவன் தந்தை இந்திரனை அடையவிடாதபடி தடுத்தவனும் அவனே! கர்ணனைக் கொன்று அருச்சுனனைக் காத்ததும் கபடம் நிறைந்த இராம கிருட்டிணனே!
Posted by ஞானவெட்டியான் at 5:43 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Saturday, December 27, 2008
விவேக சிந்தாமணி - 125
125.இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கண்மாறு
மந்தர நிலைகள்பேற மறுகயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயுந் தாரணியிற் றேசுமாளும்
அந்தணர் கருமங்குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.
(இப்படியும் கூறுவாருமுண்டு)
இந்திரன் பதமுங் குன்று மிறையவர் பதங்கள்மாறும்
மந்தர முதலா வுற்ற மலைகளின் நிலைக ணீங்கும்
சந்திரன் கதிரோன் சாய்வர் தரணியிற் றேயமாளும்
அந்தணர் கருமங் குன்றி னகிலமீ துயாவரே வாழ்வர்.
அந்தணர் - வேதியர்
கருமம் - செயல்கள்(வேதம் ஓதல் முதலியன)
குன்றின் - குறைந்தால்
இறையவர் - அரசன்
மந்தர நிலை - மந்தர மலை
தேயம் - தேசம்
வேதியர்கள் தத்தம் தொழிலான வேதம் ஓதல், ஓதுவித்தல், யாகம் செய்தல், திருமணம் முதலிய நற்கருமங்களையும், நீத்தாருக்கு(இறந்தவருக்கு) உரிய தேவ கருமங்களையும் செய்யாவிடில், இந்திரன் செல்வம் குறைந்து இந்திர பதவியும் பறிபோகும்; மந்தரம், கயிலை, இமயம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் ஆகிய எட்டு மலைகளும் நிலைகெட்டு நிலை பெயர்ந்து விடும்; சூரியன் சந்திரன் ஆகியோர் தம் நிலைகெட்டுச் சாய்வார்; இப்பூமியில் உள்ள தேசங்கள் அழியும்; இன்னும் இவ்வுலகில் யார் வாழ்வார்?
Posted by ஞானவெட்டியான் at 11:25 AM 0 comments
Labels: அந்தணர் கருமம், எட்டு மலை, விவேக சிந்தாமணி
Thursday, December 25, 2008
விவேக சிந்தாமணி - 124
இரு நண்பர்கள் தங்கள் கண்ட விலைமாதரை வருணித்தல்
******************************************************
124.சங்கரன் தேவி தமையன் மனைவி தனக்கு மூத்தாள்
ஆங்கவள் ஏறிய வாகனம் காணிவள் மற்றங்கவளோ
கொங்கைகள் ஈரைந்து உடையவளாயிக் குவலயத்தில்
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே.
நண்பனே! நான் கண்டவள் சிவனின் இல்லாள் பார்வதி; அவள் தமையன் திருமால்; திருமாலின் மனைவி இலக்குமி; அவள் தமக்கை மூ(த்த)தேவி; அவள் ஏறிய வாகனமாம் கழுதை என்று அறிக.
மற்றவன் கூறியது: நான் கண்டவள் வயிரவக் கடவுளின் வாகனம்; பத்து மார்பகம் உடையவள்; ஊரெங்கும் சுற்றி அலையும் நாய் என அறிக.
(இது இடைச் செருகலாம்)
Posted by ஞானவெட்டியான் at 3:53 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Monday, December 22, 2008
விவேக சிந்தாமணி - 123
இரு சகோதரிகள் தங்களின் தலைவனை வருணித்தல்
*************************************************
123.அரவிந்தநண்பன் சுதன்றம்பி மைத்துனன் அண்ணன்கையில்
வரமுந்தியாயுதம் பூண்டவன் காணுமற் றங்கவனே
பரமன்றி கிரியையேந்திய மைந்தன் பகைவன்வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான்றன் சேவகனொண்தொடியே.
தமக்கை கூற்யது:
என் வீட்டிற்கு வந்தவன் தாமரைக்கு நண்பனாம் சூரியன், அவன் மைந்தன் கர்ணன், அவன் தம்பி அருச்சுனன், அவன் மைத்துனன் கண்ணன், அக்கண்ணனின் அண்ணன் பலராமன், அப்பலராமனின் கையில் உள்ள கலப்பை ஆயுதம், அதைத் தாங்கும் எருமைக்கடாவாகும்.
தங்கை கூறியது:
என் வீட்டிற்கு வந்தவன் சிவன் வசிக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணன், அவ்விராவணனின் பகைவனான இராமன், அவன் தொண்டனும், இராவணனை எதிர்த்து மலையைப் பெயர்த்தெடுத்துப் போர் புரிந்தவனுமாகிய அநுமனும் ஆகும்.
Posted by ஞானவெட்டியான் at 12:51 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Friday, December 19, 2008
122.விவேக சிந்தாமணி
122.அறங்கெடு நிதியுங்குன்று மாவியு மாயுங்காய
நிறங்கெடு மதியும்போகி நீண்டதோர் நரகிற்சேர்க்கு
மறங்கெடு மறையோர் மன்னன்வணிகர் நல்லுழவோரென்றுங்
குலங்கெடு வேசைமாதர் குணங்களை விரும்பிவோர்க்கே.
இப்படியுங் கூறுவர்:
அறங்கெடு நிதியுங் குன்றுமாவியு மாயுங்காய
நிறங்கெடு மதியும்போகு நீண்டதோர் நரகங்கிட்டும்
மறங்கெடுங் கீர்த்தி நீங்கும் வசைமொழி பரவுஞ்சாதித்
திறங்கெடும் வேசைமாதர் சேர்க்கையை விரும்பினோர்க்கே.
மறையோர் = வேதியர்
வேசை = விலைமாதர்
காயம் = உடல்
மதி = அறிவு
மறம் = வீரம்
கீர்த்தி = புகழ்
திறம் = மேன்மை
மனித இனத்தை, வேதியர், மன்னன், வணிகர், உழவர் ஆகிய பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.(இதில் எமக்கு உடன்பாடு இல்லை). ஆகவே உடல் ஆசைக்காக பரத்தையரை நாடி விரும்பும் மனுக்குலத்தில் உள்ள அனைவரின் தருமம் கெடும்; ஈட்டிய பொருளும் கெட்டுக் குறைந்துவிடும்; விந்து விரையத்தால் சக்தி குறைந்து வீரம் கெட்டு உயிரும் போகும்; ஊரில் உள்ளவர்களின் ஏளனம் கூடும்; மேன்மை குறையும்; சக்தி குறைவால் உடல் அழகு குன்றும்; அறிவு மழுங்கும். இவை அழிந்தால் நீண்ட நெடிய நரகு கிட்டும்.(இவ்வுலகில் இருந்து அடையும் இன்னல்களே நரகாகிவிடும்)
Posted by ஞானவெட்டியான் at 10:11 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Monday, December 01, 2008
121 - விவேக சிந்தாமணி
121.வேலியானது பயிர்தனை மேய்ந்திட விதித்தாற்
காலனானவ னுயிர்தனைக் கவர்ந்திட நினைத்தால்
ஆலமன்னையர் பாலகர்க் கருத்துவாரானால்
மேலிதோர்ந்துடன் யார்கொலோ விலக்குவர் வேந்தே.
ஆலம் = விடம்
அருத்துவர் = ஊட்டுவர்
ஓர்ந்து = அறிந்து
விலக்குவர் = தடுப்பவர்
வேந்தே!
காவல் காக்கும் வேலியே விலங்குகளை அழைத்துத் தன் காவலுக்குட்பட்டுள்ள பயிரை மேய்ந்துகொள்ளுங்கள் என்றால் பயிர் யாரிடம் முறையிடும்? உயிர் கவருவதையே தொழிலாக உடைய மறலியாம் எமன் எவ்வுயிரைக் கவர்ந்தாலும் அவன் செயலைத் தடுத்து நிறுத்த இயலாது. பாசமும் நம்பிக்கையும் உடைய தாயே தன் குழவிக்கு நஞ்சூட்ட நினைத்தால், அக் கொடிய செயலை அறிந்து குழவியால் தடுக்க இயலாது. இவைபோல் குடிமக்களைக் காக்கவேண்டிய மன்னனே அவர்களை அழிக்க நினைத்தால், அக்குடிமக்களால் அதைத் தடுக்க இயலாது.
ஆகவே, அரசன் தன் குடிகளைக் காக்கவேண்டுமேயன்றி அழிக்க நினையாதிருத்தல் வேண்டும்.
Posted by ஞானவெட்டியான் at 12:12 PM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Friday, November 28, 2008
விவேக சிந்தாமணி - 120
120.ஒருவனே யிரண்டு யாக்கை யூன்பொதியான நாற்றம்
உருவமும் புகழுமாகு மதற்குள் நீயின்பமுற்று
மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடு மற்றியாக்கை
திறமதா யுலகமேற்றச் சிறந்து பின்னிற்குமன்றே.
இப்படியும் கூறுவர் சிலர்:
ஒருவனுக் கிரண்டி யாக்கை யுண்டொன்றூன் பொதிந்த நாற்ற
உருவமாம் புகழொன்றாகு முலகிலே யின்பமுற்று
மருவிய பூததேக மாய்ந்திடு மற்றொன்றென்றுந்
திருவுட னுலகமேத்தச் சிறந்துபின் னிற்குமன்றே.
யாக்கை = உடல்
உற்று = அனுபவித்து
ஒரு மனிதனுக்கு இரு உடல்கள் உண்டு. ஒன்று சதைப்பிண்டத்தால் ஆகிய பூத உடல்(பொய்யுடல்); மற்றொன்று தன் செயல்களால் கிட்டும் புகழ் உடல்.
நாற்றமுடைய நிலையற்ற பொய்யுடல் இவ்வுலக வாழ்வின் நிலையற்ற சுகங்கள் அனைத்தையும் நுகர்ந்து அழிந்து விடும்.
புகழ் உடம்போ எக்காலத்தேயும் அழகோடு உலகில் உள்ள ஆன்றோர் வாழ்த்த நிலைபெற்றுச் சிறந்து விளங்கும்.
ஆகவே, பூதௌடல் அழிவதற்கு முன்னமே அதன் உதவிகொண்டு என்றும் நிலைபெறும் புகழுடலைத் தேடிக் கொள்ளல் வேண்டும்.
Posted by ஞானவெட்டியான் at 11:45 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Sunday, July 27, 2008
119.அருமையும் பெருமைதானு
119.அருமையும் பெருமைதானு மறிந்துடன்படுவர் தம்பால்
இருமையு மொருமையாகு மின்புறற் கேதுவுண்டாம்
பரிவிலாச் சகுனிபோலப் பண்புகெட்டவர் நட்பால்
ஒருமையி னிரயமெய்து மேதுவே யுயருமன்னோ.
(இப்படியும் சில நூல்களில் உண்டு)
அருமையாம் பெருமை கொண்ட வறிவினருறவு தன்னால்
இருமையு மொருமை யாகு மின்புறற்கேது வுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட் டவர்க டம்மால்
உரிமையாய் நிரய மெய்து மேதுவே யுயரு மன்னோ.
அருமையாம் = கிடைத்தற்கு அரிதாகிய
பெருமை = உயர்வு
உறவு = நட்பு
இன்பு = இன்பம்
உறற்கு = அடைவதற்கு
ஏது = காரணம்
பரிவு = அன்பு
அறிவுடையாரோடு நட்புக் கொண்டால், அவர்தம் உறவால் தம்மோடு நட்புக்கொண்டோரை நல்வழிப்படுத்தி அவர்க்கு இம்மை, மறுமை ஆகிய ஒருமையில் ஒரே விதமான இன்பத்தை அடைய வழி காட்டுவார்கள்.
அன்பிலாச் சகுனிபோல் கெட்டவர்களின் நட்புறவு கொண்டால், அவர்கள் தம்நண்பர்களை கெட்ட வழியில் புகுத்துவர். அது அவர்கட்கு நரகத்தை அடைய வழி உண்டாக்கும்.
Posted by ஞானவெட்டியான் at 11:31 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Monday, December 31, 2007
118.ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்ற
விவேக சிந்தாமணி
*********************
118.ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்றவர்க்குள்
சூதினால் கபடஞ்செய்து துணைபிரிந்திடுவ ரென்றால்
வேதியன் பவளவாயில் வேசைதாய் பச்சைநாவி
யூதியகதை போலாகி யறுநர கெய்துவாரே.
முதலில், இரு நண்பர்கள் நட்பு மிகுதியால் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். சில நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் அவமதிக்க வேண்டுமென எண்ணி, அதற்காக சூது வஞ்சகங்கள் பல செய்தனர். அதனால் பகை நேர்ந்து ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிவது எவ்வாற் உள்ளதெனில்:
ஒரு விலைமாது, தன் மகளோடு இணைபிரியாது வாழ்ந்துவந்த வேதியனின் வாயில் கொடிய விடத்தை வைத்து ஊதிய கதை போலாகும்.
Posted by ஞானவெட்டியான் at 11:18 AM 4 comments
Labels: விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி
***********************
117.மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரணமானான்
செங்கமலச் சீதைசொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்
தங்கையவள் சொற்கேட்ட இராவணனுங் கிளையோடு ...............தானுமாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் ..............நகைப்பர்தாமே.
மங்கை=(இங்கு) சுயநல ஆசைமிகு பெண்டிர்
கிளையோடு= சுற்றத்தாரோடு
இராமாயணத்தில் வரும் நிகழ்வு.
மனைவி கைகேயியின் சொற்கேட்டு சிறிதும் சிந்தியாது மன்னன் தயரதன் சிறப்புக்களை உடைய இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு அப்பிரிவைத் தாங்காது சோகத்தில் இறந்தான். இராமனும் இலக்குமியாகிய சீதாப் பிராட்டியின்,"மானைப் பிடித்துத் தாருங்கள்" எனும் சொற்கேட்ட மாத்திரத்திலே யோசியாது மானை விரட்டிச் சென்று சீதையை இழந்து வருந்தினான். தன் தங்கையின் சூது நிறைந்த சொற்களை அப்படியே நம்பிய இராவணனும் சீதையைச் சிறையெடுத்து, அதற்காகத் தன் சுற்றத்தாரோடு இராமனல் அழிக்கப்பட்டான்.
ஆகவே, இவர்களைப்போல் சுயநல ஆசை மிக்க பெண்களின் சொல்கேட்டு சிறிதும் சிந்தியாது அப்படியே கேட்டு நடப்போருக்கு தீங்கு உறுதியாய் வரும். அதுவன்றி, அவரடையும் அழிவு கண்டு இப்பெரிய உலகில் உள்ளோர்கள் ஏளனம் செய்து சிரிப்பார்கள்.
Posted by ஞானவெட்டியான் at 11:17 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
116.மையது வல்லியம்வாழ் மலைக்குகை
விவேக சிந்தாமணி
********************
116.மையது வல்லியம்வாழ் மலைக்குகை தனிற்புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி யடவியிற் றுரத்தும் காலை
பையவே நரிக்கோளாலே படுபொரு ளுணரப்பட்ட
வெய்யவம் மிருகந்தானே கொன்றிட வீழ்ந்ததன்றே.
மையது=ஆட்டுக்கிடாவானது
வல்லியம்=புலி
அடவி=காடு
வெய்ய=கொடிய
ஓர் ஆட்டுக்கடா, புலியிருக்கும் குகைக்குள் புகுந்து, அச்சம்தரும் கொடிய விலங்கைப்போல் நடித்தது. அந்த உருவங்கண்டு புலியும் பயந்து குகையை விட்டு ஓடியது. அப்பொழுது அங்கு வந்த வந்த நரி புலியை நோக்கி,"இந்த அற்பமான ஆட்டைக் கண்டு ஏன் பயந்து ஓடுகிறாய்" என்று கோள் சொல்லப் புலியானது ஆட்டின் நடிப்பாகிய செயலைக் உணர்ந்து திரும்பிச்சென்று ஆட்டின்மீது பாய்ந்து கொன்றழித்தது.
ஆகவே இதுபோன்று நடிப்பாகவேனும் செய்யத்தகாத செயல் செய்வோருக்கு (கேடு வரும்)அழிவு உறுதி.
Posted by ஞானவெட்டியான் at 11:14 AM 3 comments
Labels: விவேக சிந்தாமணி
115.மதியிலாமறையோன் மன்னன் மடந்தையை
விவேக சிந்தாமணி
*********************
115.மதியிலாமறையோன் மன்னன் மடந்தையை வேட்கையாலே
இருதுவதுகாலந்தன்னில் தோடமென்றுரைத்தேயாற்றில்
புதுமையா யெடுத்தபோது பெட்டியில் புலிவாயாலே
அதிருடன் கடியுண்டன்றே யருநர கடைந்தான்மாதோ.
மதியிலா=அறிவற்ற
மறையோன்=வேதங்களைக் கற்றறிந்தவன்
இருதுவதுகாலந்தன்னில்=பருவமடைந்த காலத்தே
தோடம்=கேடு
அதிர்=நடுக்கம்,அச்சம்
முன்னொரு காலத்தே அறிவற்ற வேதியன் ஒருவன், தன்னிடம் கல்வி பயின்ற மன்னன் மகளின் அழகில் மயங்கி, அவளை அடையவேண்டி முயன்று தோற்று, அவளைச் சூழ்ச்சியால் அடைய எண்ணி, அவளின் இருது காலப்படி அவளுக்குத் தோடம் இருப்பதாகவும், அதனால் அவளைப் பெட்டியில் அடைத்து ஆற்றில் விட்டு விடுக என்று மன்னனிடம் கூறி அவனை அங்ஙனமே செய்ய வைத்தான். பின்னர் அப்பெட்டியைத்தேடி வெகுதூரம் சென்றான். அதற்குள், ஆற்றின் கரையில் வந்த ஒரு அரசன் பெட்டியைத் திறந்து அதற்குள்ளிருந்த இளவரசியை மீட்டுப்பின் அப்பெட்டியினுள்ளே ஒரு புலியை அடைத்து அனுப்பினான். அது அறியாது வேதியன் பெட்டியைக் கண்டு மகிழ்வுற்றுத் திறந்தான். அங்கிருந்த புலியைக்கண்டு அஞ்சி நடுங்கினான். அப்புலியும் வேதியனைத் தின்றது; அவனும் நரகம் அடைந்தான்.
ஒருவன், (பெண் வேட்கையால்) ஒருவருக்குத் தீங்கிழைத்தால் அவன் இறந்து நரகம் எய்துவான்.
Posted by ஞானவெட்டியான் at 11:02 AM 3 comments
Labels: விவேக சிந்தாமணி
114.நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை
விவேக சிந்தாமணி
**********************
114.நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தார்
கட்டழற் காமத்தீயாற் கன்னியைக் கலக்கினோரும்
அட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான்
குட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.
குய்யம் - வஞ்சனை
நலம் - அழகு
சேர்ந்தார் - கூடிக் குலவியவரும்
கட்டழல் - மிகுதியான நெருப்பு
கலக்கினோர் - கற்பழித்தோர்
நட்பு மிகுந்த இடத்தில் வஞ்சனை புரிந்தவனும், பிறன் மனைவியின் அழகில் மயங்கி அவளுடன் கூடி அநுபவித்து மகிழ்ந்தவனும், காமத்தீயால் வெந்து உந்தப்பட்டு கன்னியைக் கூடிக் கற்பழித்து, அவள் மனம் கலங்கப் பின் அவளை மணம் செய்ய மறுத்தவனும், ஒரு உயிரின் உடலைக் கொன்று இறைச்சியைத்(கசாப்பு) தின்பவனும், அமைச்சனாய் இருந்து அரசனைக் கெடுத்தவனும், ஆகியோர் இப்பிறவியில் கொடிய தொழு நோய்கண்டு வருந்தி மறு பிறவியில் நரகில் மூழ்குவராம்.
Posted by ஞானவெட்டியான் at 10:57 AM 5 comments
Labels: விவேக சிந்தாமணி
113. உயிரனை யானுடன் கலந்த உளவறி
விவேக சிந்தாமணி
********************
113. உயிரனை யானுடன் கலந்த உளவறிந் தீண்டெனை
.............மணந்தோ னுடன்றிச் செய்கை
செயலென யென்றிலை மறைகாயெனத்
............துணிவதா லிருவரையுந் தீதென்
றயில்விழியாய் மயற்போது வூழ்வலித்தினும்
...........பெண்மதி யெனது வூழின்
இயலென வள்ளுவ ருரைத்தார் சான்று
...........நீயெனப் புகன்றே னின்புற்றானே.
வேல் போன்ற கூரிய கண்களை உடைய தோழியே! எனது உயிரினும் சிறந்த ஆசைநாயகனுடன் நான் கூடிக் குலவி வரும் மருமத்தை என் கணவன் இலை மறை காயென அறிந்து பின், என் மீது சினங் கொண்டு இப்படிப்பட்ட இழிவான காரியம் செய்யத் துணிந்தமைக்குக் காரணம் யாதென வினவ, அப்பொழுது உண்டெனினும் இல்லையெனினும் எனக்குத் தீங்காகவே முடியும் என சிந்தித்து, காமம் பொதுவெனவும், தலையில் எழுதிய எழுத்து தவறாது எனவும் கூறினேன். அவர், முன்னிலும் அதிகக் கோபங்கொண்டு, விதியை மதியால் வெல்ல முடியாதா? என்று கேட்டான். அதற்கு, "ஐயோ! பெண் புத்தி பின் புத்தி அல்லவா? ஆண்களுக்கு சிறந்த புத்தி உண்டே! மேலும் இதற்கு சாட்சி தாங்களாக இருக்க வேறு தேடுவதேன்?" என்றேன். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். இதை அறியாயோ?
கயல்விழி இழிமாதர் சொல்லை ஆராயாமல் அப்படியே நம்பலாகாதே!
Posted by ஞானவெட்டியான் at 10:53 AM 4 comments
Labels: விவேக சிந்தாமணி
112.நிலமதிற் குணவான்றோன்றி னீள்குடி
விவேக சிந்தாமணி
*********************
112.நிலமதிற் குணவான்றோன்றி னீள்குடித்தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந்தோன்றும் சந்தனமரத்திற் கொப்பாம்
நலமிலாக் கயவன்றோன்றின் குடித்தனம் தேசம்பாழாம்
குலமெலாம் பழுதுசெய்யுங் கோடரிக்காம்பு நேராம்.
உலகினில் நல்ல குணமுடைய ஒருவன் பிறந்தால், அவனும் அவன் குடியைச் சேர்ந்த அனைவரும் நீண்டு வாழ்வார்கள். அவன் இருக்கும் இடமெல்லாம் நறுமணம் கமழும்; அந்த மணமானது சந்தண மரத்திலிருந்து வரும் மணத்துக்கு ஒப்பாகும். உலகெலாம் புகழ் மணம் வீச வாழ்வான். அப்படி இல்லாது, நன்மை இல்லாத கீழ்மகன் பிறந்தால், அனைவருக்கும் தீங்கு செய்யும் குணம் இருப்பதால், அவன் குலத்தோருக்கும் கேடு செய்வான். இவன் கோடாரிக் (பிடிக்கும் மரத்தாலாகிய)காம்பாகப் பிறந்தானே எனக் குலத்தோரும் உலகமும் பழிக்கும்.
Posted by ஞானவெட்டியான் at 10:52 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
111.சலந்தனிற் கிடக்கு மாமை சலத்தை
விவேக சிந்தாமணி
*********************
111.சலந்தனிற் கிடக்கு மாமை சலத்தை விட்டகன்றபோது
கொலைபுரி வேடன்பற்றி வலையினிற் கொண்டுசெல்ல
வலிமைசே ரவனை வெல்லும் வகைபுரிந் ததனைக்காத்த
கலையெலி காகம் போல்வார்க் கலத்தலே நலத்ததாமே.
இப்படியும் உரைப்பவர் உண்டு:
சலந்தனில் கிடக்குமாமை சலத்தைவிட் டகன்றபோது
கொலைபுரி வேடன்கண்டு வலையினிற் கொண்டுசெல்ல
வலுவினாலவனை வெல்ல வகையொன்று மில்லையென்று
கலையெலி காகஞ்செய்த கதையென விளம்புவோமே.
இது பஞ்சதந்திரக் கதையில் வருவது:
முன்னொரு காலத்தில், ஒரு கலை(மான்),காகம், எலி, ஆமை ஆகிய நால்வரும் நண்பர்களாயிருந்தன. நீரிலிருந்த வெளிவந்த ஆமையைக் கொலைபுரிவதையே தொழிலாகக் கொண்ட வேடன் பிடித்துத் தன் வலைபோன்ற பையில் ஆமையை இட்டுக்கொண்டு சென்றான். வேடனை எதிர்க்கும் வல்லமை நம் மூவருக்கும் இல்லையென மானும், காகமும் எலியும் ஒரு தந்திரம் செய்தன. மான் இறந்ததுபோல் கிடக்க, காகம் அதன்மேல் கொத்தி தின்னுவது போல் நடிக்க, வேடனும்,"ஆகா! நமக்கு இன்று நல்ல விருந்து" என எண்ணி, ஆமையைப்போட்டுவிட்டு மானை எடுக்க ஓடினான். அச்சமயம், எலி வலையைக்கடித்து ஆமையை விடுவிக்க ஆமை அருகில் உள்ள குளத்தில் இறங்கி தப்பித்துக் கொண்டது. மான் எழுந்து ஓட, காகம் பறக்க எலியும் ஓடி மறைந்தது. இப்படிப்பட்ட நண்பர்களுடன்தான் பழகவேண்டுமென்பது கருத்து.
"உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
என்னும் குறளுக்கிணங்க, இடுக்கண் வருங்கால் நண்பர்களைக் காக்கவேண்டுமெனும் நீதியும் சொல்லப்பட்டுள்ளது.
"இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதே!" என்னும் நீதியும் விளங்கும்.
Posted by ஞானவெட்டியான் at 10:51 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி