Sunday, June 08, 2008

அகத்தியர் பஞ்சபட்சி சாற்றிறம்-3


காப்பு
*******

3."ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்

நின்றநிலை யாருடத்தில் நேருமே - நன்று

வழுவா துரைத்தாயும் வல்லவர்கள் சொன்ன

முழுவா கடத்தின் முறை."

நன்றாக யாதொரு தவறுமின்றி வழுக்காது ஆஅய்ந்து உரைக்கும் வல்லவர்கள் சொன்ன முழுமையான பட்சி நூலின் முறையாவது, தன்னிடம் வினாவெழுப்ப வந்த தூதன், அவன் வந்த திசை, நின்ற இடம், நிற்கும் நிலை, எழுப்பிய வினாவின் முதலெழுத்து ஆகியவற்றை ஆய்ந்து சொல்லலாம். இங்கு "வாகடம்" என்பது வைத்திய நூலை மட்டும் குறிக்காது சாற்றிற நூல்களையெல்லாம் குறிக்கும். நின்ற இடத்தை வைத்துச் சொல்லலுக்கு "நட்ட சாதகம்" என்னும் நூல் உதவும். "சர நூல்" நிற்கும் நிலையை வைத்துச் சொல்ல உதவும். ஆக, வழக்கிலிருக்கும் இந்நுண்கலைகள் எல்லாம் அறிந்தவனாலேயே சரியாகக் கணிக்க இயலும்.

Saturday, June 07, 2008

பஞ்சபட்சி சாற்றிறம் - 2

அகத்தியர் பஞ்சபட்சி சாற்றிறம்
**********************************

2. "துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்ய மலர்ப்பாதஞ் சேவித்தேன் - வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்."

பரிசுத்தமான வெண்தாமரையில் எழுந்தருளியிருக்கிற தோகைமயிலைப் போன்ற கலைவாணியே!
உன்னுடைய அழகிய பொன்போன்ற சிவந்த தாமரைமலர் போன்ற திருவடித்தாள் வணங்கினேன்.
ஆகையால், நீ இவ்வுலகில் இருக்கும் சகலசீவராசிகளையும் பட்சிகளாகப் பாவித்துப் பிரித்து, அதனதன் குணம் முதலியவைகளை விளக்கும் கலையை எம்மனத்தில் உணர்த்தி இருக்கச் செய்யவேண்டும்.