நண்பர் சம்மட்டியின் வினாக்களுக்கு விடை:
************************************************
தங்களின் வினாவில் 2 பகுதிகள்:
1. முன்சென்ம பாவ புண்ணியங்கள்.
அன்புடையீர்,
முற்பிறப்பு, மறுபிறப்பு பற்றி நான் அறிந்தவரை...
'வினையும் அதன் மறுவினையும் சமமாகவும் எதிரானதாகவும் இருக்கும்' என்று
கூறியது நியூட்டனின் சித்தாந்தம். இதை இயற்பியல் உலகில் அப்படியே நாம்
ஏற்றுக்கொள்கிறோம். இதன் ஆன்மிகப் பயன்பாடுதான் 'கர்மா தியரி' என்று
சொல்லப்படும் வினைப்பயன் கொள்கை.
'வினை விதைத்தவன் வினை அறுப்பான்', 'முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்', 'தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றும்
முன்னோர்கள் வேண்டிய அளவு நம்மை எச்சரித்தனர். ஆனால் நாம் 'மூத்தோர் சொல் வார்த்தை விடம்' என்று பெரும்பாலும் நினைக்கிற காலத்தில் இருக்கிறோம். தவறு செய்தவன் நம் கண் முன்னாலேயே தண்டனை பெறவேண்டும், இல்லையென்றால் தெய்வம் என்ற ஒன்றே கிடையாது எனப் பேசுகிறோம்.
தமிழில் 'தெய்வம்' என்ற சொல்லுக்கு 'விதி' என்ற பொருளும் உண்டு. 'விதி'யை
யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன்
'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று மிக உறுதியாகக் கூறினான். இந்துமதம்
கடவுளை சாட்சி பூதம் என்று ஒருநிலையில் சொல்கிறது. நீங்கள் வானத்தை
நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது.
உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம்
பார்த்துக் கொண்டுதான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப்
பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது.
எச்சில் துப்பினால் எச்சில் விழும், வானத்தை நோக்கி அமிலத்தை
ஊற்றினால்... ஊற்றியவன் அமில மழையில் நனைவான், உருக்குலைந்து போவான்.
அப்போது, 'ஐயோ, இறைவா! உனக்கு என்மீது கருணை இல்லையா?' என்று கதறுகிறான். அவநம்பிக்கைப் படுகிறான். மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பம் வருகிறது என்று புலம்புகிறான். பல சினிமாக்களில் வருவது போல் சாமி படத்தைக் கழட்டி எறிகிறான். சில சமயம் கடவுள் நம்பிக்கையையே இழக்கிறான்.
கீரை விதை போட்டால் ஆறுமாதத்தில் பலன். வாழை நட்டால் ஒரு வருடத்தில்
பலன். தென்னை நட்டால் நான்கு வருடத்தில் பலன். தேக்கு மரம் அறுபது
வருடங்கள் எடுக்கிறது.
அதேபோல, நமது நல்ல, தீய செயல்களும் பலன் தர அவற்றின் தன்மைக்கு ஏற்பக் குறைவாகவோ அதிகமாகவோ நாள் எடுக்கின்றன. நமது கரும வினைகளை முன்னோர்கள் மூன்று வகையாகப் பிரித்தார்கள்: பிராரப்தம், ஆகாமியம், சஞ்சிதம் என்பவையே அவை.
பிராரப்தம் என்பது பலன் தரத்தொடங்கிவிட்ட வினைகள். விதைத்து, மரம்
வளர்ந்து, கனி தரத் தொடங்கிவிட்டது. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும்
சுகதுக்கங்கள் இந்த வினைப் பயன்கள்தாம்.
ஆகாம்யம் என்பது விதைத்து வளரத்தொடங்கிவிட்ட பயிர் போல. அது மரமா,
செடியா, கொடியா என்பதைப் பொறுத்துத் தக்க சமயத்தில், இந்தப் பிறவியிலேயே பலன் தரும்.
சஞ்சிதம் என்பது விதைக் கையிருப்பு. ஆனால் பயிராகவில்லை. இந்தப்
பிறவியிலோ இன்னும் வரும் பிறவிகளிலோ எப்போது வேண்டுமானாலும் பலன் தரும்.
'போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்'
என்று ஆண்டாள் திருப்பாவையில் இரண்டு வகை வினைகளைக் கூறுகிறாள். ஒன்று, முன்பே செய்துவிட்ட பிழை, அடுத்தது, இன்னும் வரப்போகும் பிழை (அதாவது அந்தப் பாவங்களின் விளைவு).
ஆக, பாவம், புண்ணியம் இவை இரண்டின் மூட்டையைச் சுமந்து பிறப்பு வருகிறது. அந்தப் பிறப்பு மனிதப் பிறப்பாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
பாவ புண்ணிய மூட்டையின் பலனாக மீண்டும் மனிதனாகத்தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என்று சொல்லி நிறுத்தினேன்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
என்று திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32) எப்படி மனிதன் கல் போன்ற ஜடப்
பொருள் தொடங்கி புல் முதல் தேவர் வரையான (ஓரறிவிலிருந்து பல்லறிவுடைய பிறவிகள்) பலவகைப் பிறப்பும் எடுத்துத் துயரப்பட்டேன் என்று
பட்டியலிடுகிறார்.
ஒருமுறை புத்தரின் முக்கியச் சீடரான மௌத்கல்யாயனர் மற்றும் லட்சணர்
கிருத்திரகூட மலையிலிருந்து இறங்கி வரும்போது பாம்புத் தோற்றம் கொண்ட
பேயைப் பார்க்கின்றனர். இந்த அதிசயத்தைப் போய் அவர்கள் புத்தரிடம்
கூறியதும் அவர் கூறினார்:
"புதிதாகக் கறந்த பால் உடனே தயிராகாது. அதுபோலத்
தீய செயல்களின் விளைவுகள் உடனே தெரிவதில்லை.
அத்தீய செயல்களின் பலன்கள் நீறுபூத்த நெருப்புப் போல
மறைந்திருந்து பாவம் செய்த அறிவிலிகளைச் சுடுகின்றன."
என்று கூறினார் (தம்மபதம்: மூடர் இயல்: 12). மேலும் அவர் அந்தப் பேயின்
பின்புலத்தை இவ்வாறு விளக்கினார், "காஸ்யப புத்தர் என்று ஒருவர்
இருந்தார். அவரது காலத்தில் துறவிகள் பலர் ஊருக்குள் சென்று பிச்சை
எடுத்தனர். இவர்களை விரும்பாத ஒரு விவசாயி பிட்சுக்களின் குடில்களைத்
தீயிட்டுக் கொளுத்தினான். அதன் காரணமாகவே அவன் பாம்பு உருவம் கொண்ட பேயாகப் பிறப்பெடுத்திருக்கிறான்" என்று விளக்கினார்.
எதுவரை செயல்களைச் செய்கிறோமோ, அதுவரை பிறப்பும் இறப்பும் என்னும் சுழல் நம்மைத் தொடரும். இன்பம் துன்பம் என்னும் இருமைகள் இருக்கும்.
முற்பிறவியும் மறுபிறவியும் நிச்சயம் உண்டு. அப்படி செயலைத் தவிர்க்க
வேண்டுமா? அது தனிக் கேள்வி. அதற்கு விடை சொல்லப் போனால் இன்னும் பெரிதாக விரியும்.
ஆனால், ஒருவன் துன்பப்படும் போது "இது உன் வினைப்பயன்" என்று கூறிப்
பாராமுகமாக இருக்கும் உரிமை சக மனிதனுக்குக் கிடையாது. கருணை உள்ளவனே ஆன்மிகவாதியாக முடியும். அதனால்தான் வள்ளலார் பெருமான், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று உருகினார். அன்பினால் பிறருக்குச் செய்யும் தன்னலம் கருதாத சேவை மனிதனின் ஆணவத்தை அழித்து, அவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்கிறது.
அதனால்தான் தன்னலம் கருதாத பேரன்பே ஆன்மிகம். எல்லாவுயிரும்
தம்முயிர்போல் எண்ணுவதே ஆன்மிகம். ஆன்மிக வழி ஒன்றே பிறப்பு-இறப்புச்
சுழலினின்று விடுபடுவதற்கான தந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறது.
முன்னர் பாவ-புண்ணியங்களை வெவ்வேறு காலங்களில் விளையும் விதைகளுக்கு ஒப்பிட்டோம். அந்த விதைகளை வறுத்துவிட்டால் விளையாதல்லவா? அதுதான் சூட்சுமம்.
அன்பின்
மதுரபாரதி
*******************************************
2.இறைவனிடமிருந்து வந்த நாம் இறையுடன் சேர்ந்தபிறகு, பின்னரும் அதிலிருந்து பிரிந்து பிறப்பெடுப்போமா?
குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, நீ வேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். உன்னிலிருந்து வேறுபட்டுவிட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலையடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான்.
என்னில் உன்னை(இறையை) நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவின்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றேயெனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின், வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றியிருப்பினும், இரண்டும் பிரம - இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும். சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.
பிரபஞ்சம் என்றுமே சலனத்தால் சுழன்றுகொண்டிருப்பது. பிரிந்துவந்த ஒன்று மறுபடியும் வந்த இடத்திற்கே சேரவேண்டும். மண்ணிலிருந்து வந்தவுடல் மண்ணுக்குள்ளேயே சென்றுவிடுகிறது. சுழற்சி உறுதியானால், பூரணத்தைச் சார்ந்த ஒன்று மறுபடியும் சலனத்தால் பிரிந்துதான் ஆகவேண்டும்.
Friday, December 28, 2007
நண்பர் சம்மட்டிக்கு
Posted by ஞானவெட்டியான் at 10:08 AM 2 comments
Labels: ஞானமுத்துக்கள்
அன்பும் சிவமும்
அன்பும் சிவமும்
********************
திருமந்திரம்
*************
"அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே."
புறத்தான் = அன்பின் மேலுள்ளவன்.
உடலாயுள்ளான் = அன்பினையே உடலாக உள்ளவன்.
அணுகிய = நெருங்கிய
முன்பினுள்ளான் = உலக உற்பத்திக்கு முன்னும், அதன் அழிவுக்குப் பின்னும்
சிவனாம் சிவம் இன்ப இயல்பை உடையவன். இன்ப இயல்பின் வாயிலாம் அன்பினுள்ளே இருக்கிறான். அந்த அன்புக்குக் காவலாய் புறத்தாகவும் உள்ளான். அன்புக்குப் புகலிடமாய் இருப்பதால் உடலாயும் உள்ளான். "அன்பும் சிவமும் ஒன்றே; அது உடலும் உயிரும் போல" என்னும் கருத்து இருக்கிறது. என்றாலும், உலகத் தோற்றத்துக்கு முன்னும், அதன் மாற்றத்துக்குப் பின்னும், ஒன்றுபோல் என்றும் நின்று நிலவுபவன் சிவன். அவன் முற்றுந் துறந்த முனிவருக்கெல்லாம் முதல்வன். வேறெதற்கும் அகப்படாதவன். அன்பினுள் அமர்ந்து அருளுபவன் அவனே. அடைதற்கு அரிய அரும் பொருள். அவன் இறவாத இன்ப அன்புடையோருக்குத் தன் திருவடியினை அணையாகவும் துணையாகவும் அளிப்பவன்.
"அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே."
ஐந்தில் அமர்ந்து = ஐம்பூதங்கள் என்பார் சிலர். "சிவயநம" என்போருமுண்டு.
எல்லா உயிர்களின்மேல் செலுத்தும் அன்பால் ஒருவருக்கு உண்மையறிவு உண்டாகும். அதனால் அடக்கமுடைமை உண்டாகும். இப்பண்புகளிடமாக நின்று அருளுபவன் சிவன். அதனால் அப்பண்புகளே சிவம் எனக் கூறப்பட்டன. அதுபோல கணவனும் மனைவியும் புணரும்பொழுது சிவசிந்தனையுடன் கூட அதில் கிட்டும் சிற்றின்பமும் சிவமே. ஊழிக்காலத்துக்குப்பின் உலகைத் தோற்றுவிக்கும் பெரும் பொருள் சிவனே. அவ்வாறு தோற்றுவித்து, நிலை நிறுத்திப் பின் பேரொடுக்கம் செய்யும் ஊழிப்பெருமானும் சிவனே.
ஆக, அன்பும் சிவமும் இரண்டறக் கலந்து நிற்பதால் அன்பே சிவமாம்.
Posted by ஞானவெட்டியான் at 10:02 AM 7 comments
Labels: ஞானமுத்துக்கள்
அறுபத்தெட்டாக்கை
அறுபத்தெட்டாக்கை
**************************
திருமந்திரம்:
ஆரோ அறிவார் அடியின் பெருமையை
யாரோ அறிவார் அங்கவர் நின்றது
யாரோ அறிவார் அறுபத்தெட் டாக்கையை
யாரோ அறிவார் அடிக்கா வலானதே."
அடி = சிவனின் திருவடி
அடிக்காவல் = திருக்கோவில்
அவர் = சிவன்
அறு = நீங்கும்
பத்தோடு = பத்து வாயுக்களோடு
காவல் = ஆலயம்
திருவருள் துணை இல்லாமல் திருவடியின் பெருமையை அறியும் வல்லமை ஒருவருக்கும் இல்லை. சிவன் உயிரில் கலந்து பிரிக்கமுடியாது ஒன்றாகவே நிற்பான். அவ்வாறு நிற்கும் தன்மையை அறிவார் யார்?
நிலம் 5, நீர் 5, வளி 5, வெளி 5, செய்தற்கருவி 5, அறிவுவளி 5, தொழில்வளி 5, நாடிகள் 10, ஓசைகள் 4, பற்றுகள் 3, குணங்கள் 3, ஆக மொத்தம் 60ம் மாயையின் கரியம். மீதமுள்ள எட்டும் புரியட்ட நுண்ணுடல். ஆக மொத்தம் 68.
இத்தகைய அருமையான உடல் சிவனுக்கு(சீவனுக்கு)ச் சிறந்த உடலாம். இதுவே நடமாடுங் கோவில்
Posted by ஞானவெட்டியான் at 9:53 AM 3 comments
Labels: ஞானமுத்துக்கள்
நவாக்கரி சக்கரம்
நவாக்கரி சக்கரம்
**********************
நவாக்கரி சக்கர நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி யக்கிலீ செளமுத லீறே.
நவாக்கரி = புதுமையான
நவாக்கரியாக = நவாக்கரி சக்கரமாக
கிலீ செளமுத லீறே = "கிலீம்" முதல் " செள " முடிய
திருவருளம்மை யாவருக்கும் வியக்கத் தக்க தன்மையுடைய "வ" கரம் உரியதாம். இவ்வம்மைக்குறிய நவாக்கரி சக்கரத்தை நான் விளக்கப் புகுந்தால் , அது 80 வகையாக எழுத்து மாறுதலால் விரிவடையும். முதலில் "கிலீம்"ல் ஆரம்பித்துப் பின்னர் "செள"வில் முடியும்.
நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.
நவாக்கரி எனப்படும் மந்திரமே யான் அறியும் மெய் உணர்வுக் கலை ஆகும். அதனால் நன்மை எல்லாம் அகத்தே தோன்றும். எந்த ஒரு மந்திரத்தினையும் உதடு பிரியாது, நாவு அசையாது நினைவால் பலுக்க(உச்சரிக்க) வேண்டும். அது போல் இம் மந்திரத்தினையும் நாவு புடைக்கும் அளவு ஒரு மாத்திரையாக வைத்துப் பலுக்க அம்மை எல்லா நலனும் தருவாள்.
Posted by ஞானவெட்டியான் at 9:51 AM 3 comments
Labels: ஞானமுத்துக்கள்
அகர முதல எழுத்தெல்லாம்
அகர முதல எழுத்தெல்லாம்
**********************************
உலகுக்கெல்லாம் ஆதிபோல் "அ" விளங்குகிறதெனலாம்.
"அ"காரத்தின் பிண்டவிளக்கம்:
"அ"எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி
சுழித்தல் - குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.
விசிரிம்பித்தல் - சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.
மடித்து மேலேறுதல் - வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.
அங்கேருந்து கீழே வருகிறோம் - அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா
ஆகாயசக்தி - இதுக்கு ஈசன் பீமர்.
அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.
கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.
அது கீழ்தாழல் - பலப்பிரமதனி - சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி - உக்கிரர்.
கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம். அங்கே நடுவிலே
ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.
தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி. சர்வபூதமென்றால் ஐம்பெரும்
பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான்
எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.
வரிவடிவாதல் - மனோன்மணி - மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால்
"அ"வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.
ஆக "அ"காரமே சர்வ சக்தி. விந்து சக்தி.
"அ"காரம் 12 பிரிவுகளாம்.
1.விந்து - சூரிய ஒளி
2.நாதம் - பெரிய நாதம்
3.பரவிந்து - சந்திர ஒளி
4.பரநாதம் - நாதம்
5.அபரவிந்து - நற்சேத்திர ஒளி
6.அபரநாதம் - நாதம்
7.திக்கிராந்தம் - அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் - ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை)
1.ஊன்றல் - வாமை
2.சுழித்தல் - ஜேஸ்டை
3.விசிரிம்பித்தல் - ரெளத்திரி
4.மடித்து மேலேறல் - காளி
5.அங்கிருந்து கீழ்வரல் - கலவி கரணி
6.மேல்புடை பெயர்தல் - பலவி கரணி
7.கீழ்தாழல் - பலப்பிரமதனி
8.கீழூன்றி நிற்றல் - சர்வபூத தமனி
9.வரிவடிவாதல் - மனோன்மணி
(இதில் விந்து நாதம் முதலிய நவநிலைகளுமுள)
பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் விளக்கியது.
அரபியில் : ஆலி*ப் என்றால் (பிண்டத்தில்) புருவமத்தி.
மகாமே ஜபறூத்தின் திக்ரு 'அல்லாஹ்'.
ஹக்கீகத்திற்குரிய இத்திக்ருவைச் செய்யும்போது அவர்களுடைய
செவிகளுக்குக்கூடக் கேட்காத அளவிற்கு உச்சரித்தல் வேண்டும்.
"விடுமூச்சில் விசைவிசையா யேத்திறக்கும் செய்ய
இதமாக முக்கோண மாயிருந்து கொண்டு
இரு முழங்கால் மீதிலவர் இரு முழங்கை யிருத்தி
விதமென்ன விற்போலே வளைந்து தலை குனிந்து
விழித்து இரு பார்வை நடு புருவத்தில் நிறுத்தி
அது நிலையில் அலிபான முச்சுடரை நினைந்து".
ஆக, அலி*ப் என்பது முக்கலையொன்றும் இடமே.
இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரத் தானம்.
இப்போது, திருவள்ளுவரின் முதல் குறளைப் படிக்கத் தெளிவாகும்.
"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு."
இவையே, சாமவேத உபசார பூசையின்போது பலுக்கப்படும் மந்திரங்கள்.
வாமதேவாய நமோ
ஜ்யேஷ்டாய நம
ச்ரேஷ்டாய நமோ
ருத்ராய நமஹ
காலாய நமஹ
கலவி-கரணாய நமோ
பலவி-கரணாய நமோ
பலாய நமோ
பல-ப்ரமதனாய நமஹ
சர்வ பூத தமனாய நமோ
மனோன்-மனாய நமஹ
(செங்கிருதம் எழுதியதில் தவறிருக்கலாம்)
Posted by ஞானவெட்டியான் at 9:46 AM 9 comments
Labels: ஞானமுத்துக்கள்
புரியட்ட காயம்
புரியட்ட காயம்
********************
ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் ஆகியவை 5 தன்மாத்திரைகள்.
இவற்றுடன் இறுப்பு, எழுச்சி, மனம் ஆகிய மூன்றும் சேர எட்டாகும்.
இதுவே புரியட்டகாயம்.
Posted by ஞானவெட்டியான் at 9:44 AM 0 comments
Labels: ஞானமுத்துக்கள்
கடவுளிடம் பொருள் கேட்காதே!
கடவுளிடம் பொருள் கேட்காதே!
***************************************
பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்த ஒருவனுக்கு பிரம்மா தரிசனம் தந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்" என்றார். உடனே, தின்னிப் பண்டாரமான அவன், "கடவுளே! எனக்கு ஆயுள் பூராவும் அமர்ந்து சுவையுடன் திருப்தியாக உண்ணும அளவுக்குப் பொருள் கொடு!" என்றான்.
பிரம்மாவோ, அவ்வளவுதானே! அதோ அந்த நரியிடம் சென்று பேசிவிட்டு வா. நீ கேட்டதைத் தருகிறேன்" என்றார். அவனும் நரியிடம் சென்று, "நரியாரே! நான் பிரம்மாவிடம் பொருள் கேட்டேன். அவர் உன்னைப் பார்க்கச் சொன்னார்" என்றான். நரியும் உடனே,"அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் நடந்த கதையைக் கூறுகிறேன். கேள்" என்றது.
ஒரு ஒட்டகம் உன்னைப்போல் தவமிருந்து, பிரம்மாவிடம் வரம் கேட்டது. அது என்ன தெரியுமா? "கடவுளே! எனக்கு இப்போது இருப்பதைவிட நீண்ட கழுத்து வேண்டும். படுத்துக்கொண்டே மரத்தின் இலைகளப் பறித்து உண்ணவேண்டும்" என்றது. பிரம்மாவும்,"இந்தா! பிடி. தந்தேன் வரம்" எனக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார்.
பின்னர் நரி,"கழுத்தும் நீண்டது.அது உழைக்காமல் படுத்துக்கொண்டே சாப்பிட்டது. நேரம் அதிகம் இருப்பதால் மற்ற குறும்புகளைச் செய்ய ஆரம்பித்தது. தன்னுடைய நீண்ட கழுத்தைப் போவோர் வருவோர் நடுவிலும் நீட்டித் தடுக்கிவிழச் செய்து சிரித்து மகிழ்ந்தது. ஒரு நாள் கடும் மழை. நானும் என் மனைவியும் இவ்வழியே வந்தோம். மலையின் அடியில் சின்ன குடவரை இருந்தது. நாங்கள் ஓடிப்போய் ஒண்டிக்கொண்டோம். ஒட்டகமும் அதற்குள் நுழைய முயன்றது. ஆனால், பாதிக் கழுத்துதான் உள்ளே நுழைந்தது. மீதிக் கழுத்தும் உடலும் வெளியே இருந்தது. அது கண்டு எங்களுக்கு மகிழ்ச்சி. பாய்ந்து சென்று கழுத்தைக் கடித்தோம். அது வலி தாளாமல் அலறியது. ஆனாலும் தப்பிக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் ஒட்டகத்தைத் தின்றுகொண்டிருக்கிறோம். இன்னும் ஒருமாத காலத்திற்கு எங்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை என்று இங்கேயே தங்கிவிட்டோம்" என்றது.
மனிதன் சிந்தித்தான். உடனே கதையின் கருத்து புரிந்தது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. உடனே பிரம்மாவைப் பார்த்து,"கடவுளே!ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறாய். அவரவருக்குறிய படியை அளக்கிறாய். கூடுதலாய்க் கொடுத்தால் என்ன ஆகுமெனப் புரிந்துகொண்டேன். இப்போது இருப்பதே போதும். ஆகவே, தேவையான சமயத்தில் தேவையானவற்றைக் கொடுத்தால் போதும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
Posted by ஞானவெட்டியான் at 9:32 AM 17 comments
Labels: ஞானமுத்துக்கள்
Thursday, December 27, 2007
குரு வாக்கு
குரு வாக்கு
****************
ஏ! சீடர்களே!
உலகிலுள்ள அனைவரையும் உயிர் என்னும் கயிற்றால் கட்டி பொம்மலாட்டம் நடத்துவது அன்னை பராசக்தியே. உன் தலைவியின் கட்டளையை நன்குணர்ந்து நிறைவேற்றுவதில் முழுக் கவனத்தையும் செலுத்து. உன் கதாபாத்திரத்தை நன்கு செய். குழந்தைகள் விளையாடும்போது தாயை மறப்பது இயல்பு. விளையாட்டு முடிந்தவுடன், குழந்தை ஓடிப்போய் அன்னையின் மடியில் தஞ்சமடைவதைப்போல் நாடகம் முடிந்ததும் அன்னையிடம் தஞ்சமாகிவிடு. நாடகத்தில் அரசன் வேடமிடும்போது மகிழாதே. அப்படி மகிழ்ந்தால் பிச்சைக் காரனாக வேடமிடும்போது துக்கம் தானே வரும். உன்னையுணர்ந்து, நான் இவன்; இக்கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்; நாடகம் முடிந்ததும் நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்; எனும் எண்ணமிருப்பின் மகிழ்வும், துக்கமும் வராது. நீ அன்னையின் கைபொம்மை என நம்பி உனக்குக் கொடுத்த பணிகளைப் பற்றற்றுச் செய்துவா.
சீவனில் சிவன் கலந்துதான் இருக்கிறான். சீவன் உடலில் ஓடுகிறது. அதில் கலந்துள்ள சிவனை எளிதில் கண்டுணர்வதில் ஏன் தாமதம். மாயை மறைக்கிறது. அதை ஒதுக்கிவிட்டால் சிவம் வெளிப்படும்.
பொய்ப்பொருட்களாகிய மண், பொன் மற்றுமுள்ள நிலையற்ற பொருட்களில் உன் மனதைச் செலுத்தியும், அற்ப விடயங்களைப் பற்றியே நினைத்தும், அவைகளே நிலையானவைகளென நம்பியும் உன் உடையிலும், உணவிலும், உடலிலும் உள்ளத்தைச் செலுத்தி வாழ்கிறாயே. இவ்வாறு கோடானகோடி முட்டாள்கள் செய்து அலுத்துச் செத்ததை அறியாயோ? பொய்யான உலகில் மடையர்கள் மெச்சும் காரியங்களைச் செய்துவிட்டுப் பெருமையடித்துக் கொள்கிறாயே? நிலையற்றவைகளிடம் இருக்கும் ஆசைகளைத் துறந்து விட்டால் உன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிந்துணரலாம்.
உலகில் கடவுள் இருக்கிறாரா? ஒரு கடவுளா? பல கடவுள்களா? என வீண் விவாதம் செய்து உன்னை நீயே கெடுத்துக்கொள்ளாதே. வீண்விவாதம் செய்யும் நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டால் உடல் கட்டைமட்டும் கிடக்கும். வீண் விவாதங்களை விட்டுவிடு. சத்தியத்தை நம்பு. இறைவன் சத்தியமானவர். அன்பும், சத்தியமும் மட்டுமே கடவுளின் உருவங்கள். இருக்கா? இல்லையா? எனும் சந்தேகம் வந்தால் நரகம்தான் நீ போகுமிடம். இறைவனை சத்தியமாக நம்பினால் நீயும் இறைவனைச் சார்வாய்.
Posted by ஞானவெட்டியான் at 5:44 PM 1 comments
Labels: ஞானமுத்துக்கள்
மனம் - 3
மனம் - 3
*************************
மனம் நம் உடலின் உள்ளே இருந்துகொண்டு உடலை ஆட்டிப்படைக்கும் ஒரு சூக்குமப் பொருள். மனம் அசைந்தால் உடல் முழுதும் அசைகிறது. மனம் ஒடுங்கினால், நம் உடலையும் மறந்து, நாம் இன்ன இடத்தில் இருக்கிறோம், இன்னதுதான் செய்கிறோம் என்னும் நினைவின்றி சுழுத்தி அவத்தையில் அழுந்தி விடுகிறோம். மனம் அடங்க, அதனால் மனோவாயுவும் அடங்க பிரேதா அவத்தைக்குப் போய்விடுவோம். இவைகளால் மனமே சலனத்துக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.
மனம் ஒருவனுக்கு வயப்பட்டால், அவன் யோகம், ஞானம் எதும் செய்யத் தேவையில்லை. பெரியோர்களெல்லாம் தம் மனத்தை வயப்படுத்தவே தவம் முதலிய முயற்சிகளைக் கையாண்டனர். எத்தகைய யோக ஞானங்களும் ஒருநிலைப்பட்ட சித்தமில்லையேல் பலன் தராது. நமது ஞான வினை என்னும் முக்கலை ஒன்றித்தலும் முற்றுப் பெறும் வரை மனிதனுக்கு பரிசுத்தம் இன்றியமையாத ஒன்று. ஆதலால், மனத்தை வயப்படுத்த முயலவேண்டுமே அல்லாது மனத்தை முற்றிலும் அடக்க முயலக் கூடாது. ஏனெனில், மனம் அடங்கிவிட்டால் ஒரு காரியமும் நடைபெறாது.
மனம் சுத்த மனம், அசுத்த மனம் என இரு வகை. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்பவைகளில் விருப்பமுள்ள மனம் அசுத்த மனம். மேற்கூறியவைகளில் வெறுப்படைந்து ஒளிவீசுவது சுத்த மனம். இதைத்தான் "அறிவு" என்கிறோம். மனம்தான் இவ்வுலகில் காணப்படும் நிலையில்லாப் பொருட்களை அடையும்படி செய்து மனிதனைத் தாழ்த்துகிறது. இதே மனம்தான், இவைகள் நிலையற்றவை என்று அறிவால் உணர்த்தி வெறுப்பூட்டி, ஆன்ம ஞானத்தைப் பெறவைத்து உயர்த்துகிறது.
மனத்தினால் செய்யப்பட்ட தொழிலே தொழிலாகும்; மனத்தினால் விடுபட்டதே விடுபட்டதாகும். மனம் நசித்தால் சனன மரணமென்னும் பெரிய காடு நாசமாகும். மன மயக்கம் என்னும் வித்தால் மாயா மலம் என்னும் கொடிய நச்சு மரம் பற்பல துன்பம் என்னும் கிளைகளுடன் செழித்து வளரும்.
ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரும்பாமல் நீங்கியவர்களே மனமென்னும் வாசியை வென்றவர்கள். ஏனெனில், தீனியாசை, யோனியாசை ஆகிய இரண்டினில் யோனியாசையைச் சிலகாலம் வரை ஒத்திப் போட்டாலும், தீனியாசையை நீங்கி இருத்தல் கடினம். மருந்து உண்ணும்போது பத்தியம் இருக்கும்போதுதான் தெரியும் அதன் இன்னல். வைராக்கிய ஞானம் இல்லாதவர்கள், மானிடத் தோல் பொத்திய விலங்கிற்குச் சமம். நான் என்னும் அகங்காரத்தைத் தொலைக்காதவரை உண்மையான ஞானோதயம் கிட்டாது. ஞானோதயமாகாவிட்டால் பிரபஞ்சம் தோன்றும். அப்போது பிரும்மம்(பெருமம்) தோன்றாது. காற்றாடி போல் சுழலும் மனம் வயப்பட்டால்தான் அகந்தை நீங்கும். அகந்தையுள்ளவர் முத்தியை விரும்புதல் இருளைத் துணையாகக்கொண்டு சூரியனைப் பார்க்க முயன்றதுபோலாம்.
திருக்குறள்
***************
யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.
இவ்வுலகத்தோரால் இனிமை எனக் கருதும் யாவும் எப்பொழுது எட்டிக்காய்போல் கசக்கிறதோ அப்பொழுதுதான் மனம் வயப்பட்டுள்ளது. திரண்ட மேகக்கூட்டம் பேய்க்காற்றால் எப்படிச் சிதறி ஓடிச் சூனியமாகி விடுதல்போல் கற்பனையால் மனம் நசிக்கும். நிறைவு - குறைவு, பெரிது - சிறிது நீங்கிய சமபக்குவத்தால் ஆனந்தத்தைத் தரும் பிரமபதம் சதாநித்தியமாகும். வெப்பமானது அக்கினியியிலிருந்து நீங்காமல் இருப்பதுபோல், தாழ்வைத்தரும் சஞ்சலம் மனதை விட்டு நீங்குவது மிகவும் கடினம். சலிக்கும் மனமே உலகமாம்.
மனம் எப்பொருளைப்பற்றி சதா சிந்திக்குமோ அப்பொருள் சித்திக்கும். எப்பொருளையும் மேன்மையாகப் பாவிக்க மேன்மையும், கேவலமாக நினைக்க கேவலத்தைத் தருவதாகவும் அமையும். ஆகவே, சகலத்துக்கும் மனமே காரணம்.
ஆகையால்தான் இவ்வளவு எழுதவேண்டி உள்ளது.
"கைஸா நிய்யத் அய்ஸா பரக்கத்"
எண்ணம் அப்படியோ அப்படியே வாழ்வு. அதாவது "எண்ணம்போல் வாழ்வு".
Posted by ஞானவெட்டியான் at 5:43 PM 0 comments
Labels: ஞானமுத்துக்கள்
மனம் - 2
மனம் - 2
**************************
மனம் - கற்பனைகளின் தாய்
********************************
உன் அறிவால் அறிந்த உண்மைகளை ஏன் அநுபவத்திற்குக் கொண்டுவரத்
தயங்குகிறாய்? அநுபவம் வராதவரை நீ படித்த முட்டாள் என அநுபூதியுள்ள
சித்தர்கள் ஒதுங்குவார்கள். உன் அறிவுக்கும் அறிவான மெய்ப்பொருளை நீ
அறிந்து அநுபவத்திற்குக் கொண்டு வருவதே அநுபூதி. தன்னிலும் வேறாக ஒன்றுமில்லை.உலகத் தோற்றமே ஒரு கற்பனைதான்.
கற்பனையை ஏமாற்றக் எதிர்மறைக் கற்பனையே சிறந்த வழி என்பது ஒரு சாராரின் கருத்து. எடுத்துக்காட்டு:
MATRIX படம் பார்த்தீர்களா? அதில் ஒரு சிறுவன் ஒரு கரண்டியைத் தன்
பார்வையால் வளைத்துக் கொண்டிருப்பான். கதாநாயகன் நியோ அதைப் பார்க்க அச்சிறுவன், "என் கையில் கரண்டி இல்லை. அது அப்படியே இருந்தாலும் வளைவது இல்லை. நீதான் வளைகிறாய். இது ஒரு கற்பனை" என்பான்.
இன்னுமொரு வழி:
மனமே கற்பனைகளை உற்பத்தி செய்யும் தாய். நீ எதையும் கற்பனை செய்யாதே. அப்படிச் செய்தால் கற்பனை கடந்த சோதி உனக்குள் மறைந்துவிடும். உன்னை மறைப்பது கற்பனையே. மனதில் எதுவும் இருக்காத நிலையே அறிவை உணரும் நிலை. கற்பனைகளைத் தியாகம் செய்துவிடு. பரிபூரண நிலைக்குச் செல்ல அதுவே சிறந்த வழி.
*****************************************************
>மனமே கற்பனைகளை உற்பத்தி செய்யும் தாய். நீ எதையும் கற்பனை >செய்யாதே.
>மனதில் எதுவும் இருக்காத நிலையே அறிவை உணரும் நிலை.
>கற்பனைகளைத் தியாகம் செய்துவிடு. பரிபூரண நிலைக்குச் செல்ல அதுவே >சிறந்த வழி.
ஐயா! எனக்கு என்னவோ மனம் பற்றிய இந்த தொடரில் சில வரிகள் என மனதிற்கு உடன்பட மறுக்கின்றன. அது என் வயதின் தடையா அல்லது வேறு எதுவுமா? என்பது தெரியவில்லை. தொடரின் இடையில் குறுக்கீடு செய்தமைக்கு முதலில் மன்னிக்கவும்.
"நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய்" என்பது கீதை.
நினைப்பது என்றால் என்ன? எது நம்மை நினைக்கச் செய்யும்? எதன்மீது அதிக பர்று கொள்கிறோமோ அதுவே கனவிலும் வரும். பற்று மட்டும் அன்று பயம் கொண்டாலும் வரும்.
என்னுடைய பயிற்சி அரங்கில் நான் Alpha Mind Power Meditation சொல்லிக் கொடுப்பது உண்டு. அதில் கற்பனைப் பற்றிய பயிற்சியே அதிகம் இருக்கும். அதன் பலன் Scientific ஆக அதிகம். நான் உணர்ந்ததும் கூட ஆகும் பொருள் தேடும் இவ்வுலகில் அருளை நாம் தேடாவிட்டால் அவ்வுலகமில்லை என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.
>பரிபூரண நிலைக்குச் செல்ல அதுவே சிறந்த வழி.
அப்படியானால் பரிபூரண நிலைக்கு (இல்லறத்தான்) என் போன்றோர்க்கு வழியே இல்லையா? துறவுதான் கொள்ள வேண்டுமா? தாங்கள் சொல்வது போல் கற்பனையே அன்றி இருந்துவிட்டால் வாழ்வில் வெற்றி என்பது எப்படி ஐயா? விளக்கவும்..தவறுகளை மன்னிக்கவும்.
இல்லறமே நல்லறம் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளீர்கள். அப்படியிருக்க இல்லறத்தான் கற்பனை அன்றி இருத்தல் எப்படி ஐயா?
பாசிடிவ் இராமா
**********************************
இராமா,,
இதே கேள்வி தான் எனக்கும் ,,,
அன்னையோடு இருந்த போது சத்தியமாக எனக்கென்று நான் எதுவும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற சுயநலமே இல்லை ஆனால் திருமண பந்தமமென்று ஆனவுடன்..என் குடும்பம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறதே..எனக்கே பயமாக இருக்கிறது.. என்னை அறியாமல் எப்படி என்னுள் இப்படி ஒன்று?
'சுவாமி விவேகானந்தரும் அடிக்கடி சொல்வார்" நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்"... என்பதை .. ஞான ஐயா,,விளக்குங்கள்?
மனம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க தியானம் செய்வதுண்டு..ஆனால் அதையும் மீறி அது சுழன்றால்?>>
என்றென்றும் நட்புடன்
உங்கள்
சுதனின்விஜி.
****************************
அன்புள்ள ராமா,
ஒரு ஆளுமைப் பண்புப் பயிற்றுனர் கேட்கவேண்டிய கேள்வியைச்
சரியாகக் கேட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ஞானவெட்டியான் ஐயா சொல்லியிருக்கும் எல்லாமே ஞானத்திற்கான
வழிகள். ஞானம் பெறுவதான கல்வியை மட்டுமே 'வித்யை' என்றனர்
பெரியோர். அல்லாத மற்றவை எல்லாம் 'அவித்யை'.
மனம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை நமக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்கிறோம், உண்மைதான்.
முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று
பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்)
என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய
ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ
ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு.
ஆனால் மனத்தை 'ஸ்விட்ச் ஆ·ப்' செய்துவிட்டால், மற்ற உறுப்புக
ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் தீவி
ரமாக யோசிக்கும்போது, நமக்கு இசை கேட்பதில்லை, பூவின் மணம்
தெரிவதில்லை என்பது போல. எனவே இந்த ஆறாவது உறுப்பு
இல்லாவிட்டால் மற்ற ஐந்து உறுப்புகளின் செயல்கள் பலனளிக்கா.
மனம்தான் இவற்றின் ஓட்டுநர்.
இதன் பொருள் என்னவென்றால், எவ்வாறு ஐம்புலன்களும் உடலின்
உறுப்புகளோ, அவ்வாறே மனமும் ஆறாவது 'உள்' உறுப்பு. அவ்வளவுதான்.
'இந்த உடல்தான் நான்' என்ற எண்ணம் இருக்கும்வரை
ஞானம் வாய்க்காது. மனமும் உடல்தான் என்றபின், மனமும் நானல்ல.
ஆனால் ஐந்து பொறிகளின் வழியே மனம் வெளிநோக்கிப் பாய்ந்து
கொண்டே இருக்கிறது. வெளிநோக்கிப் பாயும் மனம் இறைவனை
அடையாது. அதாவது ஞானத்தை அடையாது. மனத்தை உள்நோக்
கித் திருப்ப வேண்டும்.
மேற்கத்திய விஞ்ஞானத்தில் மனம் அறிவு இரண்டும் ஒன்றுதான். எல்லாமே
மூளையில் இருப்பவைதாம். அதாவது, புலன்களின் உணர்
வுகளுக்கான சமிக்ஞைகளைப் பெறுவது மூளைதான். ஒவ்வொரு வகை உணர்
வுக்கும் மூளையில் ஒவ்வொரு மையம் இருக்கிறது என்பார்கள்.
இந்தியச் சிந்தனையில் மனத்தை மூன்றாகப் பிரித்தார்கள்:
1. சித்தம்: (Mind) உணர்வுகளின் தொகுதியான பகுதி.
2. புத்தி: (Intellect) அறிவு.
3. அகங்காரம்: (Ego) ஆணவம். 'நான்', 'என்னுடையது' என்று எ
ண்ணவைப்பது.
மனம் என்பது எண்ணங்களின் தொகுதி. எண்ணங்கள் இல்லையேல்
மனம் இல்லை. இந்த மனம்தான் நாம் எது இல்லையோ அதை
யெல்லாம் நான் என்று நினைக்க வைக்கிறது. பாரதியின் ஞான ரதம்
படித்தீர்களானால் 'சத்தியலோகத்துக்குள் நுழையவேண்டுமென்றால்
மனத்தோடு நுழையமுடியாது' என்று அவருடன் வரும் கந்தர்வன்
சொல்லுவான்.
'உங்களுக்கெல்லாம் சிந்திக்காமல் இருப்பது எவ்வளவு கடினமோ,
எனக்குச் சிந்திப்பது அவ்வளவு கடினம்' என்று ஒருமுறை ரமண பக
வான் கூறினார். ஞானிகளுக்குத் தமக்கென்று ஒரு மனம் கிடையாது.
எனவேதான் அவர்களுக்கு உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம்
என்பது போன்ற இருமைகள் கிடையாது.
அதாவது, மனத்தை உலகியல் வெற்றிக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம். அதைத்தான் நீங்கள் ஆளுமைப் பயிற்சிகளில் செய்கிறீர்கள். அதற்காக மனத்தை நெறிப்படுத்துகிறீர்கள், மனத்தைக் குவிக்கிறீர்கள்,
மனத்தை நீங்கள் வேண்டியபடிக் கற்பனை செய்ய வைக்கிறீர்கள். அதனால் செல்வம், பதவி, வெற்றி இவையெல்லாம் வரும்.
ஆனால் வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் நாணயத்தின்
இருபக்கங்களைப் போன்றவை. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. நல்லது
வரும்போது மகிழும் நாம், கெட்டது வரும்போது சோர்ந்துவிடுகிறோ
¡ம். இறைவனைப் பழிக்கிறோம். ஆனால் யார் எதையும் நாடி
ஓடுவதில்லையோ அவனுக்குத் துன்பமில்லை. 'நாடி ஓடுவதில்லை'
என்றால் செயலற்று இருப்பதில்லை.
இல்லறத்தில் இருக்கும் போதும், தொழில் செய்யும்போதும், நம்முடைய
கடமைகளைச் செய்துவிட்டு, 'இறைவா இனிமேல் நீ விட்ட வழி.
நீ எதைத் தருகிறாயோ அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்'
என்பவன் துவளுவதில்லை. அவனுக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா'.
அதைத்தான் பற்றற்ற கடமை ('நிஷ்காம்ய கர்மம்') என்று கீதை விவரிக்கிறது.
நல்லமுறையில் பெறும் வெற்றியும், பதவியும், செல்வமும் மனிதனைத்
தூய்மையாக்கும். மனத்தூய்மை சத்தியத்துக்குப் போகும் வழியில்
உதவியாக இருக்கும்.
மனத்தை அழிப்பதன் மூலமே, அதாவது அஹங்காரத்தை, எண்ணங்களை
அழிப்பதன் மூலமே, மனிதன் ஞானம் பெறுகிறான்.
அது தனிக்கதை...
அன்புடன்
மதுரபாரதி
**************************************
அன்பு நண்பர் திரு.மதுரபாரதி,
அருமையான, கோர்வையான விளக்கம்.
மனம் தெளிந்திருக்கும்.
கற்பனைக்கும் இலக்குக்கும் வேறுபாடுகள் உண்டு. கறபனை மனதைக் கண்டபடி அலையவிடுவது. நான் கோடீசுவரனாக வேண்டும். பதவி
உயர்வு அடிக்கடி வரவேண்டும். எனக்கு ஆள், படை, பட்டாளம் வேண்டும்.
இதுதான் கனவு.
இலக்கு குறிக்கோள். இல்லறவாசிக்குத் தன் கடமைகளைச் சரிவரச் செய்யப்
பொருள் தேவை. அது நியாயமானது. அதற்காக, ஒரு வீடு வேண்டும். என்
குழந்தைகளை நன்கு படிக்க வைக்கவேண்டும். இதைப்போன்ற நியாயமான ஆசைகள், நினைவுகள் கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அது தேவை.
துறவைப் பற்றித் தனியாக எழுதுகிறேன்.
ஆனால், இந்த உலகாயத ஆசைகளை மனம் முழுவதும் ஆக்கிரமிக்க விட்டால்தான் தவறு. 6 மணி நேரம் குடும்பத்திற்கு என முன்னமேயே கூறியுள்ளேன். அதில் நியாயமானவற்றை நினையுங்கள். மீதி நேரத்தில் மனத்தை இறைவனுக்குத் தியாகம் செய்துவிடுங்கள். அப்போதுதான் கீதையின் வாசகம் வருகிறது.
இறைவனை நினைக்க நீயும் இறையுடன் கலந்துவிடுகிறாய்.
அன்புடன்,
ஞானவெட்டியான்
******************************
>'இறைவா இனிமேல் நீ விட்ட வழி.
>நீ எதைத் தருகிறாயோ அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்'
>என்பவன் துவளுவதில்லை. அவனுக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா'.
மனதை பற்றி அருமையான விளக்கத்தினை தந்த ஐயா மதுரபாரதி அவர்களுக்கும். ஐயா ஞானவெட்டியான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஒரு சின்ன கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நாராயணா நாராயணா என்று நொடிக்கொரு தடவை நாராயணன்மேல் பக்தி செலுத்தும் நாரதர்..ஒருமுறை திருமாலிடம் சென்று " உம்மேல் என்னை விட பக்தி கொண்டவன் இந்த உலகில் உண்டா?" என்று கர்வத்துடன் கேட்டார். அதற்கு திருமால் பூலோகத்தில் ஒரு சாதாரண விவசாயியை காண்பித்து "இவனை கவனி" என்றார் திருமால். அந்த விவ்சாயி காலையில் எழும்போது " நாராயணா என்றபடி எழுந்தான்..பின்னர் தன் கடைமைகளில் கலந்து விட்டான். ஏர் பூட்டுவது, நெல் விதைப்பது என்று அவன் தன் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பி கண் அயரும் போது நாராயணா என்ற படி உறங்கியும் விட்டான். " இவன் தான் எனது தலைசிறந்த பக்தன் என்று திருமால் சொல்ல , நாரதருக்கு வந்ததே கோபம். "அது எப்படி, நான் நொடிக்கொருதடவை உன்னை நினைத்து பக்தி செய்கிறேன்..ஆனால் உன் நாமத்தை 24 மணி நேரத்தில் 2 முறை மட்டுமே உச்சரித்தவனை பெரிய பக்தன் என்கிறாயே, இது எப்படி சரி" என்று நாரதர் கேட்டார்.
அதற்கு திருமால் ஒரு கிண்ணத்தில் நிரம்ப நிரம்ப எண்ணெய் எடுத்து அதை நாரதரிடம் கொடுத்து " நாரதா! நீ உண்மையிலேயே சிறந்த பக்தன் என்றால் இந்த உலகை இந்த கிண்ணத்தோடு சிந்தாமல் சுற்றி வா பார்ப்போம்" என்றார்.
"இவ்வளவுதானா" என்றபடி நாரதர் எண்ணெய் கொட்டிவிடாமல் மிகக் கவனமாக உலகை வெற்றிகரமாக சுற்றி திருமால் முன் வந்து.."ஐயனே இப்பவாவது நான்தான் சிறந்த பக்தன் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?" என்றார்.
"நாரதா ஒரு சிறு கேள்வி! உலகை சுற்றி வரும்போது எத்தனை முறை எனது நாமத்தை உச்சரித்தாய்?" என்று கேட்டார் திருமால். " அய்யனே! என் கவனம் முழுதும் எண்ணெய் கொட்டிவிடக்கூடாது என்பதில் இருந்ததால் மற்ந்து விட்டேன், மன்னிக்கவும்" என்றார் நாரதர்.
அதற்கு திருமால்," ஒரு சின்ன வேலை கொடுத்தவுடன் என்னையே மற்ந்து விட்டாய், ஆனால் அந்த விவயாயி தனது கடுமையான பணிக்கிடையேயும் என் நாமத்தை மற்க்காமல் இரு முறயேனும் உச்சரித்தான் பார்த்தாயா? அதனால் அவன்தான் உன்னை விட சிறந்தவன் என்றேன்" என்றார்.
நாரதர் கர்வம் அடங்கி தன் தவறை ஒத்துக்கொண்டார்.
ஆக, "செய்யும் தொழிலே தெய்வம்" என்பவர்களும் கடவுளை சில துளி நேரம் நினைப்பதன் மூலம் சித்தி அடையமுடியும் என்பது எனது நம்பிக்கை!
நன்றி!
*************************
அன்பு இராமா,
அதெல்லாம் சரி.
நாரதர் வெறும் வாயினால் மட்டும் "நாராயணா!நாராயணா!" என அழைத்துவிட்டு மற்றவற்றில் சிந்தனைகளைச் செலுத்திவிட்டு நான்தான் நாராயணனை எப்பொழுதும் நினைக்கிறேன் என அகந்தை கொண்டான். அவனுக்கு ஏன் நாரதன் எனப் பெயர் வந்தது தெரியுமா? "நாராயணா!நாராயணா!" என இரதத்தின் வேகத்தைவிட வேகமாகச் சொல்லக் கூடியவன் என்பதாலேயே. அந்த அகந்தையை அடக்க, நீ வெளியில் "நாராயணா"வெனும் நாமத்தை உச்சரிப்பதனால் மட்டும் என்னை நினைப்பது ஆகாது. மனமொடுங்கி
இருமுறை என்னை நினைக்கும் விவசாயி உன்னைவிட மேல் என்றுதான் நாராயணன்
கூறுகிறார்.
> ஆக, "செய்யும் தொழிலே தெய்வம்" என்பவர்களும் கடவுளை சில துளி
> நேரம் நினைப்பதன் மூலம் சித்தி அடையமுடியும் என்பது எனது நம்பிக்கை!
மனுவின் வேலை: 8 மணி நேரம் வயிற்றுக்காக உழைத்தல். 5 மணித் துளி வீட்டை, நாட்டைக் கவனிக்க. 5 மணித் துளி உறங்க. மீதி 6 மணித்துளி அவனை வணங்க.
"செய்யும் தொழிலே தெய்வம்" என 8 மணித்துளி உழைக்கவேண்டும். அப்பொழுது செய்யும் தொழிலில் அக்கரையுடன் செயல்படவேண்டும். மீதியுள்ள 16 மணித்துளியிலும் இறைச் சிந்தனையுடன் இருத்தல் நல்லது. அதிலும்
இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட 6மணித்துளியில் வாசியோகம் பயிற்சி
செய்தல்வேண்டும்.
"கடவுளை சில துளி நேரம் நினைப்பதன் மூலம் சித்தி அடையமுடியும்" என்னும்
தங்களின் கருத்துடன் ஒவ்வவியலாத நிலையில் உள்ளேன்.
சித்தியடைய வேண்டும் என்னும் எண்ணமே பேராசை. ஆசையை எப்படிக் களைவது? படித்தவன்தான் தேர்வில் தேறமுடியும். உழைத்தால்தான் பலன்.
"நம் கடன் பணிசெய்து கிடப்பதே!" - என்ன பணி?
6மணித்துளி வாசியோகம் பயிற்சி செய்தல்வேண்டும். இது இறைப்பணி. TIME
MANAGEMENT ஒழுங்காகச் செய்தல் வேண்டும். இதுதான் "கர்மாவைச் செய். பலனை
எதிர்பார்க்காதே!".
இதைத்தான் நண்பர் திரு மதுரபாரதி:
'இறைவா இனிமேல் நீ விட்ட வழி.
நீ எதைத் தருகிறாயோ அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்'என்பவன்
துவளுவதில்லை. அவனுக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா'. - என்றார்.
இதிலிருந்து கிட்டும் கருத்து:
"உன் கவனத்தை எப்பொழுதெல்லாம் இறைவன்பால் செலுத்தவியலுமோ அப்பொழுதெல்லாம்
மனமொன்றிச் செலுத்து." அதுவே உனக்கிட்ட விதி. வினையைச் செய். பலன் தானாக
வரும்.
அன்புடன்,
ஞானவெட்டியான்,
திண்டுக்கல்.
******************************
"லௌகீக வாழ்க்கையில் துவழுகிறோமே.. என்ன செய்ய?" என்று அங்கலாய்த்ததினால் வந்ததே எனது வினா!
இந்த காலக்கட்டத்தில் எங்கே 8 மணி நேரம் உழைக்க விடுகிறார்கள். பிழிந்து எடுத்து விடுகிறார்கள்? அதுவும் சொந்த தொழில் என்றால் சொல்லவே வேண்டாம். பல் தேய்ப்பதுமுதல் படுப்பது வரை அதிலேயேதான்.
பைக்கில் செல்லும் போது முச்சந்தி விநாயகருக்கு சப்பலைக்கூட கழற்றாமல் சல்யூட் அடித்துவிட்டு வேகமாக செல்லும் இந்த கலி உலகில் இருக்கிறேன் பாருங்கள்! இத்தணைக்கும் இடையில் "நீங்கள் சொன்ன ஞானத்தை பெற வேண்டுமே என்ற ஏக்கம் வேறு?"
ம்..ம்.. என் செய்வேன். உங்கள் கருத்துக்களை யெல்லாம் பொதித்துக்கொள்கிறேன்..காலம் கை கொடுக்கும் அவற்றையெல்லாம் உணார்ந்திட என்று நம்புகின்றேன். நன்றி ஐயா!
நன்றி ஐயா!
அன்பு இராமா,
> "லௌகீக வாழ்க்கையில் துவழுகிறோமே.. என்ன செய்ய?" என்று அங்கலாய்த்ததினால்
> வந்ததே எனது வினா!
வினா சரியே! நானும் உலகாயத வாழ்க்கையில்தான் உள்ளேன். ஞானத்தின்பால் என் மனம் ஈர்க்கப்பட்டபின்தான் எனக்குத் திருமணமே ஆயிற்று. வங்கியில் வேலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது ஒருமுறை அவனை விவசாயி போல் நினைப்பேன். அவ்வளவுதான்.பணிபுரியும்போது ஒரு 0ஐ விட்டால் துகை கையைவிட்டுப் போய்விடும். அப்பொழுதெங்கே இறைவனை நினைக்க நேரம். இரவில் இல்லறக் கடமைகள்.
படுக்கப்போகுமுன் ஒரு அரை மணித்துளியில் ஆரம்பித்தேன். பிரும்ம
முஹூர்த்தமாம் 4 மணியிலிருந்து 6 மணி வரை பயிற்சி. பிறகு உடலுக்குப்
பயிற்சி. ஒன்றரை மணியிலிருந்து ஆரம்பித்து நேரம் கிட்டும்போதெல்லாம்
இறைவனுடன் ஒன்றினேன்.
முடிந்த வரையில் இளம்பிள்ளைகளாகிய நீங்கள் எல்லோரும் செய்து பார்க்கலாமே!
அட வேண்டாமையா! காலையில் அரை மணி. இரவில் அரைமணியில் ஆரம்பியுங்கள். போதுமே. அந்த சுகம் கண்டால்தான் தெரியும் மன நிம்மதி என்னவென்று.
நான் எழுதுவதெல்லாம் சுத்த ஞானம். (அதையெல்லாம் சேமித்து வைத்துக்
கொள்ளுங்கள். பின்னால் பயன்படும்.)அதிலிருக்கும் நல்ல கருத்துக்கள்,
அறிவுரைகளை எடுத்துகொள்ளுங்கள். முடிந்தவரை அநுபவத்தில் கடைப்
பிடியுங்கள். நான் இல்லறவாசி. என்னாலாகாது என ஒதுங்குதல் கூடாது. இல்லறவாசிகளுக்கு எப்பொழுதும் விதிவிலக்கு உண்டு.
ஆனால், உலகாயதம்தான் நமக்கு என முடிவு கட்டிவிடாதீர்கள்.
ஒரு காரியத்தை முடிக்க அதை ஆரம்பியுங்கள்(இறைவனை நினைந்து). அது விளையும்.
> பைக்கில் செல்லும் போது முச்சந்தி விநாயகருக்கு சப்பலைக்கூட கழற்றாமல் சல்யூட்
> அடித்துவிட்டு வேகமாக செல்லும் இந்த கலி உலகில் இருக்கிறேன் பாருங்கள்!
காலணி கழட்டாமல் on the way wish பண்ணி ட்டுப் போறான் ராமன். அவனைப் பாத்துக்கிறேன் என முச்சந்திப் பிள்ளையார் கோபித்துக் கொள்ளமாட்டார். இவ்வளவு நேரமின்மையிலும் நம்மை நம் பிள்ளை கண்டுகொண்டுதான் போகிறான் என்று நினைப்பர். நம் முகமே பிள்ளையார் என்று படம் போட்டுக் காட்டினேனே!
*****************************
உண்மைதான். மனம் இறைச்சிந்தனையில் தோய்ந்திருக்கிறதா
என்பதே மிக முக்கியம்.
ஒருமுறை நான் ஒருமணி நேரத்துக்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
கையில் அபிராமி அந்தாதியை வைத்துப் படித்துக்கொண்டே போனேன்.
(பொதுவாக காயத்ரி மந்திரத்தைச் செபித்துக் கொண்டே போவது
வழக்கம்.)
சுமார் ஒருமணி நேரம் கழித்து அருகிலிருந்தவர் கொஞ்சம் 'holier
than thou attitude'-உடன் 'நீங்கள் பக்தி நூல் தானே
படிக்கிறீர்கள்?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன்.
'காலில் செருப்புப் போட்டுக்கொண்டே படிக்கிறீர்களே, இது
சரியா?' என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினார்.
நான் பொறுமையாக, 'எனக்கு இரண்டு வழிகள் உள்ளன. இதைப்
படிக்காமல் தெருவோரம் வேடிக்கை பார்ப்பது. இரண்டாவது,
வேறு ஏதேனும் புத்தகம் படிப்பது. என் கருத்தில் வேறு எதிலும் மனதைச்
செலுத்துவதை விட அபிராமி அந்தாதியை ஓதுவது உயர்ந்ததாகப்
படுகிறது' என்றேன்.
'அதுக்கில்லே, செருப்புப் போட்டுக்கொண்டு..' என்றார்.
'என் செருப்பு தோல் செருப்பல்ல. அதுவுமில்லாமல் என் கருத்துப்படி
புறத்தூய்மையை விட அகத்தூய்மை முக்கியம். அபிராமி அந்தாதி
அதற்கு உதவுகிறது' என்றேன்.
எனவே நண்பர்களே, ஒரு நொடியைக் கூட வீணில் கழிக்காதீர்கள்.
ஒவ்வொரு நொடியும் எதிர்காலத்துக்கான முதலீடு. அதை நல்ல
வழியில் செலவழியுங்கள்.
மதுரபாரதி
*************************
அன்புடையீர்,
ஒரு நொடியைக் கூட வீணில் கழிக்காதீர்கள். ஒவ்வொரு
நொடியும் எதிர்காலத்துக்கான முதலீடு. அதை நல்ல வழியில் செலவழியுங்கள்.
இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்து உங்களிடம் வேண்டிக்கொண்டது. காலமே எமன். மறவாதீர்கள்.
ஞானவெட்டியான்
Posted by ஞானவெட்டியான் at 5:41 PM 0 comments
Labels: ஞானமுத்துக்கள்
அட்டமா சித்திகள்
அட்டமா சித்திகள்
*********************
1.அணிமா - நுண்மை(அணுத்தன்மை)
2.மகிமா - பருமை
3.இலகிமா - மென்மை
4.பிராப்தி - விரும்பியது எய்தல்
5.பிராகாமியம் - நிறைவுண்மை
6.ஈசத்துவம் - ஆட்சியனாதல்
7.வசித்துவம் - கவர்ச்சி
8.கரிமா - விண்டன்மை
1.அணுவிலும் சிறிய உருவெடுத்தல்.
2.மேருவினும் பெரிய உருவெடுத்தல்.
3.சேறு முதலியவற்றில் நடந்தாலும், சிக்கினாலும் காற்றைவிட மென்மையாய் வடிவெடுத்து நிற்றல்.
4.மனத்தில் எழும் ஆசைகள் யவையும் ஆசைப்பட்டவாறே அடைதல்.
5.எண்ணத்தால் ஆயிரம் மகளிரைப் படைத்து அத்துணைபேரிடமும் ஆயிரம் வடிவாக நிறு ஆடல்.
6.பிரமன் முதலியோர்மீது தன் ஆணை செலுத்தி, அவர்களால் பூசிக்கப்படும் நிலை.
7.உலகம் முழுவதையும் தன் வயமாக்கல்.
8.பற்றற்று புலன்களால் நுகர்தல்.
Posted by ஞானவெட்டியான் at 5:37 PM 6 comments
Labels: ஞானமுத்துக்கள்
ஓங்காரம் - ஓம்
ஓங்காரம் - ஓம்
********************
ஓம் எனும் மந்திரம் இறைவனுடன் உயிரினங்களை ஒன்றச் செய்யும் குணமுள்ளதால்தான் பிரணவம் என அழைக்கப்படுகிறது.ஓம் என்பது ஒரே எழுத்து (ஏகாட்சரம்). அதில் அ, உ, ம எனும் மூன்று ஒலிகளும் இணைந்துள்ளன. இந்த அகார, உகார, மகாரங்களை மாத்திரைகள் என அழைப்பதும் உண்டு.
அ - சூரியன்
உ - சந்திரன்
ம - அக்கினி
"ஓம்" எனும் பிரணவத்தில் மேற்கண்ட ஒலிகளோடு இம்மூன்று ஒளிகளும் இணைந்திருக்கின்றன.
இந்த பிரணவமாம் சுய வடிவில் இருந்துதான் எல்லா ஒலி, ஒளிகளும் உண்டாயின.
அ - சூரியன் - பருவுடல் (ஸ்தூலம்) - பெண் - இருக்கு வேதம் - கார்ஹபத்யாக்கினி - ஹரஸ்வம் - பாதம் - புத்தி - ரஜோ குணம் - சிவப்பு நிறம் - பூரகம் - நாதம் - கிரியா சக்தி - பிராஹ்மணி - பிரம்மா - சென்றகாலம் - ஜீவாத்மா - விராடபுருடன்
உ - சந்திரன் - நுண்ணுடல்(சூட்சுமம்) - ஆண் - யஜுர் வேதம் - தக்ஷிணாக்கினி - தீர்க்கம் - நாபி - மனம் - சத்வ குணம் - கபில நிறம் - கும்பகம் - பிந்து - இச்சா சக்தி - வைஷ்ணவி - விட்டுணு - நிகழ் காலம் - அந்தராத்மா - ஹிரண்யகர்ப்பன்
ம - அக்கினி - காரண உடல் (இலிங்க உடல்)- அலி - சாம வேதம் - ஆகவனீயாக்கினி - ப்லுதம் - சிரம் - அகங்காரம் - தமோ குணம் - கருப்பு - இரேசகம் - கலை - ஞான சக்தி - ரெளவுத்திரீ - உருத்திரன் - வருங்காலம் - கூடஸ்தன் - ஈசுவரன்
மேற்கூறியவை அந்தந்த மாத்திரைகளில் அடங்குவதால் அவையெல்லாம் பிரணவத்துள் அடக்கம்.
"ஓம்" படத்தை உற்றுப் பாருங்கள். அத்துடன் இணைத்துள்ள படத்தையும் கவனியுங்கள். வினாயகனின் தலை "ஓம்" உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? "ஓ"வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் வினாயகன் என்பது இதற்காகத்தான். வினாயகனின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் "ஓம்" மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
திருமந்திரம்
***********
"ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே."
ஓங்காரம் ஒலியினின்று தோன்றுவது. அதுவும் மனிதனின் தலைக்குள் தோன்றுவது. அது வெளியே அடுத்தவருக்குக் கேட்காது. வெறும் வாயால் "ஓம்" என ஒலித்தல் பயனற்றது. அதை உள்ளேற்றி அதன் அதிர்வலைகளை உணரும் நிலைதான் உன்னதமானது. அது சங்குநாதத்தை ஒத்து இருக்கும். ஓங்காரத்திலிருந்துதான் ஐம்பூதங்களும் அதன் காவலர்களான அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அகியோரும் உண்டாயினர். இதிலிருந்துதான் இயங்குதிணை(அசரம்), நிலைத்திணை (சரம்) ஆகியவை உண்டாயின. சரமும் அசரமும் சேர்ந்து சராசரம் ஆயிற்று. சராசரமே உலகம். இவ்வுலகில் ஒருமலம், இருமலம், மும்மலம் ஆகிய மலங்களையுடைய மூவகை சீவராசிகள் தோன்றின.
"ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே."
நுகர்வு - துய்ப்பு; அழுந்தியறிதல் - அனுபவம்
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். என்வே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
Posted by ஞானவெட்டியான் at 5:34 PM 4 comments
Labels: ஞானமுத்துக்கள்
மனம்-1
மனம்-1
************
ஏ மனுவே! நீ பெயரும் புகழும் அடையவேண்டித்தானே தான தர்மங்கள் செய்கிறாய். உண்மையில் அது உனக்குத் துன்பங்களை அதிகப்படுத்துகிறது என்பதை மறவாதே! உலக நலனுக்காகச் செய்கிறேன் என்று நீயே உனக்கு உதவிக் கொள்கிறாய். அதையும் நான் அறிவேன். பெயரும் புகழும் கேட்டைத்தான் விளைவிக்கும். உன்னை நீயே கெடுத்துக் கொள்ளாதே. முதலில் உன் மனதைக் கட்டுப்படுத்து. அது தெரியாத உனக்கு நிமிடத்துக்கு நிமிடம் துன்பங்களும் துக்கங்களும் வருமென மறவாதே! இவ்வுலகம் கானல் நீர். அது தாகத்தைத் தணிக்காது. நீ காணும் ஒன்றும் சத்தியமாக இல்லை. அது மாயை. அனைத்தும் அழியக்கூடியதாம். அழியக்கூடிய உலகில் சுகத்தை அநுபவிக்க உன் மனம் கடல் அலைபோலத் தத்தளிக்கிறது. மனதையடக்கு. மனம் போன போக்கெல்லாம் போகாதே! மனத்தை வென்றால் உனக்குள் உள்ள ஆன்மா ஒளிவீசும் சோதியாகத் தெரியும்.
நீ பரிசுத்தனாக இல்லாததால் உன் மனம் அடங்கமாட்டேன் என்கிறது. உனக்கு சித்திகள் கைவரவேண்டும் எனும் அவா உள்ளுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. இதுவே கொடிய விரோதி. மனோசக்திகளால் சித்திகள் பெருபவன் சித்திகளுக்கே அடிமை ஆகிவிடுகிறான். ஏதோ ஒரு சித்தி கிட்டியதும், தன்னை மறந்து அகங்காரங்கொண்டு திமிர் பிடித்து அலைகிறார்கள். சித்திகளின் பிடியிலிருந்து விடுபடமுடியாது அடுத்த பிறவி எடுக்கிறார்கள்.
*****************
அன்பின் ஐயா,
"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்பதன் உள்ளடக்கம் தானே!..நீங்கள் சொல்லியது? அப்படி இந்த உலகில் இப்போது யாரும் இல்லை ஐயா..பெற்றவர்கள் உட்பட!...
மனித வாழ்க்கையில் எல்லாம் மாயா என்றால்? ஏன் இல்லறபந்தத்துள் தம்மை பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும் ஐயா? எல்லோரும் 'சித்தார்த..புத்தனாகி விடலாம் இல்லையா?...
கொஞ்சம் விளக்குங்களேன்..எதையும் எதிர்பாராமல் செய்கின்றோம் என்றாலும்..ஏமாறும் போது மனது வலிக்கிறது அதன் பிறகு தான் புரிகிறது ஓகோ எதையோ எதிர் பார்த்தோம் என்பது...
என்றென்றும் நட்புடன்
உங்கள்
சுதனின்விஜி.
*****************************
அன்பு சுதனின்விஜி,
இப்பொழுதுதான் என் மனம் குளிர்ந்தது. ஏன்? நான் உங்களிடமிருந்தெல்லாம் வினாக்கள் வரவேண்டும். உங்களுக்கெல்லாம் ஐயம் திரிபற ஞானம்
தரவேண்டுமெனும் எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் சர்வ சாதாரணம். ஆக, ஏமாற்றத்தைத் தவிற்க எதையும் எதிர்பாராதே!
"கடமையை செய் பலனை எதிர்பாராதே"
இல்லறவாசியின் கடமை, சான்றோரை மதித்து உபசரித்தல், பிறரிடன் அன்பு செலுத்தல், தன்னைப் போல் பிறரையும் நேசித்தல், விருந்தோம்பல்,
குடும்பத்தின் நலன், இனப்பெருக்கம், இன்னும்............... இந்த இனப்பெருக்கம் அளவுடன் கூடியாதாக இருத்தல்வேண்டும். அதற்காகத்தான் இறைவன் வரம் கொடுக்கும்போது, "அறிவுள்ள ஒரு பிள்ளை வேண்டுமா? அல்லது மூடர்களாக நிறைய குழவிகள் வேண்டுமா? எனக் கதைகளில் வருவது. அப்போது
திருமணம் எல்லாம் வேண்டுமல்லவா?
எல்லோரும் 'சித்தார்த..புத்தனாகி விடலாம் இல்லையா?...
இல்லறமில்லையேல் துறவறம் பூரணமாகாது. அப்போது உலகம் வளர்ச்சியுறுதல் எஞ்ஞனம்? உந்தும் உணர்வுகளைத் தணித்தல் எப்படி? இங்கேயே எண்ணங்கள் சிதறினால் எண்ணம் ஒரு நிலைப்படுவது எவ்வாறு? எண்ணமடங்கினால் அல்லவோ மனம் அடங்கும்?
விடை சரியா?
ஞானவெட்டியான்
****************************
அன்பு சிவா,
"மனமே முருகனின் மயில் வாகனம்"
மயில் மாயையின் தத்துவம். மனமடங்க மாயை அடங்கும். மாயை அடங்க உள்ளொளி சோதி காணும்.
"தானென்ற ஐம்பத்தோ ரட்சரத்தை
சத்தியமாய் மனதடங்கி யண்டத்துள்ளே
ஊனென்று பாயுமடா வுந்தனன்பு
ஒன்றான அட்சரமே பிர்மந்தன்னிற்
கோனென்ற ஒடுங்குநிலை பெற்றுமைந்தா
கோடிரவி மதியினுட காந்தியாலே
தேனென்ற அண்டவுச்சி தன்னைச்சுற்றித்
திருவான பஞ்சாக்கர மிதுவுமாச்சே."
(சுப்பிரமணியர் ஞானம்)
மனமடங்கவில்லையெனில் எண்ணங்கள் பாக்கி இருக்கும். அதற்குத் தக்கவாறு பிறவி எடுக்க வேண்டும். செட்டிநாட்டில் "தித்துவழி பண்ணத்தான்" என்பார்கள். பிறவிப்பிணி அகலவேண்டும்.
********************************
நன்றி ஐயா
மிக அருமையான விளக்கம்...அந்த பாடலை கொஞ்சம் விளக்கினால் நன்று...(சுப்பிரமணியர் ஞானம்)
சிவா..
> > "தானென்ற ஐம்பத்தோ ரட்சரத்தை
> > சத்தியமாய் மனதடங்கி யண்டத்துள்ளே
> > ஊனென்று பாயுமடா வுந்தனன்பு
> > ஒன்றான அட்சரமே பிர்மந்தன்னிற்
> > கோனென்ற ஒடுங்குநிலை பெற்றுமைந்தா
> > கோடிரவி மதியினுட காந்தியாலே
> > தேனென்ற அண்டவுச்சி தன்னைச்சுற்றித்
> > திருவான பஞ்சாக்கர மிதுவுமாச்சே."
> > (சுப்பிரமணியர் ஞானம்)
தான் என்னும் நம் உருவம்தான் சிதம்பர இரகசியத்தின் 51
அக்கரங்களாம்(அட்சரங்களாம்). இதில் முக்கியமானது தான் என்னும்
அகங்காரத்தை அண்டமாகிய முட்டையாம் நினைவுக்குள்ளே அடக்கி மனமும் அடங்கி ஒன்றே ஒன்றான ஓங்காரம் பிருமம் இருக்குமிடத்தை அடைந்து சிறப்பு மிக்க ஒடுக்கநிலை பெற்றிடும். கோடிசூரியன், கோடிசந்திரன் சேர்ந்ததுபோல்
ஒளிவீசும் ஒளியாலே தேன்போன்ற அமுதம் சுரக்கும் அண்டவுச்சியாம் கபாலத்தை செல்வமிகு "சிவயநம" எனும் பஞ்சாகரத்தால் கிரி வலம் வருவாய்.
51அக்கரங்களும் ஐந்துக்குள் அடக்கம் எனும் பொருளும் உண்டு.
*********************************
என் அன்பு ஐயா,,
அருமையான விளக்கம் ஐயா,
ஒருவன் அறியாமல் தவறு இழைத்தால்..அந்த தவறுக்கு என்ன மன்னிப்பு ஐயா?..அதை மனதிலே சுமந்துகொண்டு மீதி நாட்களையும் வீணாக்குவது சரியாகுமா?..
எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று எங்கள் வீட்டில் அடிக்கடி அம்மா சொல்வார். எங்கள் சின்ன வயதுகளில்..'தவறு செய்யாதே என்பதிலும் ஏன் தவறு இழைக்க கூடாது என்ற விளக்கம் இருந்தால்..தவறு என்பதே...இல்லாமல் ஒழிந்து விடாதா?..
குழம்பி நிற்கும் நிலையில் உங்கள் விளக்கம் எனக்கு இருளகற்றும் ஒளிவிளக்காக இருக்கிறது ஐயா..
இன்னும் கேட்கும்,
ஆவலோடு,
உங்கள்
சுதனின்விஜி.
********************
அன்பு சுதனின் விஜி,
அறியாது (தவறிச்)செய்வது தவறு. அறிந்து செய்வது தப்பு. தவறிச் செய்துவிட்டேன் என மனம் வருந்திப் பின் அதே தவறைச் செய்யாதிருப்பின் விமோசனம். மனதிலே சுமந்துகொண்டு மீதி நாட்களையும் வீணாக்குவது சரியாகாது.
தினை விதைத்தவன் தினையறுப்பான்; வினை விதைத்தவன்? தவறு செய்தால் தனக்கே தீம்பு வருமென உணர்ந்து செய்யாமலிருப்பதே சிறந்தது.
"தன்னைப் போல் பிறரையும் நேசி." இதை யாவரும் உணர்ந்துவிட்டால் தப்புமில்லை, தவறுமில்லை.
.......தொடரும்
Posted by ஞானவெட்டியான் at 5:32 PM 0 comments
Labels: ஞானமுத்துக்கள்
நம் கைமுதல்
நம் கைமுதல்
*******************
பராசக்தியின் அம்சமான நமது தாயானவள் நம்மைப்பெறும்போதே நம்மை நன்றாக வாழவைக்க வேண்டும் எனும் எண்ணத்தாலேயே நமக்குப் பதினாறு வயது வரை வளரும் அளவுக்கு விந்து சக்தியைப் பாலின் மூலமாகத் தருகிறாள். இதுவே நமக்கு அன்னை அளித்த கைமுதல் (CAPITAL). இதை நாம் 16 ஆண்டுகளுக்குப்பின் திருப்பித் தரவேண்டும் எனும் விதி(condition)யையும் விதிக்கிறாள். 16ம் அகவை முடிந்தவுடன் அன்னை பராசக்தி (பெற்றவளும் பராசக்தியே) முன்னால் கொடுத்த பால் கடனை வசூலிக்க எண்ணி மன்மதன் என்னும் சேவகன் மூலமாய் நமக்குப் பல தடவைகளில் அறிவிக்கிறாள்(reminder notice). சிறிது காலத்திற்குப்பின், இப்போது நம் கடனை வட்டியுடன் கொடுக்கத் தயாராயிருப்பான் என்றெண்ணி, ஒரே தடவையில் கடன்காரன் மனம் வருந்துபடி வசூல் செய்தலாகாது என எண்ணி நமக்குத் திருமணம் செய்துவைத்துத் தன் பிரதிநிதியான பெண்ணைக நமக்கு மனைவியாக்கி அவள் கடனைத் தவணை முறையில் வசூல் செய்ய அனுப்புகிறாள்.
சத்தியின் பிரதிநிதியாம் நம் மனைவி, நம் உடலாகிய முதலை நன்குணர்ந்து, நாம் ஒரே முறையில் இவனிடத்தில் விந்தெனும் கடன்துகையைப் பெற எண்ணுவோமாகில், இவன் உடலாகிய முதல் அழிந்துவிடுவதுடன் நமது முழுத்துகையும் வசூலாகாது; ஆதலால், இவனிடத்தில் சிலகாலமிருந்து நம் எசமானியாம் பராசத்தி கொடுத்த பாற்கடனை வசூலிப்போம் என்று கருதி, "தோலிருக்கச் சுளை விழுங்குவதுபோல்", நம் உடலாகிய முதலை, மனம் என்னும் வணிகனைக்கொண்டு, உலக விவகாரம் என்னும் வியாபாரத்தை நடத்தி, உடலெனும் முதலினாலுண்டாகும் விந்து என்னும் இலாபத்தை அப்போதைகப்போது வசூல் செய்து கொண்டுள்ளாள். (மாதரசிகள் மன்னிக்க!!!)
இதைக் கொஞ்சம் அறிந்த நழுவும் பேர்வழிகள் என்ன செய்கிறார்களெனில், "சத்தியானவள் நம் அறியாப் பருவத்தில் நாம் கேட்காமலேயே வலிய வந்து கொடுத்ததை வட்டிமுதலுமாக அடாதுடியாக வசூலிக்க வருகிறாள். கொடுக்காவிடில் பலவிதமான தொந்தரவுகள் தருவாள். ஆகையால் அவளுக்குத்தெரியாது காட்டில்போய் ஒளிந்து கொண்டுவிடுவோம் எனத் துறவு கொண்டு ஓடிப் போய்விடுகிறார்கள். அதைக் கண்ட சத்தி சினங் கொண்டெழுந்து, "கடன்காரப்பயலுக்கு அவ்வளவு தைரியமா?" என மன்மதனை அழைத்து, "அவனைக் கண்டுபிடித்துக் கடனைக் கேட்டு வா!" என்கிறாள். மன்மதனும் துப்பறிந்து துறவியைக் கண்டுபிடித்துக் கடனைக் கேட்க, துறவியும் அதைஇதைச் சொல்லி இல்லையென்கிறான். மன்மதனும் முடியவில்லை என சத்தியிடம் கூற, சத்தியும் தன் தூதுவர்களான விலைமாதர்களைப் புணர்ச்சி(சையோகம்) எனும் வாரண்டை அனுப்பி வைக்கிறாள். அதற்கும் தப்பித்துக்கொண்ட முனிவரிடத்துத் தானே நேரில் சென்று அவர்களின் கனவில் விந்தொழுகல் எனும் பிடிவாரண்டைப் பிறப்பிக்கிறாள். அப்போது அந்த முனிவர்களோ, இனி தப்பிக்கவியலாது என்றெண்ணிக் காலில் விழுந்து கடனை இரத்து செய்திடு தாயே! நான் தவக்கோலத்திற்கு இழுக்கு தேடமாட்டேன் என்றெல்லாம் சொல்லி, கருணையின் வடிவான சத்தியைக் குளிரவைத்து விடுகிறார்கள். அவர்களுடைய திட சித்தத்திற்காக, இரக்கமும் வியப்புமுற்று மன்னித்து, "தனக்கு உண்மையான ஊழியனாக இருக்கும்படி ஆணையிட்டு, அவனை முழுவதும் சோதித்து, அருளாகிய மெய்ப்பொருளைக் கொடுத்து மெய்ஞானியாக்கி விடுகிறாள்.
உலகாயதத்தில் மயங்கிய மற்றவர்கள், வாரண்டாகிய விலை மாதர்களுடன் கூடிக் குலவி முதலை இழந்து வெட்டை முதலிய நோய்களை வரவழைத்துக்கொண்டு, நரகக் குழியில் தானே விழுவார்கள். இக்கடனையும் பிராரப்த கருமத்தில் சேர்த்துக் கொள்ளுவர்.
(இது சிறு வயதில் இராமாயண நாடகத்தில் பார்த்தது. கோர்வையில்லாவிடின் நாடகத்தை நடித்தவர்கள்தான் விடை கூறவேண்டும்.)
நாடகத்தின் இறுதியில் பராசத்தி பரிபாலனமெனும் பாடலொன்றைக் கோமாளி மேடைக்கு வந்து பாடுவார்:
"மாதாவாய் வந்து அமிர்தந்தந் தாள்மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத் தாள்
ஆதர வாகிய தங்கையா னாள்நமக்
காசைக் கொழுந்தியும் மாமியா னாள்"
ஆக, பெண்கள் எல்லோருமே சத்தியின் அவதாரமே.
Posted by ஞானவெட்டியான் at 5:31 PM 1 comments
Labels: ஞானமுத்துக்கள்
விளக்கம் தேவை!
விளக்கம் தேவை!
***********************
ஒரு சாதாரண மனிதன் கூட யாரவது தவறு செய்தால் காலப் போக்கில் மன்னித்து விடுவான். ஆனால், நாட்டில் நடக்கும் அநியாங்களை கொடுமைகளையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் கடவுளை வணக்கவேண்டுமா?
தங்களின் முதல் வினாவுக்கு அடிப்படை:-
இறைவன் இருக்கிறானா? இல்லையா?
இறைவன் ஒருவனே. அவன் இருக்கின்றான். சந்தேகமே இல்லை.
ஞானிக்கு சந்தேகத்தில் (சந்+தேகத்தில் = ஒளிபொருந்திய உடலில்) இருக்கிறான்.
பக்திவழி செல்வோனுக்கு ஆலயத்தில் உள்ள கல்லில் இருக்கின்றான்.
சித்தர்களுக்குச் சித்தமாக இருக்கின்றான்.
குழந்தைக்குத் தாயாக உள்ளான்.
நல்லவைகள் நடக்கும்போது "இது என் வலிமையால்"என மார்தட்டி மகிழ்பவன், துன்பம் வரும்போது "இருந்தாலும் இந்த ஆண்டவனுக்கு இரக்கமே இல்லை.என்னைக் கொடுமைப் படுத்துகிறான்"எனப் புலம்புவது நியாயமா? பின்னர், இப்படிக் கொடுமைப்படுத்துவன் இறைவனில்லை; அவனைத் தொழத்தான் வேண்டுமா? எனக் கேட்பதும் நியாயமோ?
குழந்தை தாயிடம் பாசம் காட்டவேண்டுமா என்னும் வினாவிற்குக் கிட்டும் விடையே, இறைவனைத் தொழத்தான் வேண்டுமாவெனும் வினாவுக்கும் விடை.
அன்றாட செய்தித்தாள் வாசித்தால் பெண் குழந்தை சித்திரவதை.கற்பழிப்பு.
ஒரு வ்யது குழந்தை படும் பாடு; பட்டவர்களுக்குத்தான் அந்த வேதனை, வலி தெரியும். மனதில் வடு.. சிறுகுழந்தை என்ன் செய்தது...??
அப்படி என்றால் ஒரு சாதாரண மனிதனின் இதயத்தைவிடக் கடவுள்
இதயம் கல்லானதா? சிறுமையானதா?
இறைவன் மனிதனை நித்தியத்திற்க்காகவே படைத்தான்.
நாமும் குழந்தைகளைப் பெறுகிறோம். அதற்கு உடல் நலமில்லயெனில் எங்ஙனம் துடிதுடித்துப் போகிறோம்? அந்த டாக்டரிடம் போகலாமா? இந்த டாக்டரிடம் போகலாமா? டாக்ஸியைக் கூப்பிடு. என பதைபதைத்துப் போகிறோம். நம் குழந்தைக்கு நாமே இவ்வளவு அக்கரை காட்டி அல்லோகலப் படுத்தும்பொழுது, சர்வ வல்லமைகொண்ட இறைவன் தன் பிள்ளைக்குத் துன்பம் தர இசைவானா?
ஆயிரத்தெட்டு அண்டங்களையும், அதில் உள்ள சகல சீவராசிகளையும்
நமக்காகத்தான் படைத்துள்ளான். வேப்பம்பூவில் உள்ள தேனைஎடுக்க தேனீயைப் படைத்து, அதற்குப் பூவினுள்ளே நுழையும் அளவிற்கு உறிஞ்சுகுழல் கொடுத்துள்ளான். தேனீ அங்ஙனம் உறிபஞ்சிச் சேர்த்து வைத்திருக்கும் தேன் மனிதனுக்காக. இவ்வளவு இரக்கமுள்ள இறைவன் தன் பிள்ளைக்குத் துன்பம் தருவானா?
கலிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமைகளுக்காக இறைவனை இரக்கமில்லாத அரக்க இதயங்கொண்டவன் எனக் குற்றம் சாட்டுவதில் எமக்கு உடன்பாடில்லை.
போன பிறவிப் பலன் என்று சொல்லாதிர்கள்.. அப்படி என்றால் கடவுளின்
கையில் எதுவும் இல்லையா?
விதிஎன்பார் சிலர். விதி என்பது நாம் நமக்கு வரைந்துகொள்ளும் ஒரு
எல்லைக்கோடு. நமக்கு நாமே விதிக்கும் விதி. இது தவிற
தலையெழுத்தொன்றுமில்லை.
புடம் போடுகிறான். அப்பொழுதுதானே நாம் தங்கமென்பது புரியும் என்பார் சிலர். இவன் தங்கமென அடுத்தவருக்குப் புரிந்து இவனுக்கு ஆவதென்ன?
ஆக, உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.
கடவுளளை வணங்கி பிரயொசனம் இல்லையே???
இறைவன் படைத்தவன்.
தெய்வம் வழி நடத்துவது.
முதலில் தெய்வம் என்றால் என்ன? தெய்வம் மக்களுக்கு எதற்காக வேண்டும்? என்னும் வினாக்களுக்கு விடையறிதல் வேண்டும்.
என்பத்துநான்கு நூறாயிரம் சீவராசிகளில், மனிதனுக்குத்தான் எல்லாம்
தெரியும். தனக்கு வேண்டிய உணவைத்தேடிக்கொள்ள, நோய் வந்தால்
போக்கிக்கொள்ள, கல்வி கற்க ஆகிய எல்லாவற்றையும் செய்ய மனிதனால் முடியும். அப்படியிருக்க, இவனுக்குத் தெய்வம் எதற்கு? பணம் சம்பாதிக்கவா? பணத்தை உண்டாக்கியவனே இவன்தானே? விந்து வெளியேறி நாறிச் செத்தால், நரகமென ஒன்றிருந்தால், அங்கே கற்பகோடிகாலத்திற்கும் அவத்தைப்பட வேண்டியதுதான்.
அதற்காகவா இறைவன் மனுவுக்கு அறிவைக் கொடுத்தான்? இதற்காகவா வேதங்களும் கலைஞானங்களும் இவனுக்கு இறக்கப்பெற்றது? எந்தக் குறை இருப்பினும் பரவாயில்லை. ஏழையாயினும், பிள்ளைப்பேறு அற்றவனாயினும், நோய்நொடியில் அவத்தையுருபவனாயினும், அவன் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. வேறு எது இல்லா விட்டாலும் தெய்வம் கட்டாயம் அவனுக்கு வேண்டும். எதற்காக?
எமனிடம் போராடிப் பிறவிப்பிணியைப் போக்கவே இறைவன் வேண்டும். எமபடரை நீக்கிச் சிவமயமாக்கும் (விந்தடங்கிச் சாவதே சைவம்) ஒரு செயலுக்குத்தான் தெய்வம் தேவை. சாகாக் கலையாகிய பிரும்மவித்தை யார் கையிலிருப்பினும் அவரே தெய்வம். அதுவே நிசமான செயல்.
ஆக, இறைவனோ, கடவுளோ, தெய்வமோ எப்படியழைத்தாலும் சரி; அவர்களின் வேலை, நீங்கள் குறிப்பிட்டபடி நடக்கும் கொடுஞ் செயல்களைக் களைவது அல்ல. உங்களின் ஆன்மாவைச் சுத்தம் செய்து, எமன் கையில் சிக்காமலிருக்கும் (விந்தொழுகிச் சாகாமல்) செயலுக்கு உதவுவது ஒன்றே.
அப்புறம் ஏன் வணங்குகிறோம்? எனும் வினா வருகிறதல்லவா?
பசி வந்த குழந்தை அம்மாவை நோக்கி அழுவது அமுதுக்காக. அதுபோலத்தான்.
இங்க பாருடா!!! ஞானவெட்டியான் மேலே தெய்வத்துக்கு உன்னை நிமிடத்துக்கு நிமிடம் காப்பாத்துவது வேலை இல்லை என்றார். அப்புறம் காப்பாத்து என்று வணங்கு என்கிறார். முன்னுக்குப் பின் முரணாய் இருக்கிறதே!!!
ஆமாம். பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் இறைவனை நெஞ்சுருக வணங்குதல் வேண்டும். ஆனால் ஞான மார்க்கத்துக்கு வந்துவிட்டால், இறைவன் எமபடரை நீக்கும் குருவாகி விடுகிறான்.
சித்தம் சுத்தமாகிவிட்டால் அத்தன் தானே குடியேறுவான்.
Posted by ஞானவெட்டியான் at 5:27 PM 7 comments
Labels: ஞானமுத்துக்கள்
வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம்
***********************
இந்த விரதம் மகாலட்சுமியால் உபதேசிக்கப்பட்டது.
பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுதும் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள்.
வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, "தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?" என் வினவினாள். அவளை நோக்கி மகாலட்சுமி,"கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது நியாயமா?" எனக் கேட்டாள்.
செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து,"இங்கிருந்து போய்விடு" என்றாள். கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு,"அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?" என்றாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி,"பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தித் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்" என்றாள். உடனே சியாமா மகாலட்சுமியை உபசரித்து, அமரவைத்து, "அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்" என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள்.
லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். புகுந்த வீடு சென்றபின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவுக்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர். செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள்.
நாட்கள் கழிந்தன. ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, "இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்" என்றாள். சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொன்னுக்குப் பதில் கரித்துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான். இதை சியாமாவுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, சியாமாவுக்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள்.
அவ்வாறே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள். மாலாதரனோ,"அது கிடக்கட்டும். உன் பிறந்த வீட்டிலிருந்து நீ என்ன கொண்டுவந்தாய்?" என இகழ்ந்தான். அதற்கு சியாமா, என்ன கொண்டுவந்தேன் என்பதை நாளை உணவருந்தும்போது சொல்கிறேன்" என்றாள்.
இவள் பிறந்த வீட்டிலிருந்து விரதத்தை மட்டும்தானே கொண்டுவந்தாள் என எண்ணிக்கொண்டு அடுத்தநாள் உணவருந்த வந்த மாலாதரன் இலையில் சியாமா கனிவோடு உணவு வகைகளை இட்டாள். சுவைத்துப் பார்த்த மாலாதரன், முகம் சுளித்து,"ஒன்றில்கூட உப்பில்லை. மனிதன் தின்பானா இதை!" எனக் கடுகடுத்தான்.
அதற்கு சியாமா,"உப்பு ஒரு சாதாரணப் பொருள். அது இல்லையேல் உடலைக் காக்கும் உணவுகூட நஞ்சாகிவிடுகிறதல்லவா? அதனால்தான் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே! என்றனர் மூத்தோர். அதுபோல்தான் மகாலட்சுமி விரதமும். இதைத்தான் பிறந்த வீட்டிலிருந்து கொண்டுவந்தேன்" என்றாள். உண்மையுணர்ந்த மாலாதரன் அன்றுமுதல் விரதத்திலும் பங்கெடுத்துக்கொண்டான்.
கதை முடிந்து கத்தரிக்காய் காய்த்தது.
பூசனை முறை
*************
வீட்டில் பூசை அறையில் சுவரில் சுண்ணாம்பு அடித்து, மகாலட்சுமியின் படம் ஒன்றை மாட்டிவைக்கவும். அம்மனின் பார்வை நேர் நோக்காக இருத்தல் வேண்டும். முடிந்தால் அதற்குமுன் ஒரு மண்டபம் அமைக்கலாம். அதன் நடுவே நுனி வாழை இலையில் முழு பச்சை அரிசி பரப்பி அதில் பூசைக் (கடம்) குடம் (செம்பினால் ஆனது நல்லது. வெள்ளி செல்வந்தர்க்குறியது) வைத்தல் வேண்டும். அக்கடத்தினுள் அரிசி, காதோலை, கருகமணி, எலுமிச்சம் பழம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய வாசனைப் பொட்களின் துகள்கள், ஒரு உரூபாய் காசு ஆகியவற்றைப் போடுத்தல் நன்மை பயக்கும். கழுத்தளவு நீர் நிரப்பி வைத்து, கழுத்தில் ஒரு புதிய துணி(70செ.மீ) சுற்றி பரப்பியுள்ள அரிசியின்மீது வைக்க வேண்டும்.அக்கடத்தில் மகாலட்சுமியை விவரமறிந்த ஒருவரைக்கொண்டு ஆவாஹனம் செய்தல் வேண்டும். மற்றபடி பூசைக்கான சாமான்கள் எல்லாம் வைத்தல் வேண்டும். அத்துடன் தாலியாக அணிய மஞ்சள் சரடும், கைகளில் அணிய மஞ்சள் கயிறும் பூசையில் வைக்கவேண்டும். திருமணமாகாத பெண்களும் விரதம் கடைப்பிடித்து வந்தால் நல்ல கணவன் கிட்டிப் பொருளும், அட்டலக்குமிகளின் அனுக்கிரமும் கிட்டும். திருமணமான பெண்கள் தாலிச் சரடை அணிந்துகொண்டால் எப்பொழுதும் சுமங்கிலியாக இருப்பார்கள்.
அடுத்த நாள் கடத்தில் உள்ள அரிசியை, அரிசி சேமித்துவைத்துள்ள இடத்தில் வைத்தால் பஞ்சம் வராது.
Posted by ஞானவெட்டியான் at 5:26 PM 0 comments
Labels: ஞானமுத்துக்கள்
ஏழு ஆதாரங்கள்
ஏழு ஆதாரங்கள்
*******************
இவை இரு வகைப்படும்.
1.கீழாதாரங்கள் - 6
2.மேலாதாரங்கள் - 6
இவைகள் கண்ணுக்குப் புலப்படாது.
கீழாதாரங்கள் உடலிலும், மேலாதாரங்கள் தலைக்குள் மட்டும் இருப்பவை.
கீழாதாரங்கள் பிண்ட ஆதாரங்கள்.
மேலாதாரங்கள் சூக்கும ஆதாரங்கள்.
கீழாதாரங்கள் ஆறு:-
***************************
1.மூலம் - மூலாதாரம்
2.கொப்பூழ் - சுவாதிட்டானம்
3.மேல்வயிறு - மணிபூரகம்
4.நெஞ்சம் - அநாகதம்
5.மிடறு - விசுத்தம்(விசுத்தி)
6.புருவநடு - ஆக்ஞேயம்.
மூலம் என்னும் மூலாதாரம்
****************************************
குதம் என்னும் மலவாய்(எருவாய்), நீர்த்தாரை(மரும இடம்) ஆகியவற்றின் நடுவில் குண்டலி வட்டமும், அதனுள்ளே முக்கோண சக்கர வடிவமும், அதன் நடுவே நான்கு இதழ்கொண்ட கடம்ப மலரும், அதன் உள்ளே ஓங்கார வட்டமும், அதனுள்ளே "ஓம்" என்னும் பிரணவமும் அமைந்திருக்கும். ஓங்காரத்தில் ஒளிவீசும் "அ"காரத்தில் மாணிக்க வண்ணமுடைய கணேசரும், முக்கோணத்தில் ஒளிவீசும் "உ"காரத்தில் மரகத வண்ணமுடைய வல்லபை சக்தி அமர்திருக்க, கோணத்தின் முனையில் குண்டலி சக்தியானவள் எட்டு இதழ்களுடைய வாழைப்பூ தலைகீழாகத் தொங்குவதுபோலிருப்பாள். இவ்வெட்டு இதழ்களும் அட்டசக்திகளெனப்படும் எட்டு இலக்குமிகளாவார்கள்.
மண்(பிருதிவி) தத்துவம் .
போகர்:
******
1."காணவே மூலமது அண்டம் போலக்
..............காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
.............புறம்பாக இதழதுதான் நாலு மாகும்
நாணவே கமத்தட் சரத்தைக் கேளு
............நலமான வயநமசி ரீரீ யாகும்
மூணவே முக்கோணத் தொளிவோங் காரம்
...........முயற்சியா யதற்குள்ளே அகார மாமே."
2."அகரத்தின் மேலாகக் கணேசன் நிற்பார்
..........ஆதியொரு கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாள் சத்தி நிற்பாள்
.........ஒடுங்கியதோர் முனையொன்றிற் கதலிப் பூவாய்
புகாரமாய் முகங்கீழ்குண் டலியாஞ் சத்தி
.........பெண்பாம்பு போற்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையோ டுருவி நிற்பாள்
........துரியாதீ தம்மென்ற அவத்தை தானே."
3."ஓங்கியே மாணிக்கத் தொளீபோல் தோன்றும்
........உத்தமனே மூலத்தி னுண்மை காணும்
தேங்கியே வல்லபையாஞ் சத்தி தானும்
.......சிறந்திருந்தாள் பச்சைநிற மாகத் தானே"
4."பச்சைநிறம் வல்லபையைப் பணிந்து போற்று
.......பாங்கான ஆறுக்கும் பருவஞ் சொல்வாள்
மொச்சையாய் மூலமது சித்தி யானால்
.......மூவுலகுஞ் சஞ்சரித்துத் திர்ய லாமே."
ஞானம் எட்டி:-
**************
1."மதியிருந்து குமுறி விளை யாடும் வீடு
......மகத்தான செங்கதிரோன் மகிழ்ந்த வீடு
பதியிருந்து விளையாடு மூல வீடு
......பத்திதரும் சித்திதரும் பரம வீடு
துதிபெறவு நாற்சதுர மேலு நின்று துலங்கு
.....மெழிற் கணபதி வல்லபையைப் போற்றி
நிதிபெறவு மெனையீன்ற குருவின் பாதம்
.....நெகிழாம லனுதினமுங் காப்புத் தானே."
2."திருவிருந்து கனலெழுந்து ஆடும்வீடு
.......சிறந்தசத்தி வல்லபைதன் கணவ னான
மருவிருந்து கொஞ்சு தமிழ் நாவில்மேவு
.......மகிழ்ந்த மதகரி யினிரு தாளைப் போற்றி
கருவிருந்த பெருவீடு தாண்டி யப்பால்
.......கண்குளிர நின்று நடுவணையி லேறி
மருவியுயிர் நாதவிந்து ஆயி பாதம் வணங்கியிந்த
.......நூல் வகையைப் புகல்வே னாண்டே."
3."தந்திரமாய் முக்கோணந் தன்னில் நின்ற
தந்திமுகன் கமலபதங் காப்புத் தானே."
திருமந்திரம்:-
**********
"எருவிடு வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடு சோதியை யுள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே."
2.கொப்பூழ் - சுவாதிட்டானம்
*************************
இது மூலாதாரத்திற்கு நான்கு அங்குலம் மேல் உள்ள இலிங்கத்துக்கும், நாபி எனப்படும் கொப்பூழுக்கும் நடுவில் உள்ளது. நாபியைக் குய்யம் என்பதுவுமுண்டு. இது நாற்சதுர வீடு. இதன் நடுவில் ஆறிதழ் தாமரை வட்டமும், அதன் நடுவே "ந"கார எழுத்தும் உடையது. அந்த நகார வட்டமாம் இலிங்க பீடத்தின் நடுவே அக்கினிபோல் செந்நிறத்தையுடைய பிரும்மனும், சரசுவதி தேவியும் கொலுவீற்றிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
போகர்
*****
"துதிசெய்து மூலத்தைத் தாண்டியப்பால்
......துடியான வொருநாலங் குலமே தாண்டப்
பதிசெய்த பிரமனுட வீடு மாகும்
......பகர்ந்தசுவா திட்டான மென்னும் பேரு
அதிசெய்த நாலுவட்டம் வளையஞ் சுத்தல்
......ஆறிதழ்தான் அட்சரத்தை அறியக் கேளே."
ஞானம் எட்டி
***********
"கதிரொத்த விடந்தனிலே யிலகுஞ் சோதி
.......கனகரத்ன மிலகுதிரு மண்ட பத்தில்
மதியொத்து நின்றிலங்குஞ் சுவாதிட் டானம்
.......வளர்ந்தவித ழிம்மூன்றா மங்கு லத்தில்
நிகரொத்த பிரமன் சரசு வதியின் பாதம்
.......நினைந்துருகித் தாளிணையைப் போற்றி செய்து
உதிரத்தில் சுக்கிலந்தான் வந்த வாறு
.......மோரெழுத்தா நாதவிந் தமைத்த வாறே."
திருமந்திரம்
**********
"நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தாள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே."
3.மேல்வயிறு - மணிபூரகம்
*************************
இது சுவாதிட்டானத்திற்கு மேள் ஆறங்குலத்தில் உள்ள நாபி என்னும் உந்தி எனச் சொல்லப்படும் இடம். உந்தி என்பதை உன்+தீ என்பார். இது கோழி முட்டையைப்போல் 1008 நரம்பு நாடிகள் சூழப்பட்டுள்ளது. இதுதான் நாடி நரம்புகளுக்கெல்லாம் ஆதாரத் தானம். இது நீர் தத்துவம். எட்டு நாட்பிறை போன்ற வடிவமும் அதன் நடுவே 10 இதழ் தாமரை வட்டமும். அதன் நடுவே "ம"கார எழுத்தும், அதன் நடுவே மரகத வண்னமான மகாவிட்டுணுவும், மகா இலக்குமியும் கொலுவிருப்பதாய்க் கூறப்பட்டுள்ளது. இதில் மின்னல் போல் பிரகாசம் தோன்றும்.
ஞானம் எட்டி
***********
"சொல்லரிய மந்திரத்துக் கெட்டா வீடு
......சோதிமணி பூரகத்தி லமைந்த மூர்த்தி
வெல்லரிது நாபியதின் கமலத் துள்ளே
......விளைந்த விதழீரைஞ்சு பத்து மேலும்
வல்லபமாய் நின்றிலங்கு மாலின் தேவி
......வளர்ந்தசபைத் திருமாலை வணங்கிப் போற்றித்
தொல்லுலகி லுள்ளபெரி யோர்கள் பாதந்
......துதித்திந்நூல் விளம்புகின்றே னாண்டே கேளீர்."
போகர்
*****
"மாலினுட வீடதுத னறுவி ரன்மேல்
.....மாசற்ற பிறைபோலே கோட்டை யாகும்
பாலினுட வளையம்போற் பத்தி தழ்தான்
....பத்திதழி னட்சரத்தின் பயனைக் கேளு
தாலினுட சனகமகா முனியின் தாயார்
....தயங்காத நரபர்ப்பர் தன்மையாகும்
ஆலினுட மனநடுவிற் பூத மப்பு
....அதின்பீசம் வங்கென்று அறிய லாமே."
4.நெஞ்சம் - அநாகதம்
********************
இது மணிபூரகத்துக்கு 8 அங்குலம் மேல் இருதயத் தானத்தில் முக்கோண வடிவாய் உள்ளது. இதன் நடுவே 12 இதழ்த் தாமரையும், அதன் நடுவே "சி"கார அட்சரமும் தோன்றும். அதிலே உருத்திரனும், பார்வதியும் கொலுவிருப்பர். அங்கு மின்மினியின் பிரகாசம் தோன்றும். இது வாயுவாம் தேயுவின் கூறு. இதை இருதயக் கமலம் என்பர்.
ஞானம் எட்டி
***********
"வட்ட மிட்ட சட்கோணப் பாரின் மேலும்
......வளர்ந்த வித மீராறா மங்கு லத்தில்
திட்டமிட்ட வனாகதத்தில் வீற்றி ருந்த
......சிறந்தருளும் ருத்திர னுத்திரியைப் போற்றி
வெட்டவெளி வேதமறை நான்கு மோதும்
......வேத மெலாந் திருநீறா யான வாறும்
அட்ட திசை யறிந்துணர்ந்த பெரியோர்பாத
......மைம்பத் தோ ரட்சரமுங் காப்புத் தானே."
போகர்
*****
"அறிவுக்கு மேலேயெட் டங்கு லத்துக்
.......கப்பால் நாகத்தின் வீட்டைக் கேளு
முறிவுக்கு முக்கோண மாகி நிற்கும்
.......முதிர்வளையம் பன்னிரண்டு இதழு மாகும்."
5.மிடறு - விசுத்தம்(விசுத்தி)
*************************
இது அநாகதத்திற்கு 12 அங்குலத்துக்கு மேல் உள்ள கண்டம் என்னும் தானத்தில் அறுகோண வடிவாயிருக்கும். அதன் நடுவே 16 இதழ்த் தாமரையும், அதன் நடுவே "வ"கார அட்சரமும் பிரகாசிக்கும். அவ்வட்சரத்தின் நடுவே மேகவண்ணத்துடன் மகேசுவரனும், மகேசுவரியும் கொலுவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஞானம் எட்டி
***********
"ஆறுகொண்ட வம்பலத்தி னின்ற சோதி
.....யம்பரமாந் தற்பரத்தை யேறி நித்தம்
வீறுகொண்ட வறுகோண வீட்டின் மேலும்
.....விளங்குமிதழ் பதினாறு மேவு பீடம்
பேறுபெற்ற மயேசன் மயேசு வரியு மங்கே
.....பேணியவ ரிருவர்பதக் கமலம் போற்றிப்
பாரிலுள்ள வேதமறி யாமல் நின்ற
.....பழம் பொருளைப் பாடுகிறே னாண்டே கேளே."
போகர்
*****
"ஏறவே பன்னிரண்டங் குலமே தாண்டி
......ஏற்றமாம் விசுத்தியென்ற தலமு மாகும்
மாறவே அறுகோண வளையம் ஒன்று
......மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்."
6.புருவநடு - ஆக்ஞேயம்.
**********************
விசுத்திக்கு 16 அங்குலத்துக்குமேல் நெற்றியில் புருவமத்தியில், இரண்டிதழ் கொண்ட தாமரையும் அதன் நடுவே "ய"காரமும், அதன் நடுவே சதாசிவனும், மனோன்மணியும் கொலுவிருப்பதாகக் கூறுவர். இது சூரியனின் ஒளியோடு இருக்கும் ஆகாயத்தின் கூறு.
ஞானம் எட்டி
***********
"காலை வட்ட மாலை வட்ட மாகி நின்ற
......கதிர் முனையிற் சுருதி முனை யாடுஞ் சோதி
நீல வட்டங் கொண்டெழுந்து கலையெண் ணான்கும்
......நின்றிலங்கு மாக்கினையி லிதழிரண்டு
ஞாலமதி லாதியந்த ரூப மான
......நற்கமல மாயிரத்தெட்டிதழின்மேலும்
ஆலவிட முண்ட சதா சிவனைப் போற்றி
......யம்பிகையின் கமலபாத மர்ச்சித் தேனே."
போகர்
******
"மேலேறி யிரண்டுபுரு வத்தி னூடே
......மிகையான அண்டம்போல் நிற்கு மப்ப
வாலேறி வட்டமாம் வீடு போலே
.....வளையமொன்று இரண்டிதழ்தான் எரஸ்ரீ யாகும்
ஆளேறி அங்கெனுமட் சரத்தி னூடே
.....ஆகாச பூதமாம் பூத பீசம்
ஆலேறி மனோன்மணி சதா சிவன்றான்
.....அவத்தைதான் சாக்கிரத்தின் வீடு மாமே."
பிரபுலிங்க லீலை
***************
"இரண்டோ டிரண்டு மூவிரண்டை யிரண்டா றிரண்டு மீமிசையெண்
ணிரண்டோ டிரண்டு கொண்டிருந்த இதழ்ப்பங் கயங்கள் கடந்து
இருந்த குளத்தின் மேலோராயிரத்தோட் டமல கமலமிசை போய்
யிருந்த சோதி தனைக்கண்டெம் எண்ண முடிப்பே மெனவெழுந்து."
திருமந்திரம்
**********
"நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறு
மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங்
காலங்கண் டானடி காணலு மாமே."
இவ்வாறு ஆதரங்கள் அல்லாது ஏழாம் ஆதரம் ஒன்றுளது. அது கீழாதரம், மேலாதாரம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்(பொது). அதுவே பிரம்மரந்திரம்.
பிரம்மரந்திரம்
************
ஆக்கினைக்கு எட்டு அங்குலத்திற்குமேல் சகத்திரதளமெனப்படும், ஆயிரவிதழ் அல்லது ஆயிரதெட்டிதழ் தாமரை எனச் சொல்லப்பட்ட இதழ்களையுடைய ஒரு தாமரைப்பூ உள்ளது. அதில், நாதவிந்துத்தானம் ஐங்கோனத்துள் ஓரிதழ்த் தாமரையாய் உளது. இதுவே, பரகாயமெனவும், பிரம்மரந்திரமெனவும் சொல்லப்படுகின்றது.
போகர்
*****
"தானான மனோன்மணியைத் தாண்டி யப்பால்
.....தனித்தோ ரெட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபதந்தான் கூட்டிப் பாரு
.....குறிப்பான இதழோரா யிரத்தெட் டாகும்
ஆனான நடுமையம் ஐங்கோ ணந்தான்
.....அகரமாம் மகாரமொடு வகார மாகும்
நானான நாதமொடு விந்து அஞ்சும்
.....நலமுளவைங் கோணத்தில் நிற்கும் பாரே."
ஞானக் கும்மி
************
"விந்து இருந்த விடந்தனிலே குரு
.....நந்தி யிருந்தார் கொலுவாகிச்
சிந்தை தெளிந்து மகாரம்வைத் தாலந்தச்
.....சீமானைக் காணலாம் ஞானப்பெண்ணே."
Posted by ஞானவெட்டியான் at 5:09 PM 8 comments
Labels: ஞானமுத்துக்கள்
கிரந்திகள் - முடிச்சுகள்
கிரந்திகள் - முடிச்சுகள்
***************************
கிரந்தி எனில் முடிச்சு, மாசு,மறப்பு (யாவற்றையும் மறத்துக்கொண்டிருக்கும் திரைகள்).
பிரபுலிங்க லீலையில், சிவன்,உருத்திரன்,திருமால்,நான்முகன் ஆகியோரது தோற்றத்தை கீழ்க்கண்டவாறு விளக்கப் பட்டுள்ளது:
சிவத் தோற்றம்:
“பரமசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி
உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கந் தன்னின்
வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைபொ ருந்தும்
அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.”
சிவலிங்கத்தினின்று சதாசிவன் தோன்றுவான். ஞானசத்தி அவனைப் பொருந்துவதால் சிவன் தோன்றுவான்.
(திரிவு - மாறுபாடு; உரைமனம் இறந்து நின்ற - வாக்கையும் மனத்தையும் கடந்து நின்ற)
உருத்திரன், திருமால் ஆகியோரின் தோற்றம்:
“சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியவ் விருவ ரானும்
தோற்றுவன் உருத்தி ரன்றான் சொல்லிய அவற்குச் சத்தி
மாற்றருங் கிரியை யென்பர் மற்றிவர் இருவர் பாலும்
போற்றுறும் அரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால்.”
(சாற்றும் - சொல்லும்; போற்றுறும் - போற்றுதலைப் பெறுகின்ற; அரி - திருமால்; பொறி - திருமகள்)
சிவனுக்கு இச்சா சக்தி சத்தியாவாள். இவ்விருவராலும் உருத்திரன் தோன்றுவான். உருத்திரனுக்குக் கிரியா சக்தி சத்தியாவாள். இவ்விருவராலும் திருமால் தோன்றுவான். திருமாலுக்குத் திருமகள் சத்தியாவாள்.
நான்முகன் தோற்றம்:
“அத்திரு மாலு மாவும் அளிப்பவந் துதிப்பன் வண்டு
மொய்த்திசை முரலுஞ் செங்கேழ் முளரிவா னவன வற்குச்
சத்திவெண் கமலை அன்னோர் தரவரும் உலகின் தோற்றம்
நித்தனங் குகு கேச னினைவுமாத் திரையி நாமால்.”
(மா - திருமகள்; இசைமுரலும் - இசைபடுகின்ற; செங்கேழ் முளரி - செவ்விய நிறத்தையுடைய தாமரை; வெண்கமலை - வெண்டாமரையில் இருக்கும் கலைமகள்; குகேசன் - அல்லம தேவன்,(உள்ளக்)குகையிலிருக்கும் ஈசன்; னினைவு மாத்திரை - எண்ணம் ஒன்றாலே;
திருமாலும் திருமகளும் நல்கலால் நான்முகன் தோன்றுவான். அவனுக்குக் கலைமகள் சத்தியாவாள். இவ்விருவராலும் உலகத் தோற்றங்களெல்லாம் உண்டாகும். இவ்வளவும் குகேசனது ஓர் எண்ணத்தினால் உண்டாவதாகும்.
மும்மலங்கள் : ஆணவம்,மாயை,கன்மம்
மூலப்பொருள்: உருத்திர கிரந்தி, விட்டுணு கிரந்தி, பிரம்ம கிரந்தி
ஆணவத்தின் மூலம் “நான்” என்னும் அகந்தை. அது வெளிப்படும்போது ஆணவமாக விளிக்கப்படுகிறது. அது உருத்திர கிரந்தி.
விட்டுணுவே மகாமாயை. ஆகவே, மாயை விட்டுணு கிரந்தி.
கிரியையைத் தலையாக உடையவன் பிரம்மா. தோற்றங்கள் அவனால் உண்டாகின்றன. ஆகையினால், கன்மம் பிரம்ம கிரந்தி.
இம்மலங்கள் மூன்றினுக்கும் மூலம் மறப்பு(நினைவற்ற நிலை). இதுவே பெரிய கிரந்தி.
உருத்திரன், பிரமன் ஆகியோரது தோற்றங்களை வைத்து கிரந்திகளின் பெயர்களை மாற்றிச் சொல்வதும் உண்டு. ஆகவே, அவர்களின் தோற்றங்களுக்கு நூலாதாரமும் தந்துள்ளேன்.
Posted by ஞானவெட்டியான் at 5:09 PM 0 comments
Labels: ஞானமுத்துக்கள்
உனக்கு எது சொந்தம்?
உனக்கு எது சொந்தம்?
*************************
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அரசனாம். அவனுக்குத் தான் அரசனாகவும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் ஆன்ம இலாபம் தரும் ஞான வினையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தணியாத ஆவல். உடனே மந்திரியைக் கூப்பிட்டு, "நம் நட்டில் உள்ள குருமார்கள் இங்கு அரண்மனைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஞான வித்தைகளை எனக்குப் பயமின்றி உபதேசிக்கலாம்; அப்படி செய்யும் உபதேசங்களில் என் மனதைக் கவரும் உபதேசம் எதுவோ அதற்கு, உபதேசித்தவர்
கேட்பதைப் பரிசிலாகத் தருவோம்" என பறையறிவிக்கச் சொன்னான்.
வாயிலில் ஒரு ஆராய்ச்சி மணியையும் கட்டினான். வந்தவர்கள் மணியை அடிக்க, மந்திரி அவர்களை அழைத்துப் போய், நீராட, உண்ண, உடுக்க எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து அரசவைக்கு இட்டுச் செல்வார்.
இதைக் கேள்வியுற்ற குருமார்களும், அறிஞர்களும் அரசவை சென்று தங்களுக்குத் தெரிந்தவற்றை உபதேசிக்க மன்னனுக்குத் திருப்தி இல்லை. அவர்களையெல்லாம் விருந்தினர் மாளிகையிலேயே சிறை வைத்துவிட்டான்.
அவ்வூரில், ஒரு சிற்றூரில் அட்டகோணலுடன் விகாரமான சிறுவன் இருந்தான். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவனை உன் தந்தை யாரெனக்கேலிபேச, வீட்டுக்கு வந்தவன் அன்னையிடம், "என் தந்தை எங்கே?" எனக் கேட்டான். "அப்பா மகனே! உன் தந்தையை அரசன் சிறை வைத்துள்ளான்" என முழுக் கதையையும் கூற, "அம்மா! நான் போய் அப்பாவை மீட்டு வருகிறேன்" எனத் தாய் தடுத்ததையும் மீறிக் கிளம்பி அரசவை வந்தான். அவன் உருவையும், வயதையும் கண்டு எல்லோரும் எள்ளி நகையாடினார்கள்.
எல்லோரும் நகைத்ததைக் கண்ட சிறுவன் அரசனை நோக்கி, "ஏன் சிரித்தீர்கள்? என் உருவைக் கண்டா? அல்லது சிறுவனா நமக்கு உபதேசம் செய்யப் போகிறான்? என்று என் வயதைக் கண்டா?" என்று கேட்டான். ஒருவரும் பதில் பேசவில்லை.
பின்னரும் அரசனை நோக்கி,"அரசே! ஏன் நகைத்தீர்? குயவனைப் பார்த்து நகைத்தீரா? அல்லது பாண்டத்தைப் பார்த்து நகைத்தீரா? என வினவினான்.அரசனுக்குக் குயவன் என்றால் யார்? பாண்டம் என்றால் எது? எனப் புரியவில்லை. சிந்தை மருண்ட மன்னனோ, உடனே சிறுவனை நோக்கி, "எனக்கு ஞான உபதேசம் செய்வித்து அருளல் வேண்டும்; தங்களின் சித்தம் என்னவோ அதுபோல் நான் நடக்கிறேன்" எனக் கேட்டுக் கொண்டான்.
அதற்கு, சிறியவன், "அரசே! நீ உனக்குச் சொந்தமாக எண்ணியிருப்பதை எனக்குத் தானம் செய்; பின்னர் உபதேசிக்கிறேன்" என்றான்.
அரசன் : கழுத்தில் கிடந்த விலையுயர்ந்த மணிமாலையயும் என் ஆபரணங்களையும் தந்துவிட்டேன் என்றான்.
சிறுவன் : "இவையெல்லாம் உன் பிள்ளைகளுக்குறியது. உனக்கல்ல. எனவே வேண்டாம் ."
அரசன் - "இந்த நாட்டையே தருகிறேன்."
சிறுவன் - "இந்த நாடு மக்களுக்குச் சொந்தம். இதுவும்வேண்டாம். உனக்கு உரிய, சொந்தமான பொருளை உணர்ந்து கொடு."
அரசன் - "என் உடல் எனக்குத்தன் சொந்தம். அதைத் தருகிறேன்."
சிறுவன் - "உன் உயிர் பிரிந்ததும், அது மண்ணுக்குச் சொந்தம். நீ தூங்கும்போது, உன் உடலின்மேல் ஒரு பாம்பு ஊர்ந்தாலும் உனக்குத் தெரிவதில்லையே? அப்படி இருக்க உனக்கு அது எப்படிச் சொந்தம்?"
இப்படியே ஒவ்வொன்றையும் சிறுவன் மறுத்துச் சொல்ல அரசனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள். தந்து விடுகிறேன் என்றான்.
"உன் மனம்தான் உனக்குச் சொந்தம். எல்லோர் முன்னிலையிலும் தானம் கொடு" என்றான் சிறுவன்.
அப்படியே தான சம்பிரதாயங்கள் முடிவடைய சிறுவன் வெளியில் புறப்பட்டான். அரசன் சிறுவனை நோக்கி, "குருவே! உபதேசம் செய்யாமல் செல்லுகிறீர்களே!" என வினவ அச் சிறுவன்,"அரசே! உன் மனதை எனக்குத் தானம் செய்தது உண்மையில்லை. இன்னும் உன் மனம் உன்னிடமே இருக்கிறது.எப்படி நான் உபதேசிக்காமல் செல்வதை நீ எப்படி உணர்ந்து கேட்டாய்?" என்றான்.
அரசன் திடுக்கிட்டு வணங்கி, "குருவே! உங்களின் ஆணைப்படியே நடக்கிறேன். இனி என் வயம் ஏதுமில்லை" என்றான்.
"சிறைப்பிடித்தவர்களை விடுதலை செய்க" என்றான் சிறுவன். அப்படியே நடந்தது. பின்னர் சிறுவன் உபதேசித்தான்.
என்ன உபதேசித்திருப்பான்?
"அரசே உருக்கண்டு எள்ளாமை வேண்டும். உன் உடலில் உயிர் உள்ளவரை உனக்கு உன் மனம் மட்டுமே சொந்தம். அதுவும் உணர்வு இருக்கும்போது மட்டுமே. தூங்கும்போது மனம் உனக்குச் சொந்தமல்ல. ஆகவே, உணர்வால் மனத்தை அடக்கு. எப்பொழுதும் நீ உன் உணர்விலேயே நில். அது உனக்கு இறைவனை அடைய வழிகாட்டும்."
இதுதான் நமக்கும் உபதேசம்.(உப+தேசம்)
Posted by ஞானவெட்டியான் at 4:55 PM 0 comments
Labels: ஞானமுத்துக்கள்
இந்த பொய்" யான உடலை ஏன் மெய்" என்று அழைக்கின்றோம்?
இந்த பொய்" யான உடலை ஏன் மெய்" என்று அழைக்கின்றோம்?
**************************************************************************
மெய் = மெய்யெழுத்து, உடல், உண்மை(உள்+மெய்)
இந்த உடலை(மெய்யாகவிருந்தும்)ஏன் பொய் என்கிறோம்?
உடல் அழியும். நிலையில்லாததால் மெய் பொய்யாகிறது.
ஆனால் மெய் (உடல்) , மெய்யே!
என்ன இது குழப்பம்என நினைக்கிறீர்களா?
"தேகமென்னுஞ் சிவாலய மாமதிற்
சென்னி சிறுவாயிற் கோபுரமாம்
காகமான விரண்டு கரக்கோடுங்
கையாங் கேளடி ஞானப் பெண்ணே." (ஞானக் கும்மி)
உடல் சிவாலயம்.ஏனெனில் சிவனாம் சீவன் இருப்பிடம்.
சென்னியாம் தலை சிறு வாயிலின் கோபுரமாம். இவ்வளவையும் தாங்கி நிற்பதால் மெய் மெய்யே.
அதன் நிலையற்றதன்மையை குறிக்குங்கால் அது பொய்.
<<<உடல் சிவாலயம்.>>>
இதே கருத்து விவிலியத்திலும் கூறப்பட்டிருக்கிறது. "நீங்களே தேவாலயமாக
இருக்கிறீர்கள்" என்று ஆண்டவர் மக்களை பார்த்து சொல்லுவார்.
~காந்தி ஜெகநாதன்~
அன்பு காந்தி,
எல்லா புனித நூல்களும் ஒன்றைத்தான் கூறுகின்றன. மனிதன்தான் மதம் பிடித்து மதத்தையும் உண்டாக்கி மனிதர்களின் மனத்தைக் கெடுத்து, தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்து, அடுத்தவர்களை அழித்து அதில் இன்பம் கண்டு இறுதியில் அவனும் சீர் அழிந்து இறக்கிறான்.
"நீங்களே தேவாலயமாக இருக்கிறீர்கள்" புனித விவிலியம்.
உடனே அடுத்த வினா உங்களிடமிருந்து வரவேண்டியது "அப்படியெனில் இயேசு பிரான் யார்?"
விடை: இந்த உடலாம் தேவாலயத்துக்குள் இருக்கும் உயிப்பு (மூச்சு)தான்
இயேசு பிரான். அது புனித ஆவி.
இவ்வாறாகத் தனக்குத்தானே வினாவெழுப்ப தனக்குள்ளேயே விடை கிடைக்கும்.
"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்"
அண்டம் = முட்டை, உலகம், பிரபஞ்சம்
இனி சிந்திக்க ஆரம்பியுங்கள்.
சிந்திக்க சிந்திக்க தெளிவு பிறக்கும். சித்தம் இனிக்கும்.
ஞானவெட்டியான்
******************
அன்பு நண்பர்களே,
இத்தகைய கருத்துக்கள் மதம் மற்றும் ஆன்மிகத்துக்கு இடையிலான வேறுபாட்டைச் சிந்திக்கச் செய்கின்றன.
மதங்கள் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவை. மனிதன் எப்போதுமே தான் செய்ததை உயர்ந்தது, அது மட்டுமே பின்பற்றத் தக்கது என்று அறிவிப்பவனாய்
இருக்கிறான். எனவேதான் மதநூல்கள்--அவை கடவுளால் தீர்க்கதரிசிகளின்
வாயிலாகச் சொல்லப்பட்டதாகச் சொன்னாலும்கூட--பலமுறை தமது மதத்தை
ஏற்காதவர்கள் மீது வன்முறையை ஏவுவதைப் பார்க்க முடிகிறது. நாம்
மதநூல்களின் நல்லவற்றை மட்டுமே பார்த்து எல்லா மதங்களும் அன்பைப்
போதிக்கின்றன என்று கிளிப்பிள்ளை போலச் சொல்லி வருகிறோம். அது உண்மையல்ல.
ஆனால், ஆன்மிகம் என்பது மதத்தைக் கடந்த நிலை. ஞானியர், யோகியர்,
சித்தர்கள் அடைந்த நிலை. அத்தகைய மேன்மக்களை எல்லா மதத்திலும் காணலாம்.
ஆனால் மதத்தின் வழியேதான் மதத்தைக் கடக்க வேண்டும். மதம் மனிதனை
ஆன்மிகத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
ஓர் விமானத்தில் ஏறவேண்டுமானால் அதற்குமுன்னால் நீங்கள் விமானநிலையப் பேருந்தில் ஏறி விமானத்தின் அருகே செல்கிறீர்கள். அந்தப் பேருந்து போன்றதுதான் மதம். அந்தப் பேருந்து பறக்காது. ஆனால் பறக்கின்ற
விமானத்துக்கு உங்களை இட்டுச் செல்லும்.
விமானம் போன்றது ஆன்மிகம். ஆனால் பலரும் பேருந்தே தம்மை வெளிநாட்டுக்கு (முக்தி, நிர்வாணம், விடுதலை) இட்டுச் செல்லும் என்று
நினைத்துவிடுகிறார்கள். மதமாகிய தமது பேருந்தை விட்டு இறங்க
மறுக்கிறார்கள். தனது பேருந்துதான் உயர்ந்தது என்று சச்சரவு
செய்கிறார்கள். அதற்காக ரத்த ஆறுகூட ஓடவிடுகிறார்கள்.
'மெய்ப்பொருள், அதனைச் சான்றோர் பல விதமாக அழைக்கிறார்கள்' (ஏகம் சத்,
விப்ரஹ பஹ¤தா வதந்தி) என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். 'தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்று
கூக்குரலிட்டார்கள். அதற்கு என்ன பொருள்? எல்லா நாட்டவரும் சிவ வழிபாடு
செய்கிறார்கள் என்றா? இல்லை, 'இங்கே நாங்கள் சிவனே! என்று அழைக்கிற
நீயேதான் பலநாடுகளில் பல பெயர்களில் வணங்கப்படுகிறாய்' என்பதுதான்
பொருள்.
எனவே உண்மையான உயர்வு வேண்டுகிறவன், தன் மதத்தை நம்ப வேண்டும். அதை அனுசரிக்க வேண்டும். பிற மதங்களை மதிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல, தவம் தியானம் ஆகிய பயிற்சிகளால் பெயரும் வடிவமும் கடந்த, மனதுக்கும் சொல்லுக்கும் அப்பால், சுத்த சத்தியமாக இருக்கின்ற மெய்ப்பொருளை உணரவேண்டும்.
அவனுக்கு அன்பு ஒன்றே மதம். வள்ளலாரும், ரமணரும், ராமகிருஷ்ண
பரமஹம்சரும், சித்தர் பெருமக்களும் நமக்கு விட்டுச் சென்ற வழி இதுவே.
அன்புடன்
மதுரபாரதி
Posted by ஞானவெட்டியான் at 4:53 PM 1 comments
Labels: ஞானமுத்துக்கள்